Press "Enter" to skip to content

சௌதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பதவி நீக்கம் – ஊழல் புகார் காரணமா?

பட மூலாதாரம், reuters

சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்பட அந்நாட்டின் முக்கிய பதவிகள் வகித்து வந்த பலரும் தங்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஏமனில் சண்டையிட்டு வரும் சௌதி தலைமையிலான கூட்டுப் படைகளின் கமாண்டராக இருந்த இளவரசர் ஃபகாத் பின் துர்க்கி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என மன்னர் சல்மான் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை ஆளுநராக இருந்த அவரது மகன் அப்துல்லாசீஸ் பின் ஃபகாத்தும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சௌதி பாதுகாப்பு அமைச்சகத்தில் சந்தேகத்திற்கு இடமான நிதிப் பரிவர்த்தனை தொடர்பாக வேறு நான்கு அதிகாரிகளுடன் இவர்கள் இருவரும் விசாரணையை எதிர்கொண்டு உள்ளதாக சௌதி மன்னரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சௌதி மன்னராக சல்மான் இருந்தாலும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானே சௌதி அரேபியாவின் உண்மையான ஆட்சியாளராகக் கருதப்படுகிறார்.

சௌதி அரேபிய அரசில் நிலவும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக அவர் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எனினும் இளவரசர் அரச அதிகாரத்தில் தனது பிடியை இறுக்கிக் கொள்வதற்காகவே உயர்மட்ட அளவிலான கைதுகள் நிகழ்த்தப்படுகின்றன என்று அவரது விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

சௌதி மன்னரின் இளைய சகோதரர் இளவரசர் அகமது பின் அப்துல்லாசீஸ் மற்றும் முன்னாள் பட்டத்து இளவரசர் முகமது பின் நயீஃப் உள்ளிட்ட அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர் என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் செய்தி வெளியிட்டது.

சௌதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பதவி நீக்கம் - ஊழல் புகார் காரணமா?

பட மூலாதாரம், Getty Images

2017ஆம் ஆண்டு சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சில அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோர் தலைநகர் ரியாத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. பின்னர், அவர்களில் பெரும்பாலானவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் அதற்கு முன்பு சௌதி அரசுக்கு அவர்கள் 106.7 பில்லியன் அமெரிக்க டாலர் பிணைத் தொகையை வழங்கினர்.

மிகவும் பழமைவாத நாடான சௌதிக்கு, 2016ஆம் ஆண்டு பட்டத்து இளவரசரான பின்பு தாம் மேற்கொண்டு வரும் பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்கள் மூலம் 35 வயதாகும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றார்.

எனினும், அவர் மீது அடுத்தடுத்து பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

2018இல் துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் இருக்கும் சௌதி துணைத் தூதரகத்தில் சௌதி அரேபியாவில் இருந்து வெளியேறி வாழ்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது, கனடாவில் வசித்து வரும் சௌதியின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவரை கொல்ல திட்டமிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு ஆகியவையும் அதில் அடக்கம்.

ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஏமன் அரசு சௌதி அரேபியாவின் ஆதரவுடன் போரிட்டு வருகிறது.

ஏமனில் போர் தொடர்வதற்கு இவரும் ஒரு காரணம் என்ற விமர்சனமும் உள்ளது.

பெண்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாகவும் முகமது பின் சல்மான் மீது குற்றச்சாட்டு உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »