Press "Enter" to skip to content

பெய்ரூட் வெடிச்சம்பவம்: `அரசு அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் கொந்தளிப்பு

பட மூலாதாரம், Reuters

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடைபெற்ற வெடிப்புக்கு அரசாங்கத்தின் அலட்சியமே காரணம் என மக்கள் அரசாங்கத்தின் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பெய்ரூட் துறைமுகம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடந்த வெடிப்பில் இதுவரை குறைந்தது 137 பேர் பலியாகி உள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

துறைமுகம் அருகே இருந்த கிடங்கில் இருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டதாக லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் தெரிவித்தார்.

`நிலநடுக்கம் என்று நினைத்தோம்`

வெடிப்பு நடந்த துறைமுகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் மதுரையைச் சேர்ந்த அஜீஸ், “அவ்வளவுதான் எல்லாம் முடிந்துவிட்டது. வருவதை ஏற்றுக் கொள்வோம் என நினைத்தேன்,” என பிபிசி செய்தியாளர் நியாஸ் அகமதிடம் தெரிவித்தார்.

“நாங்கள் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டது, சுனாமி வந்துவிட்டது என்றுதான் நினைத்தோம். ஏற்கெனவே இங்கு சுனாமி ஏற்பட்டிருக்கிறது. வெடிப்பின் அதிர்வில் வீட்டின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன, சுவர்கள் சரிந்தன. வெடி சத்தத்தில் கொஞ்ச நேரத்திற்கு காதே கேட்கவில்லை,” என்கிறார் அஜீஸ்.

மேலும் வெடிப்பு நடந்த சமயத்தில் தனது வீட்டில் குளித்து கொண்டு இருந்திருக்கிறார் அஜீஸ்; குளியலறையில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கியதில் இவர் கண்ணில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

லெபனான்

வெடிப்பின் பாதிப்பு, 15 கி.மீட்டர் தூரம் அளவுக்கு இருந்ததாக கூறும் அஜீஸ், தான் பணியாற்றும் அலுவலகம் முழுவதுமாக சேதமடைந்துவிட்டதாக தெரிவித்தார்.

அதிகபட்ச தண்டனை

புதன்கிழமையன்று துறைமுக அதிகாரிகள் பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் உயர் பாதுகாப்பு கவுன்சில் இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்களுக்கு “அதிகபட்ச தண்டனை” வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் மனித உரிமை கண்காணிப்பக அமைப்புகள், இந்த வெடிப்பு தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளன.

இதற்கிடையே, பிரான்ஸ் பிரதமர் எமானுவேல் மக்ரோக் வியாழக்கிழமை சம்பவ இடத்துக்கு பயணம் மேற்கொண்டார். அவரை மக்கள் சூழ்ந்து கொண்டனர். லெபனான் பிரஞ்சு காலனி நாடாக லெபனான் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அமோனியம் நைட்ரேட் என்றால் என்ன?

அமோனியம் நைட்ரேட்டுக்கு பல்வேறு பயன்பாடுகள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் இது இரண்டு விஷயங்களுக்கு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. ஒன்று விவசாய உரம், மற்றொன்று வெடிபொருள்.

நெருப்புடன் தொடர்பு கொள்ளும்போது அமோனியம் நைட்ரேட் வெடிபொருளாக மாறுகிறது. அப்படி வெடிக்கும் போது நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் அமோனியா வாயு உள்ளிட்ட நச்சு வாயுக்களை இது வெளியிடும்.

எரிபொருளாக மாறும் தன்மை கொண்டதால் அமோனியம் நைட்ரேட்டை எவ்வாறு வைக்க வேண்டும் அல்லது சேமிக்க வேண்டும் என்பது குறித்து கடுமையான விதிகள் உள்ளன. அதில் முக்கியமானது அதனை சேமித்து வைக்கும் கிடங்கு தீப்பற்றிக் கொள்ளாத வகையில் இருக்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »