Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: ‘அமெரிக்காவில்தான் தூய்மையான காற்று, தண்ணீர்’ – டிரம்ப் கூறியது உண்மையா?

  • உண்மை சரி பார்ப்புக் குழு
  • பிபிசி நியூஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு நடந்த வேட்பாளர்களின் இறுதி விவாதத்தில் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை ஆதரிக்கும் வகையில் பேசிய டொனால்டு டிரம்ப், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவில் காற்று “அசுத்தமாக” உள்ளது என தெரிவித்திருந்தார்.

அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் சூழலில் வியாழனன்று மாலை இந்த விவாதம் நடைபெற்றது.

அதோடு, அமெரிக்காவில்தான் இருப்பதிலேயே தூய்மையான காற்று மற்றும் தூய்மையான தண்ணீர் இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறினார்.

இது உண்மையா என பிபிசியின் உண்மை சரிபார்ப்புக்குழு ஆய்வு செய்தது.

அமெரிக்காவில் தூய்மையான காற்று இருக்கிறது என டிரம்ப் கூறியது சரிதான். ஆனால் தூய்மையான தண்ணீர் குறித்து அவர் கூறியது தவறான தகவல்.

தற்போது இருப்பதிலேயே அமெரிக்காவில்தான் தூய்மையான காற்று இருப்பது பதிவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு கூறுகிறது.

கடந்த சில தசாப்தங்களில் காற்று மாசு அங்கு குறைந்து காணப்படுகிறது.

எனினும் நீர் சுகாதாரம் மற்றும் குடிநீர் என்று வரும்போது, உலகில் அமெரிக்கா 26வது இடத்தில் இருக்கிறது என யேல் பல்கலைக்கழகம் கூறுகிறது.

அமெரிக்காவில்தான் தூய்மையான காற்று, தண்ணீர் இருக்கிறது என்று டிரம்ப் கூறியது உண்மையா?

ஃபின்லாந்து, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள்தான் தூய்மையான தண்ணீருக்கான தரவரிசை பட்டியலில் மேலிடத்தில் இடம்பெற்றுள்ளன.

டிரம்பின் பிற கூற்றுகளும், அதன் உண்மைத் தன்மையும்

அதிபர் டிரம்ப்: கொரோனா வைரஸை கட்டுப்படுத்தியுளோம் – தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது

முடிவு: அமெரிக்காவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) குறையவில்லை.

மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் இன்னும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

கோவிட்-19 கண்காணிப்பு திட்டத்தின்படி, அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 60,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அக்டோபர் மாத தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 50,000 இருந்த எண்ணிக்கை தற்போது உயர்ந்திருக்கிறது.

அதே போல அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து தற்போது மருத்துவமனையில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த மாதம் முழுவதுமே நாள் ஒன்றுக்கு சுமார் 800 பேர் அங்கு உயிரிழக்கிறார்கள்.

டிரம்ப்: 2.2 மில்லியன் மக்கள் கொரோனாவால் உயிரிழப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது

முடிவு: இது தவறானது

“மிக நீண்ட காலம் பெருந்தொற்று இருந்தால்” எவ்வளவு உயிரிழப்புகள் நேரிடும் என்பது குறித்து இம்பிரியல் கல்லூரி, லண்டன் ஆய்வு ஒன்றை நடத்தி இருந்தது.

அமெரிக்காவில்தான் தூய்மையான காற்று, தண்ணீர் இருக்கிறது என்று டிரம்ப் கூறியது உண்மையா?

அப்படியிருக்க அமெரிக்காவில் கொரோனாவால் 2.2 மில்லியன் மக்கள் உயிரிழப்பார்கள் என “எதிர்பார்க்கப்படுவதாக” அந்த ஆய்வு முடிவு கூறவில்லை. மாறாக, போதிய நடவடிக்கைகள் மற்றும் மாற்றங்களை முன்னெடுக்கவில்லை என்றால் இவ்வளவு உயிரிழப்புகள் நேரலாம் என்று கூறியது.

தற்போதுவரை அமெரிக்காவில் சுமார் 2,24,000 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

டிரம்ப்: “முன்கூட்டியே உடல்நல பிரச்சனைகள் இருக்கும் நபர்களுக்கு என தனி திட்டம் வைத்துள்ளேன்”

முடிவு: டிரம்ப் அப்படி ஒரு திட்டம் வைத்திருக்கலாம். ஆனால், இதுவரை அவர் அமெரிக்க மக்களிடம் பகிர்ந்தது இல்லை.

அதிபர் ஒமாபா ஆட்சிக்காலத்தில் கட்டுபடிப்படியாகும் செலவில் உடல்நலப் பாதுகாப்பு சட்டம் என்ற ஒன்று கொண்டுவரப்பட்டது. அதன்படி ஏற்கனவே உடல்நலக் கோளாறுகள் இருக்கும் நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டில் வரும் தொகையை மறுப்பது சட்ட விரோதமானது.

ஆனால், இதனை நீக்க முயற்சிக்கும் டிரம்ப், உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

அதை விட சிறந்த சட்டத்தை கொண்டுவருவதாக டிரம்ப், பல முறை கூறினாலும், அப்படி எதுவும் இதுவரை அவர் பகிர்ந்தது இல்லை.

பைடனின் கூற்றுகளும், அதன் உண்மைத்தன்மையும்

பைடனின் கூற்றுகளும், அதன் உண்மைத்தன்மையும்

பைடன்: “குடியரசு கட்சி ஆளும் மாகாணங்களில்தான் அதிக கொரோனா பாதிப்பு”

முடிவு: இது உண்மையல்ல. குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயகட்சி என இருகட்சிகளின் மாகாணங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

குடியரசுக்கட்சி ஆளும் மாநிலங்களில்தான் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்தார்.

ஆனால் இரு கட்சிகள் ஆளும் சுமார் 40க்கும் மேற்பட்ட அமெரிக்க மாகாணங்களில் கோவிட் பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

கடந்த வாரம் மக்கள் தொகை அடிப்படையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் நார்த் டகோடா, சௌத் டகோடா, மாண்டேனா மற்றும் விஸ்கான்சின் என நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

நார்த் மற்றும் சௌத் டகோடா குடியரசு கட்சி ஆளுநர்களுக்கு கீழ் வந்தாலும், மாண்டேனா மற்றும் விஸ்கான்சின் இரு மாகாணங்களும் ஜனநாயக்கட்சி ஆளுநர்களுக்கு கீழ் வருகிறது. எனினும், இந்த அனைத்து மாகாணங்களிலும் கடந்த 2016 தேர்தலில் அதிபர் டிரம்புக்குதான் அதிக வாக்குகள் கிடைத்தது.

வரைபடம்

பைடன்: டிரம்ப் செயல்களால் சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது.

முடிவு: இது தவறானது.

2017ல் சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை அதிகரித்த பிறகு, இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் இடையேயான இடைவெளி 2018க்கு மேல் வேகமாக குறைந்தது. சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதித்ததை தொடர்ந்தே இந்த போக்கு காணப்பட்டது.

2019ல் இது 308 பில்லியன் டாலர்களாக இதன் மதிப்பு இருந்தது. 2016ல் இருந்த 310 பில்லியன் டாலர்களை விட சற்று குறைந்தது.

2020ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சீனாவுடனான பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டிலும் 130 பில்லியன் டாலர் பற்றாக்குறை ஏற்பட்டது. இது 2019ஆம் ஆண்டை விட 34 பில்லியன் டாலர்களும், 2018ஆம் ஆண்டைவிட சுமார் 53 பில்லியன் டாலர்களும் குறைவாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »