Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்: ஆக்ஸ்ஃபோர்டு – ஆஸ்ட்ராசெனிகா அறிவிப்பு

பட மூலாதாரம், NICOLAS ASFOURI / Getty

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதே இதற்கு காரணம்.

“விவரிக்க முடியாத அளவிற்கான உடல்நலக்குறைவு” ஏற்பட்டதால் பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டதாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி பரிசோதனை முன்னேற்றங்களை உலகம் கூர்ந்து கவனித்துவரும் நிலையில், ஆஸ்ட்ராசெனிகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த இந்த தடுப்பூசி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சந்தைக்கு வரக்கூடிய முதல் கொரோனா தடுப்பூசி இதுவாக இருக்கலாம் என கருதப்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டதில், அமெரிக்காவில் சுமார் 30,000 பேர், அதோடு பிரிட்டன், பிரேசில், மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் மக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை என்பது பொதுவாக பல ஆண்டு காலம் ஆயிரக்கணக்கான பேர் மீது செய்யப்படும்.

இந்த தடுப்பூசியை உருவாக்கியவர்கள் கூறுவது என்ன?

இந்த தடுப்பூசியை உருவாக்கியவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Reuters

சர்வதேச அளவில் இந்த தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை மீண்டும் தொடங்கலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்னால், தனிப்பட்ட விசாரணை மூலம் இது தொடர்பான பாதுகாப்பு தரவுகள் ஆய்வு செய்யப்படும் என்கிறார் பிபிசியின் மருத்துவ ஆசிரியர் பெர்குஸ் வால்ஷ்.

“பெரிய அளவில் பரிசோதனை நடத்தப்படும்போது, தற்செயலாக இவ்வாறு உடல்நலக்குறைவு ஏற்படலாம். ஆனால், அதனை கவனமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய வேண்டும்” என்று ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்படுவது இது இரண்டாவது முறை என்று பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

பெரிய அளவில் பரிசோதனை செய்யப்படும்போது இது நடக்கக்கூடிய ஒன்றுதான் என்றும், பரிசோதனை செய்யப்படும் நபருக்கு உடனடியாக எந்த உடல்நலக்குறைவு ஏற்படாமல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது எந்நேரத்திலும் நடக்கலாம்.

எனினும் இன்னும் சில நாட்களில் பரிசோதனை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை முதல்முறையாக வெளியிட்ட ஸ்டாட் நியூஸ் என்ற சுகாதார வலைதளம் கூறுகையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட பிரிட்டன் நபர் ஒருவருக்கு பாதகமான விளைவு எப்படி ஏற்பட்டது என்று உடனடியாக தெரியவரவில்லை என்றும், ஆனால் அவர் அதில் இருந்து மீண்டு வருவார் என்று தகவல்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.

தடுப்பூசி பரிசோதனை உலகளவில் எந்த நிலையில் இருக்கிறது?

நவம்பர் மூன்றாம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் கூறுகிறார். ஆனால், அரசியலுக்காக அவசர அவசரமாக தடுப்பூசி கண்டுபிடிப்பது என்ற விஷயம் பல தரப்பினருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிப்பதில் அறிவியல்பூர்வமான தரநிலை மற்றும் நெறிமுறைகள் கடைபிடிப்போம் என “வரலாற்று உறுதிமொழி” ஒன்றை ஒன்பது தடுப்பூசி தயாரிப்பாளர்கள் குழுவினர் செவ்வாய்கிழமை அன்று எடுத்துள்ளனர்.

இதில் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனமும் ஒன்று.

மூன்று கட்ட முறையான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே ஒழுங்காற்று ஆணையத்தின் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்படும் என்ற உறுதிமொழியை அந்நிறுவனம் எடுத்துள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன், பையோ என் டெக், கிளாக்ஸோஸ்மித் க்ளைன், Pfizer, மெர்க், மாடர்னா, சனோஃபி, மற்றம் நோவாநாக்ஸ் நிறுவனங்களும் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

“தடுப்பூசி பரிசோதனை செய்யப்படும் நபர்களின் பாதுகாப்புக்கே முதல் முன்னுரிமை அளிக்கப்படும்” என்று அவர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.

உலகளவில் சுமார் 180 தடுப்பூசி தயாரிப்பாளர்கள், தங்கள் தடுப்பூசியை பரிசோதனை செய்துவருவதாகவும், ஆனால், இதில் யாரும் இன்னும் மருத்துவ பரிசோதனை கட்டத்தை முடிக்கவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

தடுப்பூசியை பாதுகாப்பாக பரிசோதிக்க அதிக காலம் எடுக்கும் என்பதால், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல் அனைத்தையும் பூர்த்தி செய்யும் ஒரு தடுப்பூசி இந்தாண்டு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆக்ஸ்ஃபர்ட் - ஆஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்

பட மூலாதாரம், NICOLAS ASFOURI / Getty

இந்நிலையில், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை செலுத்த தொடங்கிவிட்டன. ஆனால், இந்த தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனை நிலையில் இருப்பதாகவே உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

மறுபக்கம், மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை முடிக்கும் முன்பே கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான அனுமதி வழங்கலாம் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

மேலும், நவம்பர் ஒன்றாம் தேதிக்குள் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதால், ஒரு சில நெறிமுறைகளை தளர்த்துமாறு அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு பல மாகாணங்களை வலியுறுத்தியுள்ளது.

தேர்தலுக்கு முன்னால் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று அதிபர் டிரம்ப் கூறிவந்தாலும், விஞ்ஞானிகளின் பேச்சை கேட்டு, வெளிப்படையான முறையில் இதுகுறித்து டிரம்ப் செயல்படுவாரா என எதிர்முனையில் இருக்கும் ஜோ பைடன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »