Press "Enter" to skip to content

அதிபர் தேர்தல் விவாதம் குறித்து அமெரிக்க வாழ் தமிழர்களின் கருத்து என்ன?

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியாளர்களிடையேயான நேரடி விவாதம் இன்று டென்னசி மாநிலத்திலுள்ள நாஷ்வில் நகரில் பெல்மோண்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்த விவாதம் குறித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் சிலர் தங்களின் கருத்துக்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.

வாஷிங்டனை சேர்ந்த சொ. சங்கரபாண்டி, “தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், முன்னாள் துணையதிபர் ஜோ பைடனுக்குமிடையே நிலவும் கடுமையான போட்டியில் இன்றைய நேரடி விவாதம் மிக ஆவலுடனும், அதே நேரத்தில் அச்சத்துடனும் எதிர்பார்க்கப்பட்டது எனலாம்.

முதல் விவாதத்தின் பொழுது அதிபர் டிரம்பு நடுவரின் வேண்டுகோளுக்குச் சற்றும் செவி மடுக்காமல் எதிரணியின் ஜோ பைடனைப் பேசவிடாமல் கடுமையாகக் குறுக்கிட்டதும், அவர் நடந்துகொண்ட விதமும்தான் காரணம். எதிரணியின் ஜோ பைடனும் கூட அவருக்கு ஈடுகொடுக்கும் விதமாக வழக்கத்துக்கு மாறாகச் சற்று மோசமாகவே நடந்துகொண்டார்.

மேலும் டிரம்பின் கோவிட் தொற்று நோயினால் இரண்டாம் விவாதம் நடத்தப்படவேயில்லை. மூன்றாம் விவாதமான இன்று அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக எதிரணிப் போட்டியாளரைக் குறுக்கீடு செய்யாமலிருக்க அவர்களுடைய ஒலிவாங்கிகளைக் (மைக்) கட்டுப்படுத்தும் பொத்தான்கள் வைக்கப்பட்டன. அதனாலேயே இன்றைய விவாதம் ஒழுங்காக நடந்தது. மேலும் இன்றைய விவாதத்தை மட்டுறுத்திய என்பிசி நிறுவனத்தின் பெண் செய்தியாளர் கிறிஸ்டன் வெல்க்கர் மிகச்சிறப்பாகக் கையாண்டார் என்பதும் பாராட்டப்படுகிறது.

டிரம்ப் வழக்கம் போல் அதிரடியாகப் பல குற்றச்சாட்டுகளை ஜோ பைடன் மேல் அடுக்கினாலும், ஜோ பைடன் அதிகம் கோபமடையாமல் தான் சொல்ல வந்த கருத்துகளை ஆணித்தரமாக எடுத்துவைத்தார்.

அதிபர் டிரம்பின் அலட்சியப்போக்கால் கோவிட் தொற்றால் 200000 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர் என்றார் பைடன். அதிபர் டிரம்பு அவரை எதிர்கொள்ள முடியாமல் தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டியது தன்னுடைய பொருட்டென்றாலும், தன் கைக்குட்பட்டதல்ல, சீனாவே காரணமென்று மீண்டும் மீண்டும் சொன்னார்.

பொருளாதாரப் பேரிழப்பைத் தான் இதுவரை தடுத்துவந்துள்ளதாகவும், ஜோ பைடனுக்கு அதில் அக்கறையில்லையென்றும் அதிபர் டிரம்பு கூறினார். அதை மறுத்துப் பேசிய ஜோ பைடன் தன்னுடைய பொருளாதரத் திட்டத்தைப் பற்றியும், எப்படி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போகிறார் என்பது குறித்தும் பேசினார்.

அமெரிக்காவில் தற்பொழுது நிலவிவரும் இனவெறுப்பான சூழல் குறித்து பேசிய டிரம்ப் தான் மட்டுமே அமெரிக்காவின் வரலாற்றில் கருப்பின மக்களுக்கு அதிகம் நன்மை செய்ததாகத் கூறினார். குறிப்பாக அதிபர் ஒபாமாவும், ஜோ பைடனும் ஏதும் செய்யாமல் தங்கள் காலத்தை வீணடித்தார்கள் என்று குற்றஞ்சாட்டினார்.

வாக்கு மொத்தமாகப் பார்க்கப்போனால் கடந்த விவாதத்தைக் காட்டிலும் இன்றைய விவாதத்தை அதிபர் டிரம்பு தன்மையாக எதிர்கொண்டாலும், வைக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பார்க்கப்போனால் ஜோ பைடன் விவாதத்தில் வெற்றிபெற்றது போல் எனக்குத் தோன்றுகிறது.” என்கிறார்.

`ஆக்கப்பூர்வமான ஒரு விவாதம்`

டிரம்ப்

மேரிலாந்தை சேர்ந்த மணி குமரன் இந்த விவாதம் ஒரு ஆக்கப்பூர்வமான விவதமாக இருந்தது என்கிறார்.

“இது மிகவும் கண்ணியமான மற்றும் ஊக்கமளிக்கும் விவாதமாக இருந்தது. இது அமெரிக்கா எதை நோக்கி செல்கிறது என்பதற்கான இரண்டு வெவ்வேறு பார்வைகளை முன்வைக்கும் வகையில் அமைந்திருந்தது.

தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று இன்னும் முடிவு செய்யாதவர்கள் யாராவது இருந்தால், அவர்களுக்கு இந்த விவாதம் இரு வேட்பாளர்களுக்கு இடையிலான வேறுபாட்டை அறிய உதவும். இந்த தேர்தலின் இரு பிரதான விவகாரங்களான கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் மற்றும் பொருளாதாரம் குறித்து மட்டுமின்றி மூன்றாவது முக்கிய விடயமாக கருதப்படும் இனவாதம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் இரு வேட்பாளர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். மேலும், வேட்பாளர்கள் ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையிலும் விமர்சித்தனர்.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்று மிகவும் தீவிரமான பிரச்சனை என்பதை டிரம்ப் இன்னமும் புரிந்துகொண்டதாக தெரியவில்லை. கோவிட்-19 குறித்த அவரது நிலைப்பாடு இன்னமும்கூட அப்படியே நீடிக்கிறது. டிரம்ப் பொருளாதாரம் சார்ந்த விவகாரங்களில் மட்டுமே கவனத்தை செலுத்தியதை போன்று தெரிகிறது.

ஆனால், பைடனோ கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்று குறித்து வேறுபட்ட பார்வையை முன்வைத்ததோடு, ‘இயற்கைக்கு உகந்த தொழில்துறைகளில் வேலைவாய்ப்புகளை’ உருவாக்குவதை முதலாக கொண்ட பொருளாதாரத்தை கட்டமைப்பது குறித்த எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

இனவாத பிரச்சனை குறித்து டிரம்ப் நேரடியாக கருத்துத் தெரிவிக்கவில்லை. மேலும், அவர் குற்றவியல் நீதி சீர்திருத்தத்தைப் பற்றி பேசிய போதிலும், அதை சிறுபான்மையினருடன் தொடர்புபடுத்தி அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வாய்ப்பை டிரம்ப் இழந்தார்.

“வெற்றி மக்களை ஒன்றிணைக்கும்” என்று கூறிய டிரம்ப், பெரும் பணக்காரர்களின் செல்வம் எப்படி குறுகிய காலத்தில் 800 பில்லியன் டாலர்கள் அதிகரித்தது என்பது பற்றி எதுவும் கூறவில்லை. அதே நேரத்தில் நாடு முழுவதும் ஒரு மணி நேரத்திற்கான குறைந்த பட்சம் ஊதியத்தை 15 டாலர்களாக நிர்ணயிப்பது குறித்து அவரால் எவ்வித வாக்குறுதியையும் வழங்க முடியவில்லை. எனவே, இங்கு அவர் கூறிய வெற்றி யாருடைய நலனை குறிக்கிறது என்பது குறித்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.” என்கிறார் மணி குமரன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »