Press "Enter" to skip to content

பாங்காங்கில் காவலர்களுடன் மோதும் போராட்டக்காரர்கள் – என்ன நடக்கிறது?

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டக்குழுவினர் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை ஆயிரக்கணக்கணக்கில் திரண்டுள்ளனர். ஆளும் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசுக்கு எதிரான ஜனநாயக இயக்கத்தை முன்னெடுத்த 20க்கும் அதிகமான தலைவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதால், அவர்களை விடுவிக்க வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

“எங்களுடைய நண்பர்களை விடுதலை செய்யுங்கள்” என்று முழக்கமிடும் அவர்களில் பலரும் மாணவர்கள் வழிநடத்தும் இயகத்தின் அடையாள குறியான மூன்று விரல்களில், வணக்கம் செலுத்தி தங்களின் வருகையை பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, பாங்காக்கில் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக, வியாழக்கிழமை காலை முதல் 4 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதித்து அவசர ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதிகாலையிலேயே இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், அமைதி மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட இந்த அவசர நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தொலைக்காட்சியில் அரசு அறிவித்தது.

ஆனால், பாங்காக்கின் ரட்சஸ்பரோங் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கில் திரண்ட போராட்டக்காரர்கள், அமைதி வழியில் போராடுவதாகக் கூறி மூன்று விரல்களை உயர்த்திக் காண்பித்து தங்களுடைய உணர்வை வெளிப்படுத்தினர். அவர்களிடையே பனுபோங் ஜத்னோக் என்ற செயல்பாட்டாளர் உரையாற்றினார். பிறகு இந்த கூட்டம் ஆயிரக்கணக்கில் அதிகரித்தது.

அவர்களை கலைக்க அந்த பகுதிக்கு வந்த கலவர தடுப்பு காவல்துறையினர் அனைவரையும் சூழந்து கொண்டதால், அங்கு இரு தரப்புக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. சில போராட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் கைது செய்யப்படும் காட்சிகளை பார்க்க முடிந்தது.

என்ன கோரிக்கை?

கடந்த ஆண்டு நடந்த சர்ச்சைக்குரிய தேர்தலில் நாட்டின் பிரதமராக அறிவிக்கப்பட்டவர் முன்னாள் ராணுவ தளபதியான பிரயுத் சன் ஒச்சா. ஆனால், தாய்லாந்தில் 2014ஆம் ஆண்டில் கலகம் மூலம் ஆட்சியை அவர் பிடித்ததால் அவருக்கு எதிரான அதிருப்தி அலை தொடர்ந்து அந்நாட்டில் வீசி வருகிறது.

அதன் வெளிப்பாடாக தற்போதைய போராட்டங்கள் காணப்பட்டாலும், இம்முறை அவர்கள் பெரும்பாலான நாட்களை வெளிநாட்டிலேயே கழிக்கும் தாய்லாந்து மன்னரின் அதிகாரத்தை பறிக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டு வருகிறார்கள்.

தாய்லாந்து

தாய்லாந்தில் முடியாட்சிக்கு எதிராக பேசுவதும் விமர்சிப்பதும் கடும் குற்றமாக கருதப்பட்டு நீண்ட கால சிறை தண்டனைக்கும் வழிவகுக்கும்.

இருந்தபோதிலும், அரச குடும்பத்து அதிகார அமைப்பு முறையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் முன்னெப்போதுமில்லாத வகையில் மிகத் தீவிரமாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், வியாழக்கிழமை நடந்த போராட்டத்தில் சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அனொன் நம்பா, மாணவர் செயல்பாட்டாளர் பென்குயின் என்று அழைக்கப்படும் பரித் சிவாரக், பனுசாயா சித்திஜிராவத்தனக்குல் ஆகியோர் குறிப்பிடத்தவர்கள் என்று அங்குள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

பெண் செயல்பாட்டாளரான பனுசாயாவை அவர் தங்கியிருந்த விடுதி அறைக்குள் நுழைந்த காவல்துறையினர் அவரை இழுத்து தேருக்குள் தள்ளுவதையும் அவரது ஆதரவாளர்கள் அவருக்காக குரல் கொடுப்பதையும் காண்பிக்கும் காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

தாய்லாந்து

36 வயதாகும் அனோன், தாய்லாந்து முடியாட்சிக்கு எதிராக முதன் முதலாக கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிப்படையாக கருத்து வெளியிட்டு, அதுவரை அது தொடர்பாக நிலவி வந்த இறுக்கத்தை போக்கியவராக செயல்பாட்டாளர்கள் கருதுகின்றனர். அவர் வலியுறுத்திய முடியாட்சி சீர்திருத்தம் தொடர்பான 10 அம்ச செயல்திட்டத்தை வகுத்தவர் பனுசாயா.

மாணவர்கள் போராடுவது ஏன்?

தாய்லாந்தில் அரசுக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்து வந்த ஜனநாயக ஆதரவு செயல்பாட்டாளர் வான்ட்சலம் சட்சாக்ஸிட், கடந்த ஜூன் மாதம் கம்போடியாவில் காணாமல் போனார். 2014ஆம் ஆண்டு முதல் அவர் அங்கு தஞ்சம் அடைந்திருந்தார்.

திடீரென அவரது இருப்பிடம் எங்கு என்றே தெரியாத நிலையில், அவரை தாய்லாந்து காவல்துறையினர் கடத்தியிருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனினும், இதை தாய்லாந்து அரசு மறுத்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் அவரை கண்டுபிடிக்கக்கோரி தாய்லாந்தில் மாணவர் சமூகம் பரவலாக வீதிதோறும் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். கடந்த வார இறுதியில் இந்த போராட்டம், சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரியதாக உருவெடுத்தது.

இதனால், 4 பேருக்கு மேல் நாட்டில் எங்கும் எவரும் கூடவோ நடமாடவோ கூடாது என்று தாய்லாந்து அரசு தடை விதித்துள்ளது. ஆனால், அதை பொருட்படுத்தாதவர்களாக ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டக்குழுவினர் அரசுக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »