Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப்பை தோற்கடித்து அதிபராவாரா பைடன்?

  • பீட்டர் பால்
  • பிபிசி

வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் மேலும் 4 ஆண்டு காலம் தங்கி இருப்பதற்கு இப்போதைக்கு தடங்கலாக இருக்கும் ஒரே நபராக ஜோ பைடன் இருக்கிறார்.

பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்த ஜோ பைடன், வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவர் வெளியுறவுக் கொள்கையில் நிபுணத்துவம் பெற்றவர், வாஷிங்டனில் பல தசாப்தங்கள் பணியாற்றியவர், சொல்லாற்றல் மிக்கவர், சாதாரண மக்களை எளிதில் ஈர்க்கும் தன்மை கொண்டவர், தனிப்பட்ட துயரங்களை துணிச்சலுடன் கடந்து வந்தவர் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அதிபர் பதவி வகிப்பதற்கான வயதைத் தாண்டிவிட்டவர், பதவியை தக்க வைத்துக் கொள்ள எதையும் செய்யக் கூடியவர் (பெண்கள் மீது நாட்டம் கொண்டவர்) என்று அவருடைய எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப்பை வெளியேற்றுவதற்கான தகுதிகள் அவருக்கு உள்ளதா?

வேகமாகப் பேசக் கூடியவர்

இன்றைய வாக்காளர்கள் பலர் பிறக்காத காலத்திலேயே அரசியலில் நுழைந்தவர் ஜோ பைடன்

பிரசார பயணம் பைடனுக்குப் புதியது கிடையாது. அமெரிக்க செனட் உறுப்பினராக வாஷிங்டனில் 1973-ல் (47 ஆண்டுகளுக்கு முன்பு) வாழ்க்கையைத் தொடங்கியவர் அவர். முதன்முறையாக அதிபர் பதவிக்கான போட்டியில் 1987-ல் (33 ஆண்டுகளுக்கு முன்பு) அவர் போட்டியிட்டார். வாக்காளர்களை ஈர்க்கக் கூடியவராகவும், ஒரு டைம்பாம் போன்ற ஆபத்தானவராகவும் அவர் கருதப்படுகிறார்.

முதன்முறையாக அதிபர் பதவிக்கான போட்டியில் பங்கேற்றபோது, கூட்டத்தினர் மத்தியில் பேசுகையில், நிதானம் தவறும் போக்கு காரணமாக அந்த வாய்ப்பு அவருக்கு பறிபோனது. இப்போது மூன்றாவது முறையாக அவர் களத்தில் இருக்கிறார்.

பைடன் மக்கள் மத்தியில் திறமையாக, ஈர்ப்பாகப் பேசக் கூடியவர். ஆனால் சில நேரங்களில் தவறான தலைப்புகளுக்குக் காரணமாக இருந்துவிடுகிறார்.

“என் முன்னோர்கள் பெனிசில்வேனியாவில் வடகிழக்குப் பகுதியில் நிலக்கரி சுரங்கங்களில் வேலை பார்த்தார்கள்” என்று பிரசாரங்களில் அவர் சொல்லத் தொடங்கினார்.

தங்களுக்கு உரிய வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை என்று அவர் கோபம் காட்டினார். ஆனால் அவருடைய முன்னோர்கள் யாருமே நிலக்கரி சுரங்கங்களில் வேலை பார்க்கவில்லை. பிரிட்டன் அரசியல்வாதி நீல் கின்னோக் என்பவருடைய உரையில் இருந்து அந்த வரியை (மற்றும் பல வரிகளை) அவர் எடுத்து பயன்படுத்தியுள்ளார். கின்னோக்கின் உறவினர்கள் உண்மையிலேயே சுரங்கத் தொழிலாளர்களாக இருந்தனர்.

“ஜோவின் வெடிகுண்டுகள்” என கூறப்பட்ட பலவற்றில், முதலாவது விஷயமாக அது அமைந்தது.

தன்னுடைய அரசியல் அனுபவம் பற்றி 2012-ல் பெருமையாகக் குறிப்பிட்ட பைடன், குழப்பமாக இருந்த ஒரு கூட்டத்தில் இவ்வாறு கூறினார்: “மக்களே, எனக்கு எட்டு அதிபர்களைத் தெரியும். அதில் மூன்று பேரை அந்தரங்கமாக அறிவேன்” என்று கூறினார். நெருக்கமான நட்பு கொண்டிருந்தேன் என்பதற்குப் பதிலாக, அவர்களுடன் பாலியல் உறவு கொண்டிருந்தேன் என்ற அர்த்தத்தை அவர் ஏற்படுத்தி விட்டார்.

பராக் ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் 2009 முதல் 2017 வரையில் துணை அதிபராக பைடன் இருந்தார்.

2009ல் பராக் ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் இவர் துணை அதிபராக இருந்தார். பொருளாதாரத்தில் “நாம் தவறாகப் போவதற்கு 30 சதவீத வாய்ப்புகள் உள்ளன” என்று அப்போது பைடன் கூறினார்.

முதலாவது கருப்பர் இன அதிபருடன் சேர்ந்து போட்டியிட இவர் தேர்வு செய்யப்பட்டதே அதிர்ஷ்டமான விஷயம். `

`ஆப்பிரிக்க – அமெரிக்கர்களில் தெளிவாகப் பேசும், பளிச்சென்று, சுத்தமாக, நல்ல தோற்றம் உள்ள முதலாவது முக்கிய நபராக இருக்கிறார்” என்று ஒபாமா பற்றி கூறியதன் பிறகும் அவருக்கு அந்த வாய்ப்பு தரப்பட்டது.

இந்த கருத்துக்குப் பிறகும், இப்போதைய வேட்பாளர் தேர்வுக்கான வாக்கெடுப்பில் பைடனுக்கு ஆதரவாக கருப்பர் இன வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்தனர். ஆனால் சார்லமேக்னே தா காட் என்ற கருப்பர் வானொலி நிகழ்ச்சியாளரின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், “நீங்கள் என்னை ஆதரிப்பதா அல்லது டிரம்பை ஆதரிப்பதா என்பதை முடிவு செய்வதில் பிரச்சினை இருந்தால், நீங்கள் கருப்பர் கிடையாது” என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஒற்றை வரியைக் கொண்டு ஊடகங்களில் சர்ச்சை விவாதங்கள் நடைபெறுகின்றன. இதையடுத்து ஆப்பிரிக்க – அமெரிக்கர்களின் வாக்குகள் தனக்கு தான் கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கை கொண்டவராக இல்லை என்று பைடனை காட்டுவதற்கு அவருடைய பிரச்சார துறையினர் முயற்சிகள் செய்து வருகின்றனர்.

“பிரசாரங்களில் தயாரிப்பு இல்லாமல் பைடன் பேசும் கருத்துகள், எப்படியாவது ஆதரவு வாக்குகள் மாறாமல் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கிலேயே உள்ளன” என்று கடந்த ஆண்டு நியூயார்க் இதழின் செய்தியாளர் ஏன் எழுதினார் என்பதை இப்போது எளிதில் புரிந்து கொள்ளலாம்.

பிரசார அனுபவம் மிக்கவர்

சில அரசியல்வாதிகளைப் போல அல்லாமல், வாக்காளர்களை சந்திக்கும்போது பைடன் சௌகரியமாக பேசக் கூடியவரல்ல.

ஆனால் அவருடைய பேச்சாற்றலில் கெடுதலான ஒரு பக்கம் இருக்கிறது. அரசியல்வாதிகள் கவனமாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் பேட்டிகள் தரும் தொழில்நுட்பம் நிறைந்த காலத்தில், அவர் எதார்த்தமான அரசியல்வாதியாக இருக்கிறார்.

குழந்தைப் பருவத்தில் கஷ்டப்பட்ட காலத்தின் நினைவுகள் உள்ள நிலையில், அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளைத் தேர்வு செய்து பேசுவது தனக்குப் பிடிக்காது என்றும், மனதில் பட்டதைப் பேசுவதாகவும் அவர் கூறுகிறார்.

அமெரிக்காவின் தொழிலாளர்கல் மத்தியில், முன்தயாரிப்பு இல்லாத உரைகள் மூலம் பேசி அவர்களை ஈர்க்கும் திறன் உள்ளவராக பைடன் இருக்கிறார். பிறகு கூட்டத்தில் இறங்கி கை குலுக்குதல், தட்டிக் கொடுத்தல், செல்பிக்கள் எடுத்துக் கொள்வது போன்ற வெள்ளித்திரை நட்சத்திரத்தைப் போன்ற செயல்பாடுகளிலும் ஈடுபடுகிறார்.

அமெரிக்க செனட் தேர்தல்களில் ஏழு முறை பைடன் வெற்றி பெற்றுள்ளார்.

“தொழிலாளர்களை அரவணைக்கும் வகையில் பேசுகிறார், சில நேரம் உடல் ரீதியாகவும் அணைத்துக் கொள்கிறார்” என்று அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் செயலாளர் மற்றும் அதிபர் பதவிக்கான வேட்பாளராக இருந்த ஜான் கெர்ரி நியூயார்க் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். “அவர் மிகவும் தந்திரசாலி அரசியல்வாதி. எல்லாமே உண்மையானவை. எதுவும் நடிப்பு கிடையாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் எந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமாக இருக்கிறார் என்பது ஒரு பிரச்சனையாக இருக்கிறது.

புகார்கள்

தன்னுடைய நடத்தை குறித்து பெண்களின் பல புகார்களுக்கு பைடன் ஆளாகியுள்ளார்.

பைடன் முறைதவறி தொடுதல், கட்டி அணைத்தல் அல்லது முத்தமிடுதல் செயல்களில் ஈடுபட்டார் என்று கடந்த ஆண்டு எட்டு பெண்கள் குற்றஞ்சாட்டினர். பொது நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு வாழ்த்து சொல்லும் போது பைடன் எந்த அளவுக்கு நெருக்கமாக காட்டிக் கொள்கிறார் என்பது குறித்து அமெரிக்க செய்திச் சேனல்கள் காணொளிக்களை ஒளிபரப்பு செய்தன. சில நேரங்களில் தலைமுடியின் வாசனை தெரியும் அளவுக்கு நெருக்கமாக செல்வதாகவும் காட்சிகள் வெளியாயின.

தன்னுடை கலந்தாடல்களில் “அதிக கவனம் செலுத்துவதாக” பைடன் உறுதி அளித்தார்.

இருந்தபோதிலும், 30 ஆண்டுகளுக்கு முன்பு பைடனின் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்த காலத்தில், சுவரின் மீது சேர்த்து பிடித்துக் கொண்டு பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டார் என்று கடந்த மார்ச் மாதம் தாரா ரீடே என்ற பெண்மணி புகார் கூறியுள்ளார்.

இந்தப் புகாரை பைடன் மறுத்துள்ளார். “நிச்சயமாக அப்படி நடக்கவில்லை” என்று அவருடைய பிரச்சாரத் துறையினர் கூறியுள்ளனர்.

அதிபர் டிரம்ப் மீது ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பெண்கள் இதுபோன்ற பாலியல் அத்துமீறல் புகார்களைக் கூறியுள்ளதை, பைடனின் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுவார்கள். அதற்காக எத்தனை பேர் இப்படி கூறினார்கள் என்ற போட்டியாக இதை வைத்துக் கொள்ள முடியுமா என்று அவர்கள் கேட்கக்கூடும்.

``தாக்குபிடித்து நிற்பவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்'' என்பது சமீப ஆண்டுகளாக, பொதுவான கோஷமாக இருக்கிறது.

#MeToo இயக்கம் தீவிரம் அடைந்த பிறகு, பெண்களை சமூகம் நம்ப வேண்டும் என்று பைடன் உள்ளிட்ட ஜனநாயகக் கட்சியினர் கூறி வருகின்றனர். எனவே, இந்தப் புகார்களைப் புறக்கணிக்க முயல்வது, இயக்கவாதிகளுக்கு அசௌகர்யமான நிலையை ஏற்படுத்தும்.

ரீடே சமீபத்தில் அளித்த டி.வி. பேட்டியில், “என்னைப் பற்றி அவருடைய ஆதரவாளர்கள் மோசமாகப் பேசுகின்றனர், சமூக ஊடகங்களில் கருத்துகள் கூறுகின்றனர்” என்று கூறியுள்ளார்.

“அவராக சொல்லவில்லை. ஆனால் பாதுகாப்பாக இருப்பதாக பிரச்சாரம் செய்வது கபட நாடகமாக உள்ளது – பாதுகாப்பான நிலை கிடையாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகார்களை பைடனின் ஆதரவு பிரசார அணியினர் மறுத்துள்ளனர்.

அதே தவறுகளைத் தவிர்த்தல்

2016 தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் இன்னும் அதிக அனுபவம் கொண்ட வேட்பாளராக இருந்தார். ஆனால் டொனால்டு டிரம்பிடம் தோல்வி அடைந்தார்.

கடந்த காலத்தில் இது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், பைடனின் செயல்பாட்டின் ஸ்டைல் குறித்து அவருடைய ஆதரவாளர்கள் நம்பிக்கையாக உள்ளனர். எளிதில் அணுக முடியாதவராக இல்லாமல், சாதாரண மக்களுடன் கனிவாகப் பழகும் தன்மை, அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் முந்தைய வேட்பாளர்கள் சிக்கிக் கொண்ட அதே வலையில் சிக்காமல் காப்பாற்றும் என்கிறார்கள்.

பைடனுக்கு வாஷிங்டனில் நிறைய அனுபவம் இருக்கிறது. செனட்டில் 3 தசாப்த காலமாக இருந்துள்ளார். ஒபாமா காலத்தில் எட்டு ஆண்டுகள் துணை அதிபராக இருந்துள்ளார். ஆனால் இதுபோன்ற பெரிய பணித் திறன் விவரங்கள் எப்போதும் உதவிகரமாக இருப்பது கிடையாது.

அல் கோரே (பிரதிநிதிகள் சபையில் எட்டு ஆண்டுகள், செனட்டில் எட்டு ஆண்டுகள், துணை அதிபராக எட்டு ஆண்டுகள்), ஜான் கெர்ரி (செனட்டில் 28 ஆண்டுகள்), ஹிலாரி கிளின்டன் (முதல் குடிமகளாக எட்டு ஆண்டுகள், செனட்டில் எட்டு ஆண்டுகள்) ஆகியோர், சமீப கால அதிபர் தேர்தல்களில், குறைந்த அனுபவம் கொண்ட குடியரசுக் கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்க முடியாமல் போனது.

மாற்றத்தை உருவாக்குவேன் என்று கூறி 2008இல் ஒபாமா பிரசாரம் செய்தார். ஆனால் அதே பிரசாரத்தை செய்வது பைடனுக்கு கடினமாக இருக்கும்.

பைடன் அடிமட்ட அளவில் மக்களை ஈர்க்கக் கூடியவர் என்பதால், அதுபோன்ற பின்னடைவு அவருக்கு ஏற்படாது என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

வாஷிங்டனில் பணியாற்றியவர்களைக் காட்டிலும், வெள்ளை மாளிகையில் புதிதாகக் குடியேறி நிர்வாகத்தை மாற்றக் கூடியவருக்கு வாக்களிப்போம் என்பதை அமெரிக்கர்கள் பல முறை நிரூபித்திருக்கிறார்கள்.

ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் உயர்நிலை அரசியல் ஈடுபாடு கொண்டவர் என்ற நிலையில், பைடன் அதுபோல கூறிக் கொள்வது சாத்தியமற்றது.

அவர் நீண்டகாலம் வாஷிங்டனில் இருந்து பணியாற்றியுள்ளார் என்பதை அவருக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள்.

நீண்ட வரலாறு

முதலில் 1987இல் அதிபர் பதவிக்கு பைடன் போட்டியிட்டார்

கடந்த சில தசாப்தங்களில் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளிலும் பைடன் ஈடுபாடு கொண்டிருக்கிறார் அல்லது அதுபற்றி ஏதாவது கூறியிருக்கிறார். இப்போதைய அரசியல் சூழ்நிலையில், அந்த முடிவுகள் நல்லவையாக பார்க்கப்படாமல் போகலாம்.

1970களில், அரசுப் பள்ளிக்கூடங்களில் இன ஒற்றுமையை உருவாக்கும் வகையில், அருகில் உள்ள நகரங்களுக்குப் பேருந்தில் குழந்தைகளை அழைத்துச் செல்லும் நடைமுறைகளை எதிர்த்த பிரிவினைவாதிகளை அவர் ஆதரித்துள்ளார். அவருடைய பிரச்சாரத்தில் அவருக்கு எதிராக இந்த விஷயம் திரும்பத் திரும்ப பயன்படுத்தப் படுகிறது.

பைடன் “விரும்புதலுக்கு உகந்தவர் அல்ல” என்று ஒபாமாவின் பாதுகாப்புத் துறை செயலாளர் ராபர்ட் கேட்ஸ் கூறியதை குடியரசுக் கட்சியினர் சுட்டிக்காட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். “கடந்த தசாப்தங்களில் ஏறத்தாழ ஒவ்வொரு முக்கியமான அரசியல் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு விஷயங்களில் அவர் தவறாக செயல்பட்டிருக்கிறார்” என்று ராபர்ட் கேட்ஸ் கூறியதையும் குடியரசுக் கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிரசாரம் சூடுபிடிக்கும் போது இதுபோல பல விஷயங்களை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

குடும்பத்தின் துயரம்

பைடனின் முதல் மனைவி நெய்லியா தேர் விபத்தில் இறந்தார். அவருடைய மகளும் அதில் உயிரிழந்தார்.

பல அரசியல்வாதிகளைக் காட்டிலும், பைடன் பிறரிடம் நெருக்கமாக இருப்பதற்கு முக்கிய காரணம் – நம் எல்லோரையும் பாதித்த விஷயமாக உள்ளது – அது மரணம்.

செனட்டுக்கு முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டு, பதவி ஏற்கும் சமயத்தில் அவருடைய மனைவி நெய்லியாவும், மகள் நவோமியும் தேர் விபத்தில் மரணம் அடைந்தனர். அவருடைய இரு மகன்கள் பியூ, ஹன்டர் ஆகியோர் அந்த விபத்தில் காயமடைந்தனர்.

பைடனின் மகன் பியூ டெலாவேர் அட்டர்னி ஜெனரலாகவும், இராக்கில் ராணுவ வீரராகவும் சேவை செய்துள்ளார்.

பின்னர் 2015 ஆம் ஆண்டில் மூளையில் கட்டி ஏற்பட்ட காரணத்தால், 46வது வயதில் பியூ இறந்துவிட்டார்.

இளம் வயதில் தனக்கு நெருக்கமானவர்கள் மரணம் அடைந்துவிட்டதால், அமெரிக்கர்களுடன் அவர் உறவு கொண்டாடுகிறார். தன்னுடைய அரசியல் அதிகாரம் மற்றும் சொத்துகள் பற்றி கருதாமல், தன்னைப் போன்ற துயரத்தை சந்தித்தவர்களுக்கு அனுதாபம் காட்டுகிறார்.

ஆனால் அவருடைய இன்னொரு மகன் ஹன்டர் தொடர்பான குடும்ப விவகாரம் மிகவும் மாறுபட்டதாக இருக்கிறது.

அதிகாரம், ஊழல் மற்றும் பொய்கள்?

ஹன்டர் பைடன் தன் தந்தையின் அரசியல் வாழ்வுக்கு சிக்கல்களை ஏற்படுத்தினார்.

ஹன்டர் வழக்கறிஞராகி, அதிகார வட்டத்தில் செல்வாக்கு செலுத்துபவராக இருந்தார். பின்னர் அவருடைய தனிப்பட்ட வாழ்வு தாறுமாறாகிப் போனது. அவர் போதை மருந்துகள், மது அருந்துவதாகவும், உடைகளைக் களையும் நடனம் நடைபெறும் கிளப்களுக்கு செல்கிறார் என்றும் கூறி அவருடைய முதல் மனைவி விவாகரத்து பெற்றார். கொக்கைன் போதை மருந்து பயன்படுத்தியதாக ஆய்வில் தெரிய வந்ததை அடுத்து அமெரிக்க கடற்படை முன்பதிவு பிரிவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

சீனாவைச் சேர்ந்த எரிசக்தி தொழிலதிபர் தனக்கு ஒரு வைரம் கொடுத்ததாக நியூயார்க் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அந்தத் தொழிலதிபர் ஊழல் செயலில் ஈடுபட்டதாக பிறகு சீனா விசாரணை நடத்தியது.

தனது தனிப்பட்ட வாழ்க்கையை ஹன்டர் பொதுவான செய்திகளாக்கிவிட்டார் (கடந்த ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஒரு வாரத்துக்கு முன்பு அந்தப் பெண்ணை அவர் சந்தித்திருந்த நிலையில் திருமணம் நடந்தது.). ஹன்டர் ஏராளமாக பணம் சம்பாதித்தது, அவருடைய தந்தைக்கு எதிரான செய்திகளாக மாறின.

போதை மருந்து அடிமைப் பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சிப்பவர்கள் மீது அமெரிக்கர்கள் பலர் அனுதாபம் காட்டுவார்கள். ஆனால், நல்ல சம்பளத்துடன் கூடிய பணிகளிலும் அதேசமயத்தில் அவர் இருந்தார். பைடன்களை போன்ற உயர்நிலை அரசியல்வாதிகளின் குடும்பத்தினரால் எந்த மாதிரி மாறுபட்ட வாழ்வை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று காட்டுவதாக அது கருதப்படுகிறது.

பதவிநீக்கதீர்மானம்

அதிபர் டிரம்புக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. செனட் அவரை விடுவித்த காரணத்தால், பதவியில் இருந்து நீக்கப்படவில்லை.

உக்ரைனில் நல்ல சம்பளத்தில் அவர் வேலையில் இருந்தார். ஹன்டர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அதிபர் டிரம்ப் விசாரிக்கும் நிலை வரை அது சென்றது.

அந்தத் தொலைபேசி அழைப்பு டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கு அவருக்கு எதிராக சமீபத்தில் பதவி நீக்கத் தீர்மானம் வருவதற்குக் காரணமாக இருந்தது (அது தோல்வி அடைந்துவிட்டது). இந்த அரசியல் குழப்பத்தில் தனக்கு ஈடுபாடு இல்லை என்பதை பைடன் சாதகமாகக் கருதக்கூடும்.

வெளிநாட்டு விவகாரங்கள்

உலக அரங்கில் பைடனுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது.

தூதரக உறவில் அனுபவம் மிகுந்தவராக பைடன் கருதப்படுகிறார். எனவே வெளிநாட்டில் ஊழல் புகார் என்பது பைடனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். முன்பு இவர் வெளிநாட்டு உறவுகள் செனட் குழுயின் தலைவராக இருந்தார். “கடந்த 45 ஆண்டுகளில் உலகின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் சந்தித்திருக்கிறேன்” என்று அவர் பெருமையாக சொல்லியிருக்கிறார்.

அதிபர் பதவி வகிப்பதற்கான அனுபவம் கொண்டவராக பைடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையை வாக்காளர்களிடம் ஏற்படுத்துவதாக இது இருக்கும். ஆனால் அந்தத் துறையில் அவருடைய செயல்பாடுகள் எந்த அளவுக்கு வாக்காளர்களை ஈர்க்கும் என்பதை ஊகிப்பது சிரமமான விஷயமாக இருக்கிறது.

அவருடைய அரசியலின் பெரும்பகுதியைப் போல, இதுவும் மிதமான நடுத்தர நிலையிலானதாகவே கருதப்படுகிறது.

1991 வளைகுடா போருக்கு எதிராக அவர் வாக்களித்தார், 2003ல் இராக்கில் நுழைவதற்கு ஆதரவாக வாக்களித்தார். அதில் அமெரிக்கா ஈடுபட்டதை விமர்சித்தார்.

முதலாவது வளைகுடா போருக்கு எதிராக வாக்களிக்க பைடன் முடிவு எடுத்த காரணத்தால் தான் 1992இல் அதிபர் பதவிக்கு போட்டியிட வேண்டாம் என அவர் முடிவு செய்தார் என நம்பப்படுகிறது.

இயல்பாகவே எச்சரிக்கையுடன் இருக்கும் பைடன், ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட சிறப்பு அதிரடிப் படையினரின் தாக்குதல் வேண்டாம் என ஒபாமாவுக்கு ஆலோசனை கூறினார்.

பைடன் பற்றி அந்த அல்-காய்தா தலைவருக்கு பெரிய எண்ணம் எதுவும் இல்லை என்று தெரிகிறது. சி.ஐ.ஏ. வசப்படுத்தி வெளியிட்ட ஆவணங்களைப் பார்த்தால், ஒபாமாவை குறிவைத்து செயல்படுமாறு தனது கொலைப்படையினருக்கு பின்லேடன் அறிவுறுத்தினாரே தவிர, அப்போது துணை அதிபராக இருந்த பைடன் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று தெரிகிறது. “அதிபர் பதவியைக் கையாள பைடன் ஆயத்தமாக இல்லாதவர், அதனால் அமெரிக்காவில் நெருக்கடி ஏற்படும்” என்று பின்லேடன் கருதியதாகத் தெரிகிறது.

போருக்கு எதிரான தீவிர கருத்துகளைக் கொண்ட ஜனநாயகக் கட்சியின் இளம் ஆதரவாளர்களுக்கு பைடனின் கருத்துகள் பிடிக்காமல் போகலாம். பெர்னி சான்டர்ஸ் அல்லது எலிசபெத் வாரென் போன்ற சிந்தனை கொண்டவர்களாக இளைஞர்கள் இருக்கிறார்கள். ஈரானின் ராணுவ ஜெனரல் குவாசிம் சுலைமானி கடந்த ஜனவரி மாதம் டிரோன் விமான தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட சமயத்தில், அதிபர் ட்ரம்ப் செயலைக் கொண்டாடியவர்களுக்கு, பைடன் போருக்கு எதிரானவராகத் தோன்றுகிறார்.

கொள்கை சார்ந்த அவருடைய திட்டங்கள் அதிகமாக இதுபோலவே இருக்கின்றன. ஜனநாயக கட்சியினரை உற்சாகப்படுத்துவதாக இல்லை. நடுத்தர அளவிலானதாகவே இருக்கின்றன. ஆனால், யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யாத வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றுவிட முடியும் என்று பைடன் நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

நவம்பர் மாதம் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டியதில்லை, அவருக்கு வாக்களித்தால் போதும்.

அனைத்துமா அல்லது ஏதுமில்லையா

வென்றாலும் தோற்றாலும் பைடனின் அரசியல் வாழ்க்கையில் இதுதான் கடைசி அத்தியாயமாக இருக்கப் போகிறது.

வெள்ளை மாளிகைக்கான போட்டியில் அதிபர் டிரம்ப்பை விட 5 முதல் 10 புள்ளிகள் வரை பைடன் முன்னிலையில் இருப்பதாக வாக்கெடுப்பு முடிவுகள் தொடர்ந்து காட்டி வருகின்றன. ஆனால் நவம்பர் தேர்தலுக்கு இன்னும் நீண்ட அவகாசம் இருக்கிறது. நிச்சயமாக பல கடுமையான களங்களை காண வேண்டியிருக்கும்.

கருப்பு அமெரிக்கர்களுக்கு எதிராக காவல் துறையின் வன்முறைகளைக் கண்டித்து நடந்த போராட்டங்களை ஆதரிப்பதில் இரு வேட்பாளர்களும் மோதிக் கொண்டனர். கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலை அரசு கையாண்டது குறித்தும் இருவரும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர்.

முகக்கவச உறைகள் கூட அரசியல் பிரச்சினையாகியுள்ளது. பைடன் எப்போதும் முகக்கவச உறை அணிந்து கொண்டு வெளியில் செல்லும் படங்கள் வெளியாகின்றன. ஆனால் டிரம்ப் முகக்கவச உறை அணிவதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்.

சிலநேரங்களில் சிறிய விஷயங்கள் பேசப்படுவது, நற்பெயரை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்வதைக் காட்டிலும், பெரிய விஷயங்களும் இருக்கும்.

பைடன் வெற்றி பெற்றால், நீண்ட கால அரசியல் வாழ்விற்கு மகுடம் சூட்டியது போல இருக்கும்; அவர் தோல்வி அடைந்தால், “அமெரிக்காவின் அதிபராக இருக்கத் தகுதியற்ற முழுமையான நபராக” மற்றும் “நம்பகத்தன்மை அற்றவராக” அவர் கருதும் ஒருவரிடம் வெள்ளை மாளிகையை மேலும் 4 ஆண்டுகளுக்கு ஒப்படைப்பதாக இருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு 2016 அதிபர் தேர்தலுக்கான போட்டியில் ஈடுபடுவது பற்றிக் குறிப்பிட்ட பைடன், “அதிபராக இல்லாமல் மகிழ்ச்சியாக சாக விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

இனிமேலும் அவரால் அப்படி சொல்ல முடியாது.

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

21 அக்டோபர், 2020, பிற்பகல் 2:25 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »