Press "Enter" to skip to content

தாய்லாந்து போராட்டங்கள்: டெலிகிராம் செயலியை முடக்கிய அரசு

தாய்லாந்தில் தீவிரமாகி வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களை தடுக்கும் நடவடிக்கையாக, அரசு எதிர்ப்பாளர்கள் ஒன்று கூடுவதற்கு பயன்படுத்தும் டெலிகிராம் செயலியை அந்த நாட்டு அரசு முடக்கியுள்ளது.

தாய்லாந்தில் 2014இல் கலகம் மூலம் ஆட்சியைப் பிடித்தவர் பிரதமர் பிரயூத் சன் ஓச்சா. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் இவரது கட்சி முறைகேடு செய்து ஆட்சியில் நீடிப்பதாக ஜனநாயக செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், அவர் பதவி விலக வலியுறுத்திய மாணவர்கள் வழிநடத்தும் போராட்டங்கள் கடந்த மூன்று வாரங்களாக தாய்லாந்தில் தீவிரமாகி வருகின்றன.

கடந்த வாரம் போராட்டக்காரர்களை ஒடுக்க காவல்துறையினர் பலப்பிரயோகத்தி்ல் ஈடுபட்டனர். மேலும், முக்கிய நகரங்களில் நான்கு பேருக்கு மேல் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டது.

அதையும் மீறி ஆயிரக்கணக்கில் திரளும் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்கிறார்கள் அல்லது தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கிறார்கள்.

இருப்பினும், நாளுக்கு நாள் அரசு எதிர்ப்பாளர்களின் போராட்டம் தீவிரமாகி வருகிறது. தாய்லாந்து மன்னர் வெளிநாட்டில் இருப்பதால் அவரது அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்றும் அரசு எதிர்ப்பாளர்களில் ஒரு பிரிவினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

தாய்லாந்தில் முடியாட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பதும் போராடுவதும் நீண்ட கால சிறை அல்லது அதை விட கடுமையான தண்டனைக்கு வகை செய்யும் குற்றமாக கருதப்படும்.

இருப்பினும், அங்கு அரசுக்கு எதிரான போராட்டங்கள் கடுமையாகி வருவது மக்களுக்கு ஆளும் ஆட்சியாளர்கள் மீதும் முடியாட்சி மீதும் மதிப்பு குறைந்து வருவதை காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தாய்லாந்து

அங்கு கடந்த வியாழக்கிழமை அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட பிறகும் போராட்டங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் வெற்றி பெறவில்லை.

தலைநகர் பாங்காக் உள்பட பல நகரங்களில் அரசு எதிர்ப்பாளர்களின் போராட்டம் அமைதிவழியில் நடந்தது.

இந்த நிலையில், போராட்டக்காரர்கள் ஒன்று கூடவும் போராட்ட திட்டங்களை வகுக்கவும் டெலிகிராம் செயலியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஆட்சியாளர்கள், அந்த செயலியை நாட்டில் முடக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

தாய்லாந்தில் இணைய சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களிடமும் டெலிகாரம் செயலியை முடக்குமாறு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக தாய்லாந்து அரசு அனுப்பியிருந்த ஆவணம், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

அந்த கடிதத்தை தாய்லாந்தின் கணினி மயமான பொருளாதார அமைச்சகம், தேசிய ஒலிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆணையத்துக்கு அனுப்பியிருக்கிறது.

அதில், தாய்லாந்தில் இணைய சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களையும், டெலிகிராம் செயலியை முடக்கும்படி கேட்டுக் கொள்ள உங்களுடைய ஆணையத்தின் ஒத்துழைப்பை இந்த அமைச்சகம் நாடுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டெலிகாமில் ஃப்ரீ யூத் குரூப் என்ற அரசு எதிர்ப்பாளர்கள் அங்கம் வகிக்கும் டெலிகிராம் குழுவை கட்டுப்படுத்துமாறு தாய்லாந்து காவல்துறை, கணினி மயமான பொருளாதார அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

தாய்லாந்தில் நடக்கும் போராட்டங்களை, பிரச்சாட்டாய், வாய்ஸ் டி.வி, தி ரிப்போர்டர்ஸ், தி ஸ்டாண்டர்ட் ஆகிய தொலைக்காட்சிகள் மிகவும் விரிவான வகையில் ஒளிபரப்பி வருகின்றன. இதையடுத்து அந்த நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »