Press "Enter" to skip to content

டிரம்ப் வரி ஏய்ப்பில் ஈடுபட்டாரா? ரூ. 55 ஆயிரம் மட்டுமே செலுத்தியதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியால் சர்ச்சை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டில் 750 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ஆண்டொன்றுக்கு வெறும் 55 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானவரி செலுத்தியதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

டிரம்ப் மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள், இருபது ஆண்டுகளுக்கும் மேலான வருமானவரி ஆவணங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக கூறும் அந்த செய்தித்தாள், கடந்த 15 ஆண்டுகாலத்தில் 10 ஆண்டுகள் ஒரு ரூபாய் கூட டிரம்ப் வருமான வரி செலுத்தவில்லை என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இவற்றை “போலிச் செய்தி” என்று டிரம்ப் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக உள்ளூர் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமையன்று பேசிய டிரம்ப், “நான் உண்மையில் வரி செலுத்தினேன். நீண்ட காலமாக தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வரும் எனது வருமானவரி விவரம் வெளியாகும்போது உங்களுக்கு அது குறித்து தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார்.

“அமெரிக்க வருமானவரித்துறை (ஐஆர்எஸ்) என்னை முறையாக நடத்துவதில்லை… மோசமாக நடத்துகிறார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, டிரம்ப் தனது தனிப்பட்ட சொத்துக்கள் மற்றும் வணிகம் தொடர்பான ஆவணங்களை பகிர்ந்து கொள்ள மறுத்ததற்காக சட்ட சவால்களை எதிர்கொண்டார். 1970களில் இருந்து தனது வருமானவரி விவரத்தை பொதுவெளியில் வெளியிடாத முதல் அமெரிக்க அதிபர் இவர்தான். எனினும், அமெரிக்காவின் சட்டப்படி இது கட்டாயமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

“சட்டப்பூர்வமான அணுகல் கொண்ட ஆதாரங்கள் வழியாக” இந்த தகவல்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிடும் ஜோ பைடனுடனான முதல் விவாதத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் இந்த செய்தி வெளிவந்துள்ளது.

“சம்பாதித்ததை விட இழந்தது அதிகம்”

டொனால்டு டிரம்ப்

1990களில் டிரம்ப் மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் தொடர்பான வரியறிக்கை (Tax returns), மற்றும் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளுக்கான டிரம்பின் தனிப்பட்ட வருமானவரி ஆவணங்களை மதிப்பாய்வு செய்ததாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

“அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டில் வெறும் 750 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 55,000) மட்டுமே வருமான வரியாக செலுத்தினார். மேலும், கடந்த 15 ஆண்டுகளில் அவர் 10 ஆண்டுகள் வருமான வரியே செலுத்தவில்லை. இதற்கு அவர் தனது வருமானத்தை விட இழப்பு அதிகமாக இருந்ததாக கணக்கு காட்டியதே காரணம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, டிரம்ப் ஒரு பிரபல தொழிலதிபராகவும், குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் ஆதிக்கம் மிக்கவராகவும் அறியப்பட்டார். மேலும், அவர் தன்னைத்தானே வெற்றிகரமான பில்லியனராக வெளிப்படுத்தி கொண்டார். இந்த சூழ்நிலையில், தற்போது வெளிவந்துள்ள விவரங்கள் அவரது முந்தைய கருத்துகளுக்கு நேரெதிர்மாறாக அமைந்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுமட்டுமின்றி, டிரம்ப் வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு பெறுவதற்காகவே வேண்டுமென்றே இழப்புகளை ஏற்படுத்தி கணக்கு காட்டியதாகவும், அமெரிக்க அதிபராக ஒருவர் சட்டப்படி தாக்கல் செய்ய வேண்டிய வருடாந்திர நிதிநிலை அறிக்கையில், 2018ஆம் ஆண்டு தான் குறைந்தபட்சம் 434.9 மில்லியன் டாலர்கள் ஈட்டியதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், அவர் தனது வருமானவரித் தாக்கலில் 47 மில்லியன் டாலர்கள் இழப்பை சந்தித்துள்ளதாக கணக்கு காட்டியிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் நாளிதளிடம் பேசிய டிரம்புக்கு சொந்தமான ‘தி டிரம்ப் ஆர்கனைசேஷன்’ எனும் குழுமத்தின் தலைமை சட்ட அதிகாரியான ஆலன் கார்டென், “இவற்றில் பெரும்பாலானவை தவறான தகவல்கள்” என்று தெரிவித்துள்ளார்.

“கடந்த பத்தாண்டுகளில் அதிபர் டிரம்ப் மில்லியன்கணக்கான டாலர்களை தனது தனிப்பட்ட வருமான வரியாக செலுத்தியுள்ளார்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

டொனால்டு டிரம்ப்

“தனிநபர் வரி” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம், டிரம்ப் செலுத்திய சமூகப் பாதுகாப்பு, மருத்துவ மற்றும் அவரது வீட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கான வரி உள்ளிட்ட பிற வரிகளை கார்டென் குறிப்பிடுவதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

இதுமட்டுமின்றி, டிரம்ப் தனது கோல்ஃப் மைதானங்கள், விடுதிகள் உள்ளிட்ட தனதுமுக்கிய தொழில்களில், “தொடர்ந்து பல ஆண்டுகளாக மில்லியன்கணக்கான டாலர்கள் இழப்பை சந்தித்து வருவதாக” தனது வருமானவரி ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளதாக அந்த நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.

டிரம்ப் வருமானவரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக தனது ஆதிக்கத்தை பயன்படுத்தி ஆபத்தான தொழில்களில் முதலீடு வாங்கி அதன் இழப்பை கட்டுப்படுத்தி கணக்கு காட்டியதாகவும், தனிப்பட்ட முறையில் டிரம்ப் பொறுப்பேற்றுள்ள சுமார் 300 மில்லியன் டாலர்கள் கடனை அவர் அடுத்த நான்காண்டுகளில் திரும்ப செலுத்த வேண்டியுள்ளதாகவும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், டிரம்புக்கு சொந்தமான நிறுவனங்கள் அதிபரிடம் காரியம் சாதித்தித்துக்கொள்ள விரும்பும் “தரகர்கள், வெளிநாட்டு அதிகாரிகள்” உள்ளிட்டோரிடமிருந்து பணத்தை பெற்றுள்ளதாகவும் அந்த செய்தித்தாள் குற்றஞ்சாட்டியுள்ளது.

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

22 செப்டம்பர், 2020, பிற்பகல் 3:42 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »