Press "Enter" to skip to content

தாலிபான்: குடும்பத்தைக் காப்பாற்ற ஏ.கே 47 துப்பாக்கி ஏந்திய சிறுமி

  • கவுன் காமுஷ்
  • பிபிசி பெர்சியன்

பட மூலாதாரம், கோர் மாகாண அரசு

கடந்த மாதம் தங்கள் வீடு தாக்கப்பட்ட போது, 15 வயதான நூரியா ஏ.கே. 47 ரக துப்பாக்கியை எடுத்து சுட்டதில் 2 ஆண்கள் பலியானார்கள். மூன்றாவது நபர் காயம் அடைந்தார்.

இதன் பிறகு ஒரு ஹீரோவாக அவர் பாராட்டப்பட்டார். ஆனால் அன்றைக்கு இரவு என்ன நடந்தது என்பது இன்னும் குழப்பமாக உள்ளது.

நூரியா தாலிபான், தாக்குதல்காரர்களை சுட்டாரா அல்லது தன் கணவரை சுட்டாரா அல்லது இருவரையும் சுட்டாரா?

பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்துப் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.

இரவில் அந்த ஆண்கள் கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள்.

இரவு சுமார் 1 மணி வாக்கில் தன் பெற்றோரின் வீட்டு முன் கதவை சிலர் துப்பாக்கியால் சுட்டு திறந்ததாக நூரியா தெரிவித்தார். அப்போது படுக்கை அறையில் இருந்த அவர், சப்தம் கேட்டு விழித்தார். அதிர்ச்சியில் அமைதியாக இருந்தார். தனது 12 வயது சகோதரன் அவனுடைய அறையில் தூங்கிக் கொண்டிருப்பதை நூரியா நினைத்துப் பார்த்தார்.

பிறகு தனது பெற்றோரை அவர்கள் சிறிய வீட்டுக்கு வெளியே அழைத்துச் செல்வதை உணர்ந்தார். அன்றிரவு நடந்த விஷயங்களை பிபிசிக்கு அளித்த பேட்டியில் நூரியா விவரித்தார்.

பிறகு துப்பாக்கி குண்டு சப்தங்கள் கேட்டதாக நூரியா கூறினார்.

“பெற்றோர்களை அவர்கள் கொன்றுவிட்டார்கள்” என்றார் அவர்.

கிராமப்புறத்தில் சிறிய கிராமத்தில் வளர்ந்தவர் நூரியா. அது ஆப்கானிஸ்தானில் மோதல்கள் அடிக்கடி நடக்கும் பகுதி. பெரும்பாலும் தயக்க குணம் கொண்டவராக, மென்மையாகப் பேசக் கூடியவராக நூரியா இருந்தார். ஆனால் துப்பாக்கிகளை கையாளவும், துல்லியமாக சுடுவதற்கும், தற்காப்பு விஷயமாக அவருடைய தந்தை கற்றுக் கொடுத்திருக்கிறார்.

அன்றைய நாள் இரவு, ஒளிந்து கொள்வதற்குப் பதிலாக, தனது தந்தையின் ஏ.கே. 47 துப்பாக்கியை எடுத்துச் சென்று, வெளியில் நின்றிருந்த ஆண்களை நோக்கி நூரியா சுட்டார். ஏறத்தாழ துப்பாக்கிக் குண்டுகள் காலியாகும் வரை சுட்டதாக அவர் தெரிவித்தார்.

அவர்கள் வந்து ஒரு மணி நேரம் கழித்து, அந்த ஆண்கள் இருளில் திரும்பிச் சென்றுவிட்டனர். வீட்டுக்கு வெளியே 5 சடலங்கள் கிடந்தன. தனது தாய், தந்தை, அருகில் வசித்து வந்த வயதான ஒருவர் மற்றும் தாக்குதலுக்கு வந்தவர்களில் 2 பேரின் உடல்கள் அதில் இருந்தன.

“அது கொடூரமானது. அவர்கள் மிகக் கொடூரமாக நடந்து கொண்டார்கள். என் தந்தை மாற்றுத்திறனாளி. தாயார் அப்பாவி. அவர்களை தாக்குதல் நபர்கள் கொன்றுவிட்டனர்” என்று நூரியா கூறினார்.

தன்னுடைய மாவட்டத்தில் இருந்து காபூலுக்கு பாதுகாப்பான ஒரு வீட்டுக்கு நூரியா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

ஆப்கானிஸ்தானில் வளரும் நூரியாவை போன்ற வளர் இளம்பருவத்தினருக்கு போரைத் தவிர வேறெதுவும் தெரியாது. அரசுக்கு ஆதரவான படையினருக்கும் தாலிபான்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்கள், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகின்றன.

பெருநகரங்கள் மற்றும் நகரங்களை அரசு ஆதரவுப் படைகள் கட்டுப்படுத்தி வருகின்றன. தொலைதூரப் பகுதிகள் பலவற்றை தாலிபான்கள் பிடித்து வைத்துள்ளனர். நூரியா இருந்ததைப் போன்ற கிராமங்களில் அடிக்கடி மோதல்கள் நடைபெறுவது வழக்கம்.

ஊரகப் பகுதிகளைக் கொண்ட கோர் மாகாணத்தில் அரசு ஆதரவுப் படையினரின் சோதனைச் சாவடிகளை தாலிபான் தீவிரவாதிகள் தாக்குவது சாதாரணமான நிகழ்வுதான். தங்கள் தந்தை மலைவாசி மக்களில் மூத்த தலைவராக இருந்ததாலும், அரசு ஆதரவு சமுதாயத் தலைவராக இருந்ததாலும் தாலிபான்கள் குறிவைத்தனர் என்று நூரியாவும், அவருடைய மூத்த சகோதரரும் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நடந்து பல வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், இந்தத் தாக்குதல் பற்றிய மற்றும் அந்தச் சூழ்நிலை குறித்த தகவல்கள், நூரியா மற்றும் அவருடைய அண்ணன், கொல்லப்பட்ட தாக்குதல் நபர்களின் குடும்பத்தினர், உள்ளூர் காவல் துறையினர், உள்ளூர் முதியவர்கள், தாலிபான் பிரதிநிதிகள், ஆப்கான் அரசுப் பிரதிநிதி ஆகியோர் கூறும் தகவல்கள் முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளன.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அன்றிரவு வந்தவர்களில் ஒருவர் நூரியாவின் கணவர் என்று பிபிசிக்கு பேட்டியளித்த பலரும் தெரிவித்தனர். தாலிபான் தீவிரவாதிகள் வந்ததாக சிறுமி கூறியிருப்பது எல்லாம், குடும்பப் பிரச்னை காரணமாக புனையப்பட்டவை என்று அவர்கள் கூறினர்.

நூரியாவுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை மறைப்பதாக மாறுபட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானின் ஊரகப் பகுதியில் உள்ள சோகமான யதார்த்த நிலையை அவர்கள் தெரிவிக்கின்றனர். இளம்பெண்கள் மலைவாழ் மக்கள் கலாச்சாரம், பாரம்பரிய சம்பிரதாயங்கள் மற்றும் குடும்ப ஆதிக்கம் ஆகியவற்றில் சிக்கிக் கொள்கிறார்கள். நூரியாவை போன்றவர்களுக்கு கொஞ்சம் அதிகாரம் உள்ளது, ஓரளவுக்குக் கல்வி வசதி உள்ளது, வன்முறையில் தொடர்புபடுத்தும்போது தங்கள் கட்டுப்பாட்டை செலுத்த முடியும் நிலை உள்ளது.

கோர் மாகாணத்தில் அரசு ராணுவத்தினர் பாதுாவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்

பட மூலாதாரம், Getty Images

அன்றைக்கு இரவு நடந்த விஷயங்கள் பற்றி தெரிவிக்கப்படும் தகவல்கள், வீட்டுக்கு வந்தவர்கள் கவலைப்படும் வகையில் அமைந்துள்ளன. ஒரு விஷயத்தை எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர். அன்றைய நாள் அதிகாலையில் கிராமத்தில் மோதல் நடந்தது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

வந்தவர்கள் தங்களை “முஜாஹிதீன்” தீவிரவாதிகள் (தாலிபான்கள் பயன்படுத்தும் வார்த்தை) என அடையாளப்படுத்திக் கொண்டு, தன் தந்தையை பார்க்க வந்ததாகக் கூறினர் என்று நூரியா தெரிவித்தார்.

வளர் இளம்பருவ பெண்ணுடன் மோதல் எதுவும் நடைபெறவில்லை என தாலிபான்கள் மறுத்துள்ளனர். ஆனால் அன்றைக்கு இரவு, அந்தக் கிராமத்தில் உள்ளூர் காவல் நிலைய சோதனைச் சாவடி மீது நடந்த தாக்குதலில் 2 தாலிபான்கள் உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்தனர். மக்கள் யாரும் சாகவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தாலிபான்களின் “பெரிய” தாக்குதலுக்கு எதிரான வெற்றி என்று இதை ஆப்கான் அரசு அதிகாரிகள் அறிவித்து நூரியாவை “உண்மையான ஹீரோ” என்று அறிவித்துள்ளனர்.

உடனடியாக நூரியாவையும், அவருடைய தம்பியையும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அவர்களுடைய மாவட்டத்தில் இருந்து வெளியேற்றி, பாதுகாப்பான ஒரு வீட்டுக்குக் கொண்டு சென்றனர். தற்காப்புக்காக இளம்பெண் துப்பாக்கி ஏந்தியது குறித்து சமூக ஊடகங்களில் செய்திகள் வேகமாகப் பரவின.

தாலிபான் தாக்குதல்களை முறியடிக்கும் பொது மக்களை ஆப்கான் அதிபர் பாராட்டுவது புதிய விஷயம் கிடையாது. ஆனால் நூரியாவை தலைநகர் காபூலுக்கு அதிபர் அஸ்ரப் கனி அழைத்துச் சென்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

ராணுவ ஹெலிகாப்டரில் ஏறும் நூரியாவும், அவரது இரு சகோதரர்களும்

பட மூலாதாரம், LOCAL AFGHAN AUTHORITIES

நூரியாவை ஹீரோ என ஒரு தரப்பார் கூறுகின்றனர். அந்தச் சிறுமி அப்பாவி என்றும், சண்டையிட்டுக் கொண்ட இரு தரப்பினருக்கு இடையில் சிக்கிக் கொண்ட நூரியாவை விளம்பரத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்று இன்னொரு தரப்பாரும் கூறுகின்றனர்.

“இவ்வளவு மரணங்கள் மற்றும் வன்முறைகளை பார்த்திருக்கும் மக்களால், அமைதியின் மதிப்பை எப்படி உணர முடியும், வன்முறையை எப்படி மேன்மைப்படுத்தி ஆயுதங்கள் ஏந்துவதைப் புகழ முடியும்” என்று ட்விட்டர் பயனாளர் ஒருவர் கூறியுள்ளார். “வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது!” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆப்கான் பெண்களின் ஒரு அடையாளச் சின்னம்” என்று நூரியாவை இன்னொருவர் கூறியுள்ளார்.

“ஆப்கானில் பாதிக்கப்படும் பலரால் எதுவும் செய்ய முடியாமல் போகிறது. தாலிபான்களின் புனிதமான சண்டையில் ஏற்பட்டுள்ள வலிகளில் அவர்கள் துன்புற்று வருகிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடந்த இடத்தில் மறுநாள் உள்ளூர் காவல் துறையினர் ஆய்வு செய்தபோது, இறந்து போன இரு ஆண்களின் உடல்களில் அடையாள அட்டைகளை எடுத்தனர். அவர்கள் இருவரும் தாலிபான் ஆதரவாளர்கள் என்று அறியப்பட்டவர்கள் என்று அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

காயம் அடைந்து தப்பிய இன்னொருவர், அந்த அமைப்பில் உயர் பொறுப்பில் இருந்த சய்யீத் மாஸ்ஸோம் கம்ரான் என்று தெரிய வந்திருப்பதாக காவல் துறையினர் குறிப்பிடுகின்றனர்.

ஆப்கானின் பாரம்பரிய உடை அணிந்த நிலையில், இறந்து கிடந்த இருவரின் அடையாளங்களை பிபிசி தனிப்பட்ட முறையில் உறுதி செய்தது. 30 வயதை நெருங்கும் நிலையில் இருந்த அவர்கள் தளர்வான பேண்ட்கள், வண்ணங்கள் நிறைந்த மேல் சட்டை அணிந்திருந்தனர். அவை ரத்தத்தில் ஊறிப் போயிருந்தன.

அதிகாரிகள் குறிப்பிடக் கூடிய தாலிபான் இயக்கத்தவர் காயம் அடைந்திருப்பது உண்மைதான் என தாலிபான்களுக்கு நெருக்கமான தகவல்கள் உறுதிப் படுத்துகின்றன. ஆனால் எங்கே, எப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது என்று தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

அந்த இடத்தில் இருந்த ஆண்களில் ஒருவர் தெற்கு ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட்டில் தங்கள் படைகளுடன் பல ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டவர் என்பதையும் தாலிபான்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நூரியாவின் வீட்டுக்கு வெளியே நபர்கள் கொல்லப்பட்ட இடம்

அதிபரின் ஏற்பாட்டின்படி நூரியாவும், அவருடைய 12 வயது சகோதரரும் தலைநகருக்குச் சென்றுள்ள நிலையில், அவர்களுடைய பெற்றோரின் கொலை சம்பரம் துயரமானதாகக் கருதப்படுகிறது.

தாக்குதல் நடந்து ஒரு வாரம் கழித்து, கொல்லப்பட்ட ஆண்களில் ஒருவர், அறிமுகம் இல்லாதவர் கிடையாது என்றும், அவர் நூரியாவின் கணவர் என்றும் செய்திகள் பரவின.

மனைவி நூரியாவை அழைத்துச் செல்வதற்காக அவருடைய கணவர் ரஹீம் அன்றிரவு கிராமத்துக்கு வந்தார் என்று குடும்பத்தினரும், உள்ளூர் மக்களும் பிபிசியிடம் தெரிவித்தனர். குடும்பத் தகராறு காரணமாக நூரியா தன் பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தால் என்று கூறப்படுகிறது. தாலிபான் தீவிரவாதிகளுடன் சேர்ந்து ரஹீம் வந்திருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்றிரவு கொல்லப்பட்டவர்களில் ஒருவர் தான் இந்த ரஹீம் என்று அவர்கள் அடையாளம் காட்டினர்.

தங்களுக்குத் திருமணம் எதுவும் நடக்கவில்லை என்று நூரியா மறுக்கிறார்.

இரண்டு குடும்பங்களுக்கு இடையே இரண்டு பெண் உறவினர்களை மணம் செய்து கொடுத்து மாற்றிக் கொள்ளும் ஒப்பந்தத்தில் நூரியா இருந்தார் என்று மற்றவர்கள் கூறினர்.

நூரியாவை ரஹீம் தனது இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொள்வது என்றும், ரஹீமின் ஒன்றுவிட்ட சகோதரியை நூரியின் தந்தை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொள்வது என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாக அவர்கள் கூறினர். ஆனால் இரண்டு பெண்களுமே சிறு வயதினராக இருப்பதால், திருமணம் செய்து கொள்ள சில ஆண்டுகள் காத்திருக்க இருவருமே ஒப்புக்கொண்டிருந்தார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தானில் கிராமப் பகுதியில் இதுபோன்ற தகவல்களை உறுதிப்படுத்துவது எளிதான விஷயம் அல்ல. நூரியா வாழ்ந்த கிராமம், உயரமான மலைகளுக்கு நடுவே பரந்த விளைநிலங்களுக்கு மத்தியில் இருந்தது. செல்போன் சிக்னல் கிடைக்க வேண்டும் என்றால் கூட, அருகில் உள்ள குன்றின் மீது ஏறியாக வேண்டும்.

ரஹீம் தான் நூரியாவின் கணவரா என்பதை உறுதி செய்ய ரஹீமின் தாயார் ஷாபிக்குவாவை பிபிசி தொடர்பு கொண்டது. அவர் தென் மேற்கு ஆப்கானிஸ்தானில் நிம்ருஜ் மாகாணத்தில், தன் மகனின் முதலாவது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தொலைபேசி மூலம் நம்மிடம் பேசிய அவர், பெண்களை மாற்றிக் கொள்வது என்ற ஒப்பந்தத்தின்படி 3 ஆண்டுகளுக்கு முன்பு நூரியாவை ரஹீம் திருமணம் செய்து கொண்டார் என்று உறுதி செய்தார். ரஹீமின் ஒன்றுவிட்ட சகோதரியை நூரியின் தந்தை திருமணம் செய்து கொண்டதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஹீம் ஹெல்மாண்ட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, நூரியாவின் தந்தை திடீரென வந்து ரஹீமின் ஒன்றுவிட்ட சகோதரியை விட்டுவிட்டு, தன் மகளை அழைத்துச் சென்றுவிட்டார் என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் பெண்களை மாற்றிக் கொள்ளும் செயல்பாடு கைவிடப்பட்டதாகக் கருதப்பட்டது.

தலைநகர் காபூலில் சூரிய அஸ்தமனம்

இந்தப் பிரச்னையை தீர்த்து வைக்குமாறு பெரியவர்களை தாங்கள் கேட்டுக் கொண்டதாக ஷாபிக்குவா தெரிவித்தார். ஆனால் ஏழையாக இருந்த காரணத்தால் நூரியாவின் தந்தையை தங்களால் தடுக்க முடியாமல் போய்விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் நடந்த நாளன்று இரவு நூரியாவின் வீட்டுக்கு ரஹீம் சென்றதை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் அவரைக் கொலை செய்யும் எண்ணத்துடன் செல்லவில்லை என்றும் குறிப்பிட்டார்.

“அவர்கள் பலம் வாய்ந்தவர்கள். நாங்கள் ஏழைகள். நள்ளிரவுக்குப் பிறகு அவர்கள் அங்கு செல்லவில்லை. மாலையில் சென்று, நூரியாவின் தந்தையை அழைத்து தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள பேசினர். விவாகரத்து பற்றியும்கூட பேசினார்கள்” என்றும் அவர் கூறினார்.

தன்னுடைய மகன் தாலிபான் தீவிரவாதி அல்ல என்று அவர் மறுத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நூரியாவை திருமணம் செய்வதற்குச் செல்வதற்கு முன்பு ஹெல்மாண்ட்டில் தங்கள் குழுவில் சேர்ந்து ரஹீம் பணியாற்றியதாக தாலிபான் படையினர் தெரிவித்த காலகட்டமும், ஹெல்மாண்ட்டில் ரஹீம் வேலை பார்த்ததாக அவருடைய தாயார் குறிப்பிடும் காலக்கட்டமும் ஒன்றாக இருக்கின்றன.

“என் மகன் தாலிபான் தீவிரவாதி கிடையாது. அவன் கட்டுமான வேலையில் இருந்தான். தன் வாழ்நாளில் அவன் ஒருபோதும் துப்பாக்கியைத் தொட்டது கிடையாது. நாங்கள் ஏழைகள். எங்கள் வார்த்தைகளை யாரும் கேட்பது கிடையாது” என்று அவர் கூறினார்.

நிம்ருஜில் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு தற்கொலைப் படை தாக்குதலில் காவல் துறை அதிகாரியாக இருந்த தனது மகன், ரஹீமின் சகோதரன் உயிரிழந்ததை ஷாபிக்குவா நினைவுகூர்ந்தார். இப்போது குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர்கள் யாரும் இல்லை. தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத வன்முறைகளில் சிக்கி, துயரத்துக்கு ஆளாகியிருக்கும் இன்னொரு ஆப்கானிஸ்தான் பெண்ணாக அவர் மாறியுள்ளார்.

தாக்குதல் நடந்த இரவிற்கு அடுத்த நாள் சூரிய உதயத்திற்குப் பிறகு, இறந்தவர்களின் உடல்களை நூரியாவும், அருகில் வசித்தவர்களும் சேர்ந்து புதைத்துவிட்டனர்.

நூரியாவுக்கும் ரஹீமுக்கும் திருமணம் எதுவும் நடக்கவில்லை என்று காவல் துறையினரும், ஊர் தலைவர்களும், ஆப்கான் மத்திய அதிகாரிகளும் கூறுகின்றனர். அன்றைக்கு நூரியின் தந்தையை குறிவைத்து தான் தாலிபான்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அன்றிரவு என்ன நடந்தது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். நூரியாவுக்கும், அன்றைய தாக்குதலில் உயிர்பிழைத்த அவருடைய தம்பிக்கும் இவை தெரியும். முழுமையான உண்மைகள் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மோதல் நடந்ததற்கு மறுநாள் காலையில், நூரியாவும் அருகில் வசித்தவர்களும் சேர்ந்து, வீட்டுக்கு அருகே தற்காலிக கல்லறைகளில் நூரியாவின் பெற்றோரின் உடல்களைப் புதைத்தனர். உடல்களை அவர்கள் அடக்கம் செய்து கொண்டிருந்த நேரத்தில் தான் அரசுக்கும் தாலிபான்களுக்கும் இடையிலான முதலாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைக்கு ஆப்கான் தயாராகிக் கொண்டிருந்தது.

ஆப்கானிஸ்தானில் மாறுபட்ட வாழ்க்கைக்கான நம்பிக்கையை உருவாக்கும் வகையில் பேச்சுகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தியர்கள் இன்னும் கொல்லப்படுகின்றனர். பலரும் அப்பாவிப் பெண்கள் மற்றும் குழந்தைகளாக உள்ளனர். நூரியாவை போல, கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரமும், செல்வாக்கும் உள்ளவர்கள் தங்களை உடல் ரீதியிலும், உணர்வு ரீதியிலும் பாதுகாத்துக் கொள்ள, தங்களுக்குத் தெரிந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

14 ஆகஸ்ட், 2020, பிற்பகல் 3:02 IST

அதிக தகவலைப்பார்க்க ஸ்க்ரோல் செய்யவும்

முழுமையாக பார்க்க ப்ரௌசரை அப்டேட் செய்யுங்கள்

தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. ஆனால் நாட்டின் தற்போதைய மொத்த எண்ணிக்கையில் தெரியாமல் இருக்கலாம்

**புதிய தொற்றுகளுக்கான முந்தைய தரவுகள் 3 நாட்களின் சராசரி. எண்ணிக்கை தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதால், தற்போதைய தேதிக்கான சராசரியை கணக்கிட இயலவில்லை.

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவேற்றியது : 14 ஆகஸ்ட், 2020, பிற்பகல் 3:02 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »