Press "Enter" to skip to content

தமிழக கோயிலில் திருடப்பட்ட 15ஆம் நூற்றாண்டு சிலைகள் லண்டனில் மீட்கப்பட்டது எப்படி?

தமிழ்நாட்டில் ஒரு கோயிலில் இருந்து திருடப்பட்ட 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமர், லட்சுமணர், சீதை உருவச் சிலைகள் தற்போது லண்டனிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சிலைகள் மீட்கப்பட்டது எப்படி?

மயிலாடுதுறை அனந்தமங்கலம் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயிலில் இருந்து 1970களில் திருடப்பட்ட இந்தச் சிலைகள், செவ்வாய்க்கிழமையன்று முறைப்படி லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

திருடப்பட்ட சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

“2016 ஆம் ஆண்டில் இந்தியக் கலைப் பொருட்களை விற்கும் டீலர்களின் இணையதளப் பக்கங்களைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது பிரிட்டனில் உள்ள ஒரு டீலருடைய இணையதளத்தில் இருந்த ஒரு சிலை கண்ணில்பட்டது. அது விஜயநகர காலத்தைச் சேர்ந்த வெண்கலச் சிலை. அது இராமரா, லட்சுமணரா என்பது புகைப்படத்திலிருந்து தெரியவில்லை. தமிழ்நாட்டில் பல கோயில்களில் லட்சுமணர் சிலைகள் மட்டும் காணாமல் போயிருந்தன. அம்மாதிரி ஒரு லட்சுமணர் சிலையாக இருக்குமென இதைக் கருதினோம். ஆகவே, லட்சுமணர் சிலைகள் தொலைந்து போயிருந்த கோயில்களில் இருந்த ராமர் சிலைகளோடு இதனைப் பொருத்திப் பார்த்தால், பொருந்தவில்லை” என்று விவரிக்கிறார் இந்தியா பிரைட் புராஜக்டைச் சேர்ந்த விஜயகுமார்.

இதற்குப் பிறகு, இந்த அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் இதேபோன்ற, சற்றே மாறுபட்ட மற்றொரு சிலையின் புகைப்படத்தை வேறொரு இணையதளத்தில் கண்டறிந்தார். இதற்குப் பிறகு இதே காலத்தைச் சேர்ந்த ஹனுமன் சிலை ஒன்று, தெற்காசிய நாடு ஒன்றிலுள்ள அருகாட்சியகத்தில் இருப்பதும் கண்டறியப்பட்டது. ஆகவே ஒரே கோவிலில் இருந்து ராமர், லட்சுமணர், சீதை, ஹனுமன் என ஒட்டுமொத்தமாகவே சிலைகள் திருடப்பட்டது கண்டறியப்பட்டது.

ram sita laxman idols stolen and rescues in londun

இதையடுத்து புதுச்சேரியில் உள்ள ஃப்ரெஞ்ச் இன்ஸ்ட்டிடியூட்டில் இருக்கும் சிலைகளின் புகைப்படங்களோடு இந்த புகைப்படங்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன. அதில், இந்தச் சிலைகள் மயிலாடுதுறை அனந்தமங்கலம் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவிலைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது.

இதையடுத்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தத் தகவல் லண்டனில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழக சிறை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஏடிஜிபி அபய் குமாருக்கும் இந்தியத் தொல்லியல் துறையின் புராதன பொருட்கள் பிரிவின் இயக்குநருக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தூதரக அதிகாரிகள் உடனடியாக லண்டன் மெட்ரோபாலிடன் காவல்துறையின் கலை மற்றும் புராதனப் பொருட்களுக்கான பிரிவைத் தொடர்புகொண்டு, இந்தத் தகவல்களைத் தெரிவித்தனர். அதேபோல, தமிழ்நாட்டில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரிடமும் இந்தச் சிலை தொடர்பான தகவல்கள் கோரப்பட்டன.

hindu god idols stolen from tamil nadu rescued in london

உடனடியாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஏடிஜிபி அபய்குமார் இந்தச் சிலை தொடர்பான விரிவான தகவல்களை சேகரித்து அனுப்பிவைத்தார். இந்தச் சிலை 1978ஆம் ஆண்டில் திருடப்பட்டிருந்தது. இந்தச் சிலை திருட்டில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், சிலையை மீட்க முடியவில்லையென வழக்கு மூடப்பட்டிருந்தது. புதுச்சேரியில் உள்ள ஃப்ரென்ஞ்ச் இன்ஸ்டிடியூட்டில் உள்ள இந்தச் சிலைகளின் புகைப்படங்களையும் நிபுணர்கள் கருத்தையும் அனுப்பிவைத்தனர்.

இந்தத் தகவல்களை வைத்து லண்டன் காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். ராமர் சிலையை வைத்திருந்த நபரைத் தொடர்பு கொண்டு, இது திருடப்பட்ட சிலை என்றும் உடனடியாக அந்தச் சிலையை ஒப்படைக்கும்படியும் தெரிவித்தனர். இந்தச் சிலையை வாங்கியிருந்த நபர், அது திருடப்பட்ட சிலை என்று அறியாமலேயே அதனை வாங்கியிருந்ததாகத் தெரிவித்தார். இந்தச் சிலையை அவருக்கு விற்ற கலைப்பொருள் வர்த்தகர் இறந்து போய்விட்டார்.

இந்த ராமர் சிலையை வைத்திருந்த நபர் இன்னொரு தகவலையும் தெரிவித்தார். அதாவது, தன்னிடம் இந்த ராமர் சிலை தவிர, சீதா, லட்சுமணன் சிலைகளும் இருப்பதாகக் கூறினார். இந்த மூன்று சிலைகளையும் ஒப்படைப்பத்துவிடுவதாக அந்த நபர் கூறினார். இதையடுத்து சிலைகள் இந்தியத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த சிலைகளோடு சேர்ந்த ஹனுமன் சிலை, ஒரு தெற்காசிய நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் இருக்கிறது. அவர்களும் இதேபோல இந்தியாவிடம் அந்தச் சிலையை ஒப்படைப்பார்கள் என இந்தியா பிரைட் புராஜெக்டைச் சேர்ந்தவர்கள் நம்புகிறார்கள்.

இந்தியாவில் திருடுபோய் இதுவரை திருப்பி அளிக்கப்பட்ட சிலைகளில் 80 சதவீத சிலைகள் தமிழகத்தைச் சேர்ந்தவை. தமிழ்நாடு, ஒதிஷா மாநிலங்களைச் சேர்ந்த பல சிலைகளைத் திரும்பக் கொணரும் பணிகளில் இந்தியா பிரைடு பிராஜெக்ட் ஈடுபட்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »