Press "Enter" to skip to content

கிரேட்டா துன்பெர்க்: “JEE-NEET தேர்வை தள்ளிவைக்கும் கோரிக்கைக்கு துணை நிற்பேன்”

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று நிலவும் காலத்தில் பொறியியல் நுழைவுத் தேர்வு ஜேஇஇ மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்படாமல் தள்ளிவைக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக துணை நிற்பேன் என்று பருவநிலை மாற்றத்துக்கு எதிரான சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தமது டிவிட்டர் பதிவில் “கொரோனா பெருந்தொற்று மற்றும் பல இடங்களில் கடுமையான வெள்ளத்தின் தாக்கத்தை லட்சக்கணக்கானோர் அனுபவித்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள மாணவர்கள் தேசிய தேர்வுகளில் எழுத கேட்டுக் கொள்ளப்படுவது நியாயமல்ல என்றும் தேர்வைத் தள்ளி வைக்கக் கோரும் அவர்களுக்கு நான் துணை நிற்பேன் என்றும் கூறியுள்ளார்.

தமது டிவிட்டர் பக்கத்தில் #PostponeJEE_NEETinCOVID என்ற ஹேஷ்டேக்குகளை கிரேட்டா பயன்படுத்தியிருக்கிறார். அவரது டிவிட்டர் பதிவை செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி நிலவரப்படி 48.2 ஆயிரம் பேர் ரீ-டிவீட் செய்துள்ளனர். 76 ஆயிரம் பேர் லைக் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, நாட்டின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு JEE மற்றும் நீட் தேர்வுகளை இந்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்று பிரபல பாலிவுட் நடிகரான  சோனு சூட் கோரிக்கை விடுத்துள்ளார். 

கொரோனா நெருக்கடியில் நாம் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் மாணவர்களின் உயிரை கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாநிலங்கள் கோரிக்கை

இந்தியாவில் கொரானா மற்றும் பெருவெள்ளத்தின் பாதிப்புகளை எதிர்கொண்ட மாநிலங்களில் அஸ்ஸாம், பிஹார், குஜராத், சத்தீஸ்கர், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிஷா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்த மாநிலங்கள், ஏற்கெனவே நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. தமிழ்நாட்டிலும் நீட் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று பரவலாக அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில், ஐஐடி மற்றும் நீட் தேர்வுகளை செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தேர்வுத் தேதியை நீட்டிக்க உத்தரவிடக்கோரி 11 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால், ‘தேர்வுத்தேதியை தள்ளிவைப்பதால் வாழ்க்கை முடிந்து விடாதுஎன்று கூறி அந்த அளித்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீட் மாணவர்கள்

திட்டமிட்டபடி தேர்வு

இதே நிலைப்பாட்டைத்தான் இந்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலும் கொண்டிருக்கிறார். ஐஐடி, நீட் தேர்வுகள் எக்காரணத்தைக் கொண்டும் தள்ளிவைக்கப்படாமல் செப்டம்பர் மாதத்திலேயே நடைபெறும் என்று அவர் கூறியிருக்கிறார்.

இதன்படி வரும் செப்டம்பர் 1 முதல் 6 வரை ஜேஇஇ தேர்வும், நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதியும் நடத்தப்படவுள்ளன.

இந்தியாவில் ஐஐடி தேர்வை எதிர்கொள்ள 11 லட்சம் மாணவர்களும், நீட் தேர்வை எழுத 16 லட்சம் மாணவர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக, ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளின் தேதிகள் ஏற்கெனவே ஒரு முறை மாற்றப்பட்டுள்ளன.

அரசு வழிகாட்டுதல்களின்படி இந்த ஆண்டு ஐஐடி தேர்வுக்காக 600 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்பு இந்த எண்ணிக்கை 450 ஆக இருந்தது. அதேபோல், இந்த முறை நீட் தேர்வுக்கு சுமார் 4000 மையங்கள் உள்ளன. முன்பு அந்த எண்ணிக்கை, 2500 ஆக இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »