Press "Enter" to skip to content

மைத்ரேயி ராமகிருஷ்ணன்: “சமூக ஊடக வெறுப்புகளை எதிர்கொள்ள என்னை தயார்படுத்திக் கொள்ளவில்லை”

நெட்பிளிக்ஸ் தளத்தில் புகழ் பெற்ற இலங்கை தமிழ்ப் பெண்ணான மைத்ரேயி ராமகிருஷ்ணன், தான் சமூக வலைதளங்களில் எதிர்கொண்ட வெறுப்புகளை சமாளிக்க அதிகம் போராட வேண்டியிருந்ததாக கூறியிருக்கிறார்.

18 வயதான மைத்தேரியின் “Never I have I ever” என்ற நெட்பிளிக்ஸ் தொடர் பெரும் வெற்றியை பெற்றது. 2020ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்களில் இதுவும் ஒன்று.

முதல் தலைமுறை இந்திய அமெரிக்க பெண்ணான இவரது பெற்றோர் கனடாவில் குடியேறியவர்கள்.

தொடர் வெளியான ஒரே இரவில் புகழ் பெற்ற மைத்ரேயி ராமகிருஷ்ணன், தான் சம்பாதித்த வெறுப்புகளையும், அதை சமாளிப்பது குறித்தும் பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார்.

“நெட்பிளிக்ஸ் தொடரில் நடித்த பிறகு, இதோ இதுபோன்ற நேர்காணல்கள் எல்லாம் அளிக்க தயாரானேன். ஆனால், சமூக வலைதளங்களில் இருந்த வெறுப்பு மற்றும் துன்புறுத்தல்களுக்கு என்னை தயார்படுத்திக் கொள்ளவில்லை” என்று கூறுகிறார் மைத்ரேயி.

சமூக ஊடகங்களில் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களில் இவரும் ஒருவர்.

“இதெல்லாம் நடக்கும் என்று தெரியும். ஏனெனில் அந்த மாதிரியான ஒரு உலகத்தில் நாம் வாழ்கிறோம். அசிங்கமாக கமென்ட் செய்வது, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் மிரட்டல்கள்… ஆனால், இதெல்லாம் உண்மையில் நடக்கும்போது, இது வேறு மாதிரியாக இருக்கிறது”

தனக்கு சமூக ஊடகங்களில் பல கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறுகிறார் மைத்ரேயி

பல எதிர்மறையான கருத்துகளை எதிர்கொண்டு வந்த கனடா நாட்டு நடிகையான மைத்ரேயி, தற்போது சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக வெளியேறி உள்ளார்.

“என் அனைத்து சமூக ஊடகப் பக்கங்களையுமே நான்தான் கவனிக்கிறேன். என் குரலை நான்தான் வெளிப்படுத்த வேண்டும் என்பதே என் எண்ணம்” என்கிறார் மைத்ரேயி.

“சமூக ஊடகங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள்”

தன்னை போல பல பெண்களும் இதுபோன்ற போராட்டங்களை எதிர்கொள்வதை அறிந்திருக்கிறார் மைத்ரேயி.

அதனால் பிளான் இன்டர்நேஷனல் என்ற குழந்தைகள் உரிமைகளுக்கான அரசு சாரா அமைப்பின் தூதராகியுள்ளார் அவர். இந்த அமைப்பு பாலின பாகுபாடு, துன்புறுத்தல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இணையத்தில் இதுபோன்ற சூழல்களை சந்தித்தது குறித்து 20 நாடுகளை சேர்ந்த 15-22 வயதுக்குள்ளான சுமார் 14,000 சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்ட 58 சதவீதம் பேர் தாங்கள் சமூக ஊடகங்களில் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக கூறுகின்றனர்.

"சமூக ஊடகங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள்"

10ல் எட்டுக்கும் மேற்பட்டோர், தவறான வார்த்தைகளை பயன்படுத்துவது, இனவெறியை வெளிப்படுத்துவது அல்லது பாலியல் துன்புறுத்தல் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

“இது சரியானது அல்ல” என்கிறார் மைத்ரேயி ராமகிருஷ்ணன்.

“இணைய வசதி என்பது நம்மிடம் இருக்கும் அற்புதமான ஒரு கருவி. ஒரு விஷயத்திற்கு விடை கண்டுபிடிக்கவும், உலகில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும் உதவுகிறது. ஆனால், இதில் ஏற்படும் துன்புறுத்தல்களை மறுக்க முடியாது. பெண்களுக்கு ஏற்கனவே இருக்கும் பல அழுத்தங்களின் பட்டியலில் இதுவும் சேர்கிறது” என்று அவர் கூறுகிறார்.

சமூக ஊடகங்களை விட்டு விலகும் பெண்கள்

கணினிமய துன்புறுத்தல்களால் ஐந்தில் ஒரு இளம் பெண், சமூக ஊடகம் பயன்படுத்துவதை நிறுத்துவதாகவும், அல்லது பயன்பாட்டு நேரத்தை பெரிதும் குறைத்துக் கொள்வதாகவும் பிளான் இன்டர்நேஷனல் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

மேலும், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில்தான் அதிகளவில் பெண்கள் மீதான தாக்குதல்கள் நடப்பதும் தெரிய வந்துள்ளது.

“கணினி மயமான மயமாக மாறிவரும் இந்த உலகில், கணினிமய தளத்தில் இருந்து பெண்களை துறத்துவது அவர்களுக்கு ஏற்படும் வீழ்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. இவை பெண்கள் மீதான நேரடி தாக்குதலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், பெண்களின் கருத்து சுதந்திரத்தை அடக்கும் மிரட்டல்களாகும்” என்கிறார் பிளான் இன்டர்நேஷனலின் தலைமை செயல் அதிகாரி ஏனே-பிர்கிட்டே.

பாலியல் துன்புறுத்தல் மிரட்டல்கள்

சமூக ஊடகங்களுக்கு புதிதாக வருபவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் என்கிறார் உகாண்டா நாட்டை சேர்ந்த 20 வயதான கேத்தி.

கேத்தி

மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் அவர் இணையத்தை பயன்படுத்த ஆரம்பித்தார். ஒரு டெய்லராக இருக்கும் அவருக்கு, தன்னை திசை திருப்பிக் கொள்ள சமூக ஊடகங்கள் பயன்படுகிறது.

இணையத்தில் தான் சந்தித்த ஒரு நபருடனான அனுபவங்களை கேத்தி அந்த கணக்கெடுப்பின் போது பகிர்ந்து கொண்டார்.

பேஸ்புக்கில் ஒருவர் என் இன்பாக்ஸில் வந்து ‘வணக்கம்’ என்று செய்தி அனுப்பினார். நானும் அவருக்கு வணக்கம் என்று அனுப்பினேன். அவர் நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டார். அதற்கும் நான் பதில் அளித்தேன்.

ஆனால், அதற்கு அடுத்த நாள் நான் எழுந்து பார்த்தபோது, “என் இன்பாக்சில் அவர் நிர்வாண படங்கள் அனுப்பியிருந்தார். எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது” என்கிறார் கேத்தி.

சமூக ஊடகங்களில் நடக்கும் இதுபோன்ற பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப்பையும் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டிருக்கும் ஃபேஸ்புக் இதுகுறித்து கூறுகையில், துன்புறுத்தல்கள், பாலியல் வல்லுறவு மிரட்டல்கள் ஆகியவற்றை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு திறனை பயன்படுத்துவதாக தெரிவிக்கிறது.

“சிறுமிகளையும் பெண்களையும் எங்கள் செயலிகளில் பாதுகாப்பது இருப்பது முக்கியம்.”

இதுதொடர்பாக அரசாங்கங்களும் சட்டங்களை இயற்ற வேண்டும் என்று பிரசாரக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »