Press "Enter" to skip to content

சாம்சங் குழுமத்தின் தலைவர் லீ குன் ஹி 78 வயதில் காலமானார்

சாம்சங் குழுமத்தின் தலைவர் லீ குன் ஹி தனது 78 வயதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.

அவரது மரணத்திற்கான முழுமையான காரணம் இன்னும் தெரியவில்லை. 2014ஆம் ஆண்டு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போதிலிருந்து இவர் மருத்துவ கவனிப்பில் வாழ்ந்து வருகிறார்.

லி குன் ஹி, சாம்சங் சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கியது எப்படி?

தமது தந்தை உருவாக்கிய சாம்சங் நிறுவனத்தை ஒரு பன்னாட்டு குழுமமாக கட்டியமைத்தவர் லி குன் ஹி. காப்பீடு, கப்பல் நிறுவனம் என தமது நிறுவனத்தை விரிவாக்கியவர் லி.

இவரது காலத்தில்தான் சாம்சங் நிறுவனம் உலகத்தின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக வளர்ச்சி கண்டது.

இவர்தான் தென் கொரியாவின் பெரும் பணக்காரராகவும் இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 21 பில்லியன் டாலர்கள் என்கிறது ஃபோர்ப்ஸ்.

லி பியங் சல்லின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் லி குன் ஹி. லி பியங் சல் தான் 1938 ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனத்தை தொடங்கினார்.

1968ஆம் ஆண்டு தமது குடும்ப நிறுவனத்தில் இணைந்த லி குன் ஹி, தமது தந்தை இறந்த பிறகு அந்நிறுவனத்தின் தலைவராக 1987ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.

சாம்சங்

அவர் பொறுப்பேற்ற சமயத்தில் அந்த நிறுவனம் தரமற்ற குறைந்த விலை பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாக இருந்தது.

லி குன் ஹி பொறுப்பேற்ற பின் அதனை முழுமையாக மாற்றினார். நிறுவனத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.

1993 ஆம் ஆண்டு தமது ஊழியர்களிடம், “உங்கள் மனைவி, குழந்தைகளைத் தவிர மற்ற அனைத்தையும் மாற்றுங்கள்,” என லி கூறி இருக்கிறார். இந்த வசனமும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது. இதன் காரணமாக அவரும் பேசப்பட்டார்.

அவர் பேசியதுடன் நிற்கவில்லை அப்போது தமது நிறுவனம் தயாரித்த 150,000 கைப்பேசிகளை எரித்து இருக்கிறார்.

அவர் ஊடகங்களிடம் எப்போதாவது தான் பேசுவார். சந்நியாசி போல இருக்கிறார் எனப் பெயர் பெற்றதால் அவர் `துறவி அரசர்` என அழைக்கப்பட்டார்.

லி குன் ஹியை சூழ்ந்திருந்த சர்ச்சை

இரண்டாம் உலகப் போருக்கு பின்பு தென் கொரியப் பொருளாதாரத்தை மீட்டதில் இவரது குடும்ப நிறுவனத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது.

ஆனால், அதே சமயம் சர்ச்சைகளிலும் இவர் சிக்காமல் இல்லை. அரசியலையும், வணிகத்தையும் கலப்பதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

முன்னாள் அதிபருக்கு லஞ்சம் கொடுத்தது உள்ளிட்ட குற்றவியல் குற்றங்களுக்காக இவர் இருமுறை தண்டனையும் பெற்றிருக்கிறார்.

வரி முறைகேடு குற்றங்களுக்காக 2008ஆம் ஆண்டு சாம்சங் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார்.

அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் பின்னர் மன்னிப்பு வழங்கப்பட்டது.

2010ஆம் ஆண்டு சாம்சங் தலைவராக மீண்டும் பதவியேற்றார். ஆனால், 2014ஆம் ஆண்டு மாரடைப்பின் காரணமாகப் படுத்த படுக்கையானார்.

லீ ஜே யோங்

இவரது மகன் லீ ஜெ யோங் மீதும் முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் ஊழல் வழக்கு ஒன்றில் 2016ஆம் ஆண்டு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

இந்த வழக்கு தென் கொரியாவில் ‘சேபோல்ஸ்’ என்று அழைக்கப்படும், பணக்காரக் குடும்பங்களின் கட்டுப்பாட்டில் உள்ள, பலம் வாய்ந்த பெரு நிறுவனங்களுக்கு எதிராக மக்களுக்கு அதிகரித்து வரும் கோபத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என அப்போது கூறப்பட்டது.

அரசியல் ஆதாயங்களைப் பெரும் நோக்குடன், தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் குன் ஹெ-வின் நீண்டகால தோழியான சோய் சூன் சில் நடத்தி வந்த தொண்டு நிறுவனங்களுக்கு 36 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நன்கொடை அளித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தென் கொரியாவில் ஊழல் குற்றச்சாட்டு ஒன்றில் ஒரு பெருநிறுவனத்தின் மூத்த அதிகாரிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது அதுவே முதல் முறையாக இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »