Press "Enter" to skip to content

ஹாங்காங் போராட்டம்: 12 வயது சிறுமியை கீழே தள்ளும் காவல்துறை – மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

பட மூலாதாரம், HKUST RADIO NEWS REPORTING TEAM VIA REUTERS

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு போராட்டங்களில் பங்கெடுத்தவர் என்று கூறி 12 வயது சிறுமியை தரையில் தள்ளி கைது செய்ய காவல்துறையினர் முற்படும் காட்சிகள், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சட்டவிரோதமாக கூடிய கும்பலில் அந்த சிறுமி இருந்ததாகவும், சம்பவ பகுதியில் இருந்து சந்தேகத்துக்கு இடமான வகையில் தப்பி ஓட முயன்றதால் குறைவான பலப்பிரயோகத்தை கையாண்டதாகவும் காவல்துறை கூறுகிறது.

ஆனால், பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்க வெளியே சென்ற தங்களின் மகள், காவல்துறையினரின் கூட்டத்தை பார்த்ததும் பயந்து ஓடியதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட சுமார் 300 பேர் கூடினார்கள்.

ஹாங்காங்கில் பேரவைத் தேர்தலை ஓராண்டுவரை தள்ளிவைக்க அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் இந்த நடவடிக்கை அவசியம் என்று அரசு கூறியபோதும், வாக்குரிமை செலுத்த விடாமல் மக்களைத் தடுக்க இந்த வைரஸ் பெருந்தொற்றை அரசு பயன்படுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

ஹாங்காங்

பட மூலாதாரம், EPA

காணொளியில் என்ன இருந்தது?

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பதிவு செய்யப்பட்ட காணொளியில், இரண்டு காவல்துறையினர் மோங் காக் என்ற பகுதியில் இருந்த சிறுமியை நோக்கி வந்து, அவரை அசையாமல் நிற்குமாறு கூறுகின்றனர்.

அப்போது அந்த சிறுமி தப்பி ஓட முயன்றபோது, தனது கைத்தடியால் அந்த சிறுமியை ஒரு காவலர் அடிக்கிறார். அப்போது மற்றொரு காவலர், அந்த சிறுமியை பிடித்துக்கீழே தள்ளி தப்பி ஓட முடியாதவாறு நசுக்கிப்பிடிப்பதாக காட்சியில் உள்ளது.

இதைத்தொடர்ந்து அந்த சிறுமியையும் அவருக்கு அருகே இருந்த அவரது சகோதரரையும் காவல்துறையினர் பிடித்திருக்க, அந்த பகுதிக்கு மேலதிக கலவர தடுப்பு காவல்துறையினர் வருகிறார்கள். இந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த செய்தியாளர்கள், பொதுமக்களை அங்கு கூடியிருந்த காவல்துறையினர் பின்னோக்கிச் செல்லுமாறு கூறுகின்றனர்.

இதற்கிடையே, உள்ளூர் ஊடகத்தில் அந்த சிறுமியும், அவரது சகோதரரும் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் சமூக இடைவெளி விதிகளை மீறியதாகக் கூறி அபராதம் விதிக்கும் நோட்டீஸை காவல்துறையினர் வழங்கியதாகவும் உள்ளூர் ஊடக செய்தி கூறுகிறது.

சிறுமி என்ன கூறுகிறார்?

உள்ளூர் ஊடகமான ஐ-கேபிள் நியூஸிடம் அந்த சிறுமி பேசும்போது, “பள்ளிக்கு தேவையான பொருட்களை நான் வாங்கச்சென்றேன். வீதி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள். சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் மீண்டும் வீட்டுக்குத் திரும்ப முடிவெடுத்தேன். அப்போது காவல்துறையினர் எங்களை நோக்கி வேகமாக வந்தார்கள். ஒருவர் அப்படியே நில் என்று கூறினார். ஆனால், பதற்றத்தில் நான் ஓட்டமெடுத்தபோது பிடித்து விட்டனர்” என்று கூறியுள்ளார்.

ஹாங்காவல்துறை விளக்கம் என்ன?

மோங் காக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திரண்டவர்களை காவல்துறையினர் பிடித்துக் கொண்டிருந்தபோது சிலர் அங்கிருந்து வெளியேற மறுத்தனர். அந்த சிறுமி சந்தேகத்துக்கு இடமான வகையில் திடீரென தப்பி ஓட முயன்றதால் அவரை விரட்டிப்பிடிக்கும் நிலை ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனை செய்ய வேண்டும் என்பதற்காகவே அவரை நிறுத்தினோம். விசாரணையில் போராட்டக்காரர்கள் இருந்த பகுதிக்கு அவர் வந்ததும், கொரோனா சமூக இடைவெளி விதிகளை அவர்கள் மீறியதும் தெரிய வந்ததால், அபராதம் செலுத்துவதற்கான நோட்டீஸ் வழங்கியிருக்கிறோம் என்ரு காவல்துறை தெரிவித்தது.

ஹங்காங்கில் போராட்டம் தொடருவது ஏன்?

ஹாங்காங்கில் கடந்த ஆண்டு முதலே அரசுக்கு எதிராக பல மாதங்களாக போராட்டங்கள் நடந்தன. ஹாங்காங்கில் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களை சீன பெருநிலப்பகுதி அரசிடம் ஒப்படைக்க வகை செய்யும் சட்டத்தை சீன அரசு உத்தேசித்தது. அதைக் கண்டித்து ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளர்கள் லட்சக்கணக்கில் திரண்டு மாதக்கணக்கில் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். அவர்களை ஒடுக்க காவல்துறையினர் கடுமையான பலப்பிரயோகத்தை கையாண்டது.

அந்த போராட்டங்கள் தொடர்பாக 12 முதல் 15 வயது வரையிலான சிறார்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »