Press "Enter" to skip to content

டொனால்டு டிரம்பை இந்தியில் திட்டிய அமெரிக்கதொலைக்காட்சிபிரபலம் – என்ன சொல்?

டாமி லேரன் எனும் அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் அதிபர் டொனால்டு டிரம்பை பாராட்டுவதாக நினைத்துக்கொண்டு இந்தியில் அவரை இகழ்ச்சியாக பேசியுள்ளார்.

“அதிபர் டிரம்ப் ஓர் ஆந்தையைப் போல அறிவுக்கூர்மை மிக்கவர்; இந்தியில் ‘உள்ளூ’வை போன்று அறிவுக்கூர்மை மிக்கவர் என்று சொல்வார்களே அதைப்போல,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியில் ‘உள்ளூ’ என்றால் ஆந்தை என்று பொருள்.

எனினும் ஒருவரை முட்டாள் என்றோ அறிவுக்கூர்மை இல்லாதவர் என்றோ இகழ்ச்சியாக மற்றும் கேலியாக கூறுவதற்காகவே ‘உள்ளூ’ எனும் சொல் பொதுவாக பயன்படுத்தப்படும்.

டாமி லேரன் பேசும் அந்தக் காணொளி வட இந்திய சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது.

இந்து மதப் புராணங்களின்படி ஆந்தை பெண் கடவுளான லட்சுமியின் வாகனமாகக் கருதப்படுகிறது.

அது புனித தனித்தன்மையுடன் தொடர்புடையது என்று பலர் கருதுகிறார்கள்.

எனினும், இந்தியில் பேச்சுவழக்கில் முட்டாள்த்தனத்துடன் தொடர்பு படுத்தப்படுவதாக ஆந்தை என்னும் சொல் இருந்து வருகிறது.

பழமைவாத சார்புடைய அரசியல் விமர்சகரான டாமி லேரன் 2016ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் இணையம் மூலம் தெரிவித்த ஒருவரிக் கருத்துகளால் பிரபலமானார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்

அவருக்கு பல லட்சம் சமூக ஊடகப் பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள்.

அதிபரின் ஆதரவாளரான அவர் டிரம்ப் முன்னெடுத்துள்ள ‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ பிரசாரத்துக்கு இந்திய வம்சாவளியினர் தெரிவித்துவரும் ஆதரவுக்கும் அக்காணொளியில் நன்றி தெரிவித்தார்.

தாம் டிரம்பை பாராட்டிப் பேசியது உண்மையில் நகைப்புக்குரியது என்று தெரிந்த பின்னர் சமூக ஊடகங்களின் இருந்து அந்தக் காணொளியை அவர் நீக்கிவிட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியினரின் ஆதரவை பெறும் நோக்கிலேயே அவர் அந்த காணொளியை வெளியிட்டார் என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவில் சுமார் 45 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர்.

அவர்கள் பெரும்பாலும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் என்று கருதப்படுகிறது.

2016ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்புக்கு 16 சதவிகித இந்திய அமெரிக்கர்கள் மட்டுமே வாக்களித்தனர் என்று தேசிய ஆசிய அமெரிக்க கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

இந்திய வம்சாவளியினரைக் கவரும் நோக்கில் பிரதமர் மோதியுடன், டிரம்ப் கலந்துகொண்ட ஹூஸ்டனில் நடந்த ‘ஹௌடி மோடி!’ நிகழ்ச்சி மற்றும் டிரம்பின் இந்திய வருகையின்போது அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஆகியவற்றின் காட்சிகளை உள்ளடக்கிய விளம்பரப் படம் ஒன்றை டிரம்ப் தரப்பு சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »