Press "Enter" to skip to content

அமெரிக்கா காட்டுத்தீ: 30க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சேதம்

பட மூலாதாரம், Getty images

அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மாகாணங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஓரிகன் மாநிலத்தில் மட்டும் டஜன் கணக்கானவர்களை காணவில்லை. மேலும் ‘எந்த ஒரு மோசமான சம்பவத்திற்கும்’ இந்த மாகாணம் தயாராக வேண்டும் என அவசரநிலைப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஓரிகன், கலிஃபோர்னியா மற்றும் வாஷிங்டன் மாகாணங்களில், கடந்த மூன்று வாரங்களாக காட்டுத்தீப்பற்றி எரிகிறது. இதனால் பல லட்ச ஏக்கர் நிலங்கள் அழிந்துவிட்டன. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன், ”நமது வாழ்க்கைக்கு பருவநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்பதையும், அந்த அச்சுறுத்தல் மிக அருகாமையில் இருப்பதையும் அதிபர் டொனால்ட் டிரம்ப் உணர மறுக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

காட்டுத்தீயால் ஏற்பட்ட சேதம்

பட மூலாதாரம், Getty images

திங்களன்று காட்டுத்தீ பாதிப்புகளை பார்வையிட கலிஃபோர்னியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் அதிபர் டிரம்ப். காடுகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்பதால் காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

காட்டுத்தீ சம்பவத்தால் ஓரிகன் மாகாணத்தின் பெரிய நகரமான போர்ட்லாந்தின் காற்றுத்தரம் மாசடைந்து காணப்படுகிறது.

என்ன நடக்கிறது?

ஓரிகனில் 16 இடங்களில் ஏற்பட்ட பெரிய தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சித்து வருகின்றனர். 40,000 பேரை கட்டாயமாக வெளியெற்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஓரிகனில் மட்டும் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில் வசிக்கும் 41 வயது கோமஸ் போலானஸ், காட்டுத்தீயிலிருந்து மிக சிரமத்துடன் தனது குழந்தைகளுடன் தப்பித்ததாக கூறுகிறார். காரின் இருபக்கத்திலும் தீ எரிந்து கொண்டிருந்ததால் எனது நான்கு குழந்தைகளையும் கண்களை மூடிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன் என்கிறார் அவர்.

அமெரிக்காவை உலுக்கும் காட்டுத்தீ: 30க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சேதம்

பட மூலாதாரம், EPA

”காட்டுத்தீயில் எங்கள் உடைமைகள் அனைத்தும் சென்றுவிட்டன. ஆனால் நாங்கள் மட்டும் உயிருடன் இருக்கிறோம். மீண்டும் வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும்,” என ராயட்டர்ஸ் செய்தி முகமையிடம் அவர் தெரிவித்தார்.

ஓரிகனில் பெரும் சேதம் ஏற்படுத்திய ஒரு காட்டுத்தீச் சம்பவம் மனிதர்களால் ஏற்பட்டிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

வாஷிங்கடனில் 15 இடங்களில் எரியும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அங்கு ஒரு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. காட்டுத்தீயிலிருந்து தப்பிக்கும் போது அவர்களின் பெற்றோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கலிஃபோர்னியாவில் என்ன நடக்கிறது?

”இது ஒரு பருவநிலை சார்ந்த அவசரநிலை. நம் கண்முன்னே நடந்து கொண்டிருக்கிறது,” என ஜனநாயக்கட்சியை சேர்ந்த கலிஃபோர்னியாவின் ஆளுநர் கேவின் நியூசோம் தெரிவித்துள்ளார்.

சமீப வருடங்களில் காடுகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்பதை ஒப்புக் கொண்ட அவர், அது மட்டுமே காட்டுத்தீக்கு காரணம் இல்லை என தெரிவித்தார்.

அமெரிக்காவை உலுக்கும் காட்டுத்தீ: 30க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சேதம்

பட மூலாதாரம், Reuters

கலிஃபோர்னியா பருவநிலையை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், அதிகபட்ச வெப்பநிலை, யூகிக்க முடியாத காட்டுத்தீ போன்ற பிரச்சனைகள் விஞ்ஞானிகளால் ஏற்கனவே எச்சரிக்கப்பட்ட ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

கலிஃபோர்னியாவில் காய்ந்த இலைகள் சுத்தம் செய்யப்பட்டால் காட்டுத்தீயை தடுக்கலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற பேரணி ஒன்றில், ”காடுகளை சுத்தம் செய்ய வேண்டும். பல வருடங்களாக இலைகளும், முறிந்த மரங்களும் கீழே விழுந்து கிடக்கின்றன. அவை எளிதில் தீப்பிடிக்கக் கூடியவை. இதை நான் மூன்று வருடங்களாக சொல்கிறேன். ஆனால் அவர்கள் கேட்பதாக இல்லை (ஜனநாயகக் கட்சியினர்),” என தெரிவித்தார்.

அமெரிக்காவை உலுக்கும் காட்டுத்தீ: 30க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சேதம்

பட மூலாதாரம், EPA

கலிஃபோர்னியாவில் ஆகஸ்டு 15ஆம் தேதியிலிருந்து ஏற்பட்ட தீயில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 28 இடங்களில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க 14,800 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

கலிஃபோர்னியாவில் வடக்கு பகுதியில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மோசமான ஒரு காட்டுத்தீ சம்பவமாக இது உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »