Press "Enter" to skip to content

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் தீ விபத்து: அச்சத்தில் நகரை விட்டு வெளியேறும் மக்கள்

பட மூலாதாரம், Getty images

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, வெடிப்பு சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்திற்கு பிறகு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

துறைமுகத்தில் எண்ணெய் மற்றும் டயர்கள் வைத்திருந்த கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீ மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட புகை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து காணப்பட்டது. அங்கு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும் ராணுவ அதிகாரிகளும் போராடி வருகின்றனர்.

தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.

சமூக வலைதளத்தில் பகிரப்படும் காணொளிகளில் துறைமுக ஊழியர்கள் புகைக்கு பயந்து ஓடி வருவது தெரிகிறது.

இந்த தீயால் சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக லெபனானின் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜார்ஜ் கெட்டனே தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது.

மேலும் இந்த தீ விபத்தால் வெடிப்பு ஏற்படுமா என்ற அச்சம் இல்லை என கெட்டனே தெரிவித்துள்ளார்.

எண்ணெய் பேரல்கள் வைத்திருந்த கிடங்கில் முதலில் தீப்பற்றியது பின், அது அருகே இருந்த டயர்களில் பற்றி எரியத் தொடங்கியது என துறைமுகத்தின் இயக்குநர் பாசிம் அல் கெய்தா லெபனானின் வானொலி ஒன்றில் தெரிவித்துள்ளார்,

இந்த தீ விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பெய்ரூட் தீ விபத்து

பட மூலாதாரம், Getty images

இதற்கிடையே, அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தபோதும், அதனால் சமாதானம் அடையாத பலர், தலைநகரை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிடங்கில் உரிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் காரணமாக வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

அதில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களின் வீடுகளை இழந்தனர்.

ஆத்திரமடைந்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று ஆளும் அரசு பதவி விலகியது.

தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்து கட்டுப்பாடிற்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும் கடந்த மாதம் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த மக்கள் நகரை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஒரு சிலர் தீ விபத்து வெடிப்புச் சம்பவத்தை நினைவில் கொண்டுவருவதாக தெரிவித்தனர்.

“நாங்கள் மிகுந்த பயத்தில் உள்ளோம். பெய்ரூட்டை அழித்த அந்த வெடிப்பு சம்பவம் நடந்து ஒரு மாதம்தான் ஆகிறது. இப்போது மீண்டும் அது நிகழ்வதை பார்க்கிறோம்,” என 53 வயது ஆண்ட்ரே முயார்பெஸ் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »