Press "Enter" to skip to content

உலக சுற்றுலா தினம்: தமிழ்நாடு முதல் தாய்லாந்து வரை வாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

இன்று (செப்டம்பர் 27) உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.

உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் 1980ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27ஆம் நாளில் உலகெங்கும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாசார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் சுற்றுலாத்துறையை சார்ந்து வாழும் தமிழர்கள் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இந்த கட்டுரை பகுதி வாரியாக விவரிக்கிறது.

சரஸ்வதி பாலகிருஷ்ணன்,

உணவக உரிமையாளர், சிங்கப்பூர்

எங்கள் உணவகத்திற்கு தினந்தோறும் வரக்கூடியவர்களில் சுமார் 40 விழுக்காட்டினர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்தான். இதனால் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பிரச்சனை தலைதூக்கியதுமே தொழிலில் 40 விழுக்காடு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. எனினும் எங்களிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கி உள்ளோம்.

தற்போது இணையம் வழி தொழில் நடவடிக்கைகளை மேம்படுத்தி வருகிறோம். கணினிமய மூலம் உணவு வாங்கினால் விலையில் 25 விழுக்காடு தள்ளுபடியும், இலவசமாக டெலிவரியும் அளிக்கிறோம். மேலும் புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்துகிறோம். நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) விவகாரம் எங்களை புதிய கோணங்களில் சிந்திக்க வைத்துள்ளது.

முகன்,

கடை உரிமையாளர், மலேசியா

இந்தியா, தமிழக சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டவர்களும் மலேசியாவில் கட்டாயம் பார்க்கக் கூடிய இடம் பத்துமலை முருகன் கோவில். அனைவருமே இங்கு விற்கப்படும் பல்வேறு அளவுகளிலான முருகப் பெருமான் சிலைகளை வாங்கிச் செல்வர்.

இரண்டு ஊழியர்களுக்கு ஊதியம் அளித்து எனது வாழ்க்கையையும் நடத்தும் அளவுக்கு கிடைத்து வந்த வருமானம், கொரோனா ஊரடங்குக்குப் பிறகு அறவே இல்லாமல் போனது. குறைந்த விலை என்பதால் வெளிநாட்டவர்கள் வேறு பல கைவினைப் பொருட்களையும் எங்களிடம் வாங்குவவர். தற்போது இணையம் வழியிலான வர்த்தகத்தை அரசாங்கும் ஊக்குவிக்கிறது. உள்ளூர் வாடிக்கையாளர்கள் ஆதரவால் இப்போது தான் சுமார் 30 விழுக்காடு வியாபாரத்தை மீட்டெடுத்துள்ளோம்.

ராம் பிரசாத்,

சுற்றுலா நிறுவன பங்குதாரர், தாய்லாந்து

வெளிநாட்டு பயணிகளை நம்பியுள்ள சுற்றுலா நிறுவனங்களை கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) முற்றிலுமாக துடைத்தொழித்துவிட்டது. கடந்த ஐந்து மாதங்களில் சல்லிக்காசு கூட சம்பாதிக்க முடியவில்லை. தாய்லாந்தில் உள்ளூர் சுற்றுலாத்துறை மீண்டும் வளர்ச்சி கண்டு வருகிறது. பெரும் தள்ளுபடியில் தங்கும் விடுதி அறைகள், பயண ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதே போல் கேளிக்கை விடுதிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் அங்கெல்லாம் செல்வதில்லை. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வரத் துவங்கினால்தான் எங்களைப் போன்றவர்கள் மெல்ல நிமிர முடியும்.

ஜெகன்,

சுற்றுலா வழிகாட்டி, ராமேஸ்வரம்

எனது பெயர் ஜெகன். நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறேன். எனக்கு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் நன்கு பேச தெரியும். இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உலக பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி திருக்கோவில் தல வரலாறு குறித்து விளக்கி கூறுவேன்.

உலக சுற்றுலா தினம்

தனுஷ்கோடி, பாம்பன் பாலம், அப்துல் கலாம் தேசிய நினைவகம், ராமர் பாதம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு அழைத்து சென்று அவர்களின் தாய் மொழியில் தளத்தை பற்றிய விபரங்களை விவரிப்பதோடு, சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நல்ல சுற்றுலா வழிகாட்டியாக இருந்து வந்தேன். இதனால் எனக்கு தினமும் 1,500 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை நல்ல வருமானம் கிடைத்து வந்தது.

கடந்த ஆறு மாத கொரோனா ஊரடங்கில் சுற்றுலா தளங்களுக்கான தளர்வுகள் இன்று வரை ஏதும் அறிவிக்கப்படவில்லை. இதனால் ராமேஸ்வரத்தில் சுற்றுலாவையும், யாத்ரீகர்களையும் மட்டுமே நம்பி தொழில் செய்து வரும் என்னை போன்ற நூற்றுக்கணக்கானவர்களின் வருவாய் பறிபோயுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை நிறுத்தபட்டுள்ளதால் வருவாய் இன்றி நானும் என் குடும்பமும் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு வருகின்றோம்.

இதனால் கடந்த 15 தினங்களாக மாற்று தொழிலாக எலக்ட்ரீசியன் ஒருவருடன் உதவிக்கு சென்று வருகிறேன். இந்த தொழிலில் எனக்கு தினமும் 300 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால் இது என் குடும்ப செலவுகளுக்கு போதுமானதாக இல்லை. எப்போது சுற்றுலா தளங்களுக்கு அரசு தளர்வு அறிவிக்கும் என்ற ஏக்கத்துடன், சுற்றுலா பயணிகளின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

சுற்றுலா பயணிகள் வருகை இன்மையால் பாதிப்பிற்கு உள்ளான புதுச்சேரி ரிக்ஷா தொழிலாளிகள்

புதுச்சேரி மாநிலத்தில் பாரம்பரிய அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படும் ரிக்ஷா ஓட்டும் தொழில், புதுச்சேரி சுற்றுலாவில் ஒரு அங்கமாகவே கருதப்படுகிறது. இந்த ரிக்ஷா தொழிலை ஆதாரமாக கொண்டு புதுச்சேரியில், சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்குப் புதுச்சேரியிலுள்ள வெள்ளை நகரம் என்றழைப்படும் பிரெஞ்சு காலனிகளில் உள்ள பிரெஞ்சு காலத்து பாரம்பரியக் கட்டடம், கடற்கரை மற்றும் வழிபாட்டுத் தளங்களைச் சுற்றிக்காட்டி அதன் மூலம் நாள்தோறும் வரும் வருமானமே இவர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது.

இதனிடையே, கொரோனா தொற்று பரவல் காரணமாக, வேலைகளே இல்லாமல் பெருமளவு பாதிக்கப்பட்டு, கடுமையான வறுமைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதிலும், சுற்றுலா பயணிகளை ஆதாரமாகக் கொண்டு தொழில் செய்து கொண்டிருக்கும் ரிக்ஷா தொழிலாளிகள், கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் அவர்களது அடிப்படை வாழ்வாதாரத்திற்காக கிடைக்கும் வேலைகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக, புதுச்சேரியில் 85 வயதை கடந்த முத்து என்பவர் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக புதுச்சேரியில் ரிக்ஷா தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கு, அம்பிகா என்ற மனைவி மட்டுமே உள்ளார். பிள்ளைகள், உறவினர்கள் கிடையாது. சுற்றுலா பயணிகளுக்கு ரிக்ஷா ஓட்டுவதில் வரும் வருமானத்தில் 50 ரூபாயை தினமும் ரிக்ஷா வாடகை கொடுத்துவிட்டு, மீதம் இருக்கும் பணத்தில் ஓட்டல்களில் உணவு வாங்கி இவர்கள் சாப்பிட்டு வருகின்றனர்.

முன்னதாக, புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகளுக்கு ரிக்ஷா மூலம் நகரை சுற்றிக்காட்டி தினமும் குறைந்தபட்சம் 200 ரூபாயில் இருந்து 600 ரூபாய் வரை சம்பாதித்தார். ஆனால், தற்போது சுற்றுலா பயணிகள் வருகை இல்லாத காரணத்தால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இவரது தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஊரடங்கு கடுமையாக இருந்த காலத்தில் தன்னார்வலர்கள் தினமும் கொடுக்கும் உணவை வாங்கி சாப்பிட்டு வந்தனர்.

இதையடுத்து கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து தினமும் காலை பொழுதில் காய்கறி மற்றும் மீன் சந்தையில் தனது ரிக்ஷாவை சுமை இழுக்கும் வாகனமாக பயன்படுத்தி வருகிறார். சந்தையில் இருந்து காய்கறி மற்றும் மளிகை பொருட்களை ரிக்ஷாவில் கொண்டு சென்று அதில் வரும் வருமானத்தை வைத்து இந்த வயதான ரிக்ஷா ஓட்டுநர் தற்போது வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சி எவ்வளவு தெரியுமா?

உலக சுற்றுலா தினம்

இலங்கையின் விமான நிலையங்களை திறப்பதற்கான எண்ணம் தற்போதைய சூழ்நிலையில் கிடையாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கின்றார்.

கொரோனா அச்சுறுத்தலிலிருந்து இலங்கையிலுள்ள 2.2 கோடி மக்களின் சுகாதார பாதுகாப்பு நூறு வீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் அறிக்கையை வழங்கும் வரை விமான நிலையங்கள் திறக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் நிலைமை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கடல் மார்க்கமாக வருகைத் தருகின்றவர்கள் தொடர்பில் கடற்படையினர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நடவடிக்கைகளுக்காக கடற்படையைச் சேர்ந்த பெரும்பாலான கடற்படை சிப்பாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், கடற்படையிடம் வினவியது.

கடந்த ஜுன் மாதமளவில் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக ஒரு தொகுதியினர் இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்திருந்ததாகவும், அதன் பின்னர் இந்தியாவிலிருந்து எவரும் இலங்கைக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கவில்லை எனவும் கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

இலங்கையின் சுற்றுலாத்துறை 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.

குறிப்பாக 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்திருந்தது.

இலங்கையின் சுற்றுலாத்துறை வரலாறு காணாத அளவு வீழ்ச்சி

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல், இலங்கையின் சுற்றுலாத்துறையை பாரிய வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்றிருந்தது.

இவ்வாறான நிலையில், 2019ஆம் ஆண்டு ஜுலை மாதத்திற்கு பின்னரான காலத்தில் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி நகர்ந்து, நவம்பர் மாதமளவில் வழமைக்கு திரும்பியிருந்ததாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.

இவ்வாறான நிலையில், உலகத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கம் மார்ச் மாதம் இலங்கையையும் தாக்கியது.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, மார்ச் மாதம் 20ஆம் தேதி நாடு முடக்கப்பட்டதுடன், விமான நிலையங்களும் மூடப்பட்டன.

சுமார் ஒரு மாத காலம் தொடர்ந்த முடக்க நிலைமை, சரியாக ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி முதல் படிப்படியாக வழமைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், இலங்கையில் சமூகங்களுக்கு இடையில் கொரோனா தொற்று பரவுவது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எனினும், வெளிநாடுகளிலிருந்து விசேட விமானங்களிலும் மூலம் அழைத்து வரும் இலங்கையர்களுக்கு, தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு வருகின்றமை நாளாந்தம் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.

இலங்கையின் சுற்றுலாத்துறை வரலாறு காணாத அளவு வீழ்ச்சி

இவ்வாறான நிலையில், வீழ்ச்சி கண்டுள்ள இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், இலங்கை மக்களின் சுகாதார பாதுகாப்பு 100 வீதம் உறுதிப்படுத்தப்படும் வரை விமான நிலையங்களை திறக்க முடியாது என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அறிவித்துள்ளார்.

இலங்கையில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 328 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்ததுடன், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 71 ஆயிரத்து 370 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகைத் தந்திருந்தனர்.

அதன்பின்னர், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 975 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்திருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு ஒரு சுற்றுலா பயணி கூட நாட்டிற்கு வருகைத் தரவில்லை என இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.

இலங்கையில் எந்தவித பாரதூரமான பிரச்சனைகளும் இல்லாத வருடமான 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 11 லட்சத்து 8 ஆயிரத்து 293 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்திருந்தனர்.

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட 2019ஆம் ஆண்டு அதே காலப் பகுதியில் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7 லட்சத்து 71 ஆயிரத்து 465 ஆகும்.

எனினும், கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் 2020ஆம் மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாத இறுதி வரை இலங்கைக்கு 71 ஆயிரத்து 370 சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறைக்கு பெயர் பெற்ற நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ள நிலையில், இலங்கையில் இன்று சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது.

குறிப்பாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தரவுகளுக்கு அமைய, 1971ஆம் ஆண்டு இலங்கைக்கு 39 ஆயிரத்து 654 சுற்றுலா பயணிகளே வருகைத் தந்துள்ளனர்.

அந்த ஆண்டில் மாத்திரம் சுற்றுலாத்துறையின் ஊடாக இலங்கைக்கு 3.4 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்துள்ளதாக அதிகார சபையின் தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(கோப்புப்படம்)

இவ்வாறு ஆரம்பமான இலங்கையின் சுற்றுலாத்துறை ஒவ்வொரு ஆண்டும் முன்னேற்ற பாதையில் சென்றிருந்ததை அவதானிக்க முடிகின்றது.

இதன்படி, கொரோனா அச்சுறுத்தலை இலங்கை எதிர்நோக்குவதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை 19 லட்சத்து 13 ஆயிரத்து 702 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கைக்கு 3,606.9 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்துள்ளது.

இலங்கை வரலாற்றில் சுற்றுலாத்துறை மூலம் அதிகளவிலாக வருமானம் கிடைத்த ஆண்டாக 2018ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.

2018ஆம் ஆண்டு 23 லட்சத்து 33 ஆயிரத்து 796 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்ததுடன், அவர்களின் ஊடாக அந்த ஆண்டு 4,380.6 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்திருந்தது.

இவ்வாறு வளர்ச்சி பாதையை நோக்கி நகர்ந்த இலங்கையின் சுற்றுலாத்துறை, மீண்டும் பாரிய பின்னடைவை நோக்கி நகர்ந்துள்ளமை இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின் மூலம் காணக்கூடியதாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »