Press "Enter" to skip to content

நைல் நதி நீர்ப் பங்கீடு – டிரம்ப்பின் நாட்டாமையை ஏற்குமா ஆப்பிரிக்க நாடுகள்?

உலகின் மிக நீளமான ஆறு நைல் நதி. உலகில் பண்டைய நாகரிகங்களின் தொட்டில் அது. அதனுடன் ஒப்பிடுகையில் தென்னிந்திய ஆறான காவிரி,, சிறு குழந்தையாக இருக்கலாம்.

ஆனால் இந்தியாவுக்குள் மாநிலங்களுக்கு இடையே ஆற்று நீர்ப் பகிர்வுச் சிக்கலைப் பார்த்த நம் நினைவுகளைக் கிளறுகிறது நைல் நதியின் நீரைப் பகிர்ந்து கொள்வதில் நாடுகளுக்கு இடையில் முளைத்துள்ள சிக்கல்.

நாமறிந்த காலத்தில் உலகின் மிக மோசமான பஞ்சத்தையும், பட்டினியையும் பார்த்த ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா, தற்போது தங்கள் நாட்டில் நைல் நதியின் குறுக்கே மிகப் பிரம்மாண்டமான அணை ஒன்றைக் கட்டியுள்ளது. இதில் அமைக்கப்படும் புனல் மின் திட்டம், ஆப்பிரிக்காவிலேயே மிகப் பெரியதாக இருக்கும்.

ஆனால், சிக்கல் என்னவென்றால், எத்தியோப்பியாவுக்குக் கீழே இந்த ஆற்றின் நீரைப் பயன்படுத்தும் எகிப்து, இதே ஆற்று நீரை நம்பியுள்ள சூடான் ஆகிய நாடுகளுக்கு இந்த திட்டம் தண்ணீர்ப் பற்றாக்குறையை ஏற்படுத்தக்கூடும் என்று இந்த நாடுகள் அஞ்சுகின்றன. இதனால் ஒரு சர்வதேச ஆற்றுநீர்ச் சிக்கல் முளைத்துள்ளது.

இந்தச் சிக்கலில் எகிப்துக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எத்தியோப்பியாவின் அணையைத் தகர்க்கும்படி கூறியுள்ளார்.

இது எத்தியோப்பியாவுக்கு எரிச்சலைத் தந்துள்ளது. எந்த விதமான ஆக்கிரமிப்புகளுக்கு அடிபணிய மாட்டோம் என்று எத்தியோப்பியப் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய இந்த அணைக்கு, மகா எத்தியோப்பிய சீர்திருத்த அணை ( கிராண்ட் எத்தியோப்பியன் ரினைசன்ஸ் டேம்) என்று பெயர்.

இந்த அணையை வைத்துக் கொண்டு எகிப்தால் வாழ முடியாது. எனவே அந்தக் கட்டுமானத்தை எகிப்து தகர்க்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார், அமெரிக்க அதிபர் டிரம்ப்.

நைல் நதியை அலைக்கழிக்கும் ஆற்று நீர் சிக்கல் - அணையை உடைக்கச் சொன்ன டிரம்ப்

எனவே அமெரிக்கா இந்த பிரச்சனையில் எகிப்தின் பக்கம் சாய்வதாக கருதுகிறது எத்தியோப்பியா. அது தவிர, ஜூலை மாதம் தொடங்கி புதிதாக கட்டிய இந்த அணையை எத்தியோப்பியா நிரப்பத் தொடங்கிய நிலையில், எத்தியோப்பியாவுக்கு தரும் சில உதவிகளை நிறுத்துவதாக கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா அறிவித்தது.

டிரம்பின் சர்ச்சையான இந்த கருத்தைத் தொடர்ந்து எத்தியோப்பிய வெளியுறவு அமைச்சர், அந்நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதருக்கு அழைப்பானை விடுத்து அனுப்பி அதிபர் டிரம்பின் பேச்சு குறித்து விளக்கம் கேட்டார்.

அணையில் என்ன சர்ச்சை?

எகிப்து தங்கள் நாட்டின் தண்ணீர் தேவையில் பெரும் பங்கை நைல் நதியைக் கொண்டே தீர்த்துக் கொள்கிறது. இந்நிலையில் நைல் நதியின் ஓட்டத்தை எத்தியோப்பியா கட்டுப்படுத்துவதால் தங்கள் நாட்டுக்கு கிடைக்கும் தண்ணீர் அளவு குறையும், இதனால் பொருளாதாரம் பாதிக்கும் என்று எகிப்து கவலைப்படுகிறது.

நைல் நதியை அலைக்கழிக்கும் ஆற்று நீர் சிக்கல் - அணையை உடைக்கச் சொன்ன டிரம்ப்

400 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கட்டப்படும் இந்த அணையின் பணிகள் முடிவடைந்தால், நீல நைல் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் இந்த திட்டம், ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய புனல் மின் திட்டமாக இருக்கும்.

எவ்வளவு விரைவாக இந்த அணையை எத்தியோப்பியா நிரப்புகிறதோ, அவ்வளவு விரைவாக எகிப்து மோசமாக பாதிக்கப்படும். மெதுவாக இந்த அணையை நிரப்புவது பாதிப்பை மட்டுப்படுத்தும் என்று கருதுகிறது எகிப்து.

2011ம் ஆண்டு இந்த அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்குவதாக அறிவித்தது எத்தியோப்பியா. தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த அணை அவசியம் என்று தெரிவித்தது எத்தியோப்பியா. சிக்கலில் தொடர்புடைய எத்தியோப்பியா, எகிப்து, சூடான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா தலைமை வகித்தது. ஆனால், தற்போது இந்த மேற்பார்வைப் பாத்திரத்தை ஆப்பிரிக்க ஒன்றியம் ஏற்றுக்கொண்டுவிட்டது.

எத்தியோப்பிய பிரதமர் என்ன சொன்னார்?

டிரம்ப் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது நேரடியாக எதிர்வினையாற்றவில்லை. ஆனால், அவர் யாருக்கு எதிர்வினையாற்றினார் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. எத்தியோப்பியா இந்த அணையைக் கட்டி முடிக்கும் என்று அவர் சூளுரை கூறியுள்ளார்.

“எத்தியோப்பியா எந்தவிதமான ஆக்கிரமிப்புக்கும் அடி பணியாது. தங்கள் நண்பர்களை மதிப்பதற்கு அல்லாமல் எதிரிகள் சொன்னபடி கேட்பதற்காக முட்டிபோட்டு எத்தியோப்பியர்களுக்குப் பழக்கமில்லை. அதை இப்போதும் செய்யமாட்டோம். எதிர்காலத்திலும் செய்யமாட்டோம். இந்தப் பிரச்சனையில் விடுக்கப்படும் எந்த மிரட்டலும் தவறாக வழிகாட்டப்பட்டது, வீணானது, சர்வதேச சட்டங்களை மீறுவது” என்று கூறியுள்ளார் அபிய் அகமது.

எத்தியோப்பிய வெளியுறவுத் துறை அமைச்சகம் விடுத்த வேறொரு அறிக்கையில், “எத்தியோப்பியாவுக்கும் எகிப்துக்கும் இடையில் போரைத் தூண்டும் வகையில் பதவியில் இருக்கும் ஓர் அமெரிக்க அதிபர் செயல்படுவது எத்தியோப்பியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் உறவு மற்றும் கேந்திர கூட்டுறவைப் பிரதிபலிப்பதாக இல்லை. நாடுகளுக்கு இடையிலான உறவுகளை நிர்வகிக்கும் சர்வதேச சட்டங்களின்படி இது ஏற்புடையதும் அல்ல” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் எப்படி தலையிட்டார்?

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் முன்னிலையில் சூடான் பிரதமர் அப்தெல்லா ஹாம்டோக் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடினார் அதிபர் டிரம்ப்.

நைல் நதியை அலைக்கழிக்கும் ஆற்று நீர் சிக்கல் - அணையை உடைக்கச் சொன்ன டிரம்ப்

இஸ்ரேல் – சூடான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தூதரக உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள ஒப்புக்கொள்ளும் நிகழ்வு அது. இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்கா செய்திருந்தது. அப்போது இந்த எத்தியோப்பிய அணை தொடர்பான பிரச்சனை வந்தது. இந்தப் பிரச்சனையை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள முடியும் என்று டிரம்பும், ஹம்டோக்கும் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஆனால், டிரம்ப் அதை மட்டும் சொல்லவில்லை. “இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை. இப்படியே எகிப்து வாழ முடியாது. இதை நான் சொல்லியுள்ளேன். இப்போது சத்தமாகவும், தெளிவாகவும் சொல்கிறேன். அவர்கள் அந்த அணையைத் தகர்ப்பார்கள். அவர்கள் ஏதாவது செய்தாகவேண்டும்” என்றும் குறிப்பிட்டார் டிரம்ப்.

பேச்சுவார்த்தை எப்படிப் போகிறது?

நைல் நதியை அலைக்கழிக்கும் ஆற்று நீர் சிக்கல் - அணையை உடைக்கச் சொன்ன டிரம்ப்

ஆப்பிரிக்க ஒன்றியம் மத்தியஸ்தம் செய்யத் தொடங்கியது முதல் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அபிய் அகமது கூறுகிறார். ஆனால், அணையை நிரப்புவது என்ற எத்தியோப்பியாவின் முடிவு, முக்கியமான பிரச்சனைகளில் தீர்வை எட்டுவதற்கான நம்பிக்கையை மங்கவைப்பதாக அச்சம் நிலவுகிறது. வறட்சிக் காலத்தில் என்ன செய்வது, எதிர்கால சிக்கல்களை எப்படித் தீர்த்துக் கொள்வது போன்றவையே அத்தகைய முக்கியப் பிரச்சனைகள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »