Press "Enter" to skip to content

இந்திய எல்லை பதற்றம்: அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா – என்ன நடந்தது?

இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பேயோ அக்டோபர் 28 அன்று இலங்கைக்கு வந்தார். அங்கு அவர் சீனாவின் கம்யூனிச அரசாங்கத்தை ‘வன்முறை வெறி கொண்ட மிருகம்’ என்று குறிப்பிட்டார்.

பாம்பேயோவின் இந்தக் கருத்தால் பதற்றமடைந்தது இலங்கை அரசு, அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ மூலம் தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டியிருந்தது.

இலங்கை அதிபர் தனது ஒரு ட்வீட்டில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோவைக் குறிப்பிட்டு, “இலங்கை எப்போதும் தனது வெளியுறவுக் கொள்கையில் ஒரு சம நிலைப்பாட்டோடு இருந்து வருகிறது. மேலும் வல்லரசுகளுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்துச் சிக்கலில் சிக்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சீன தூதரகம் மைக் பாம்பேயோவின் கருத்துக்களுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, எழுத்துப்பூர்வ அறிக்கையையும் வெளியிட்டது.

இலங்கை, சீனா ஆகியவை பரஸ்பர உறவுகளை மேலும் மேம்படுத்தும் திறன் கொண்டவை என்றும், மூன்றாம் நாட்டின் ஆலோசனை தேவையில்லை என்றும் சீனத் தூதரகம் கூறியுள்ளது.

சுற்றுப்பயணம் மரியாதையாகவும் நன்மை பயக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்றும் மாறாக, பிரச்சனையை அதிகரிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்றும் சீனா கூறியுள்ளது.

முன்னதாக, பாம்பேயோ, தனது இந்தியப் பயணத்தின் போது சீனாவைப் பற்றிப் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இந்தியாவுடனான எல்லை பதற்றத்தில் அமெரிக்கா தலையிட வேண்டாம் - எச்சரிக்கும் சீனா

சீனாவுடனான எல்லைத் தகராறு விஷயத்தில் இந்தியா தனியாக இருப்பதாகக் கருதக்கூடாது என்றும் அமெரிக்கா அதற்குத் துணை நிற்கிறது என்றும் பாம்பேயோ கூறியிருந்தார்.

அக்டோபர் 28 அன்று, மைக் பாம்பேயோ, அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோரின் இந்தியப் பயணம் குறித்த, சீன வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையும் வந்தது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மீண்டும் மீண்டும் ஒரே பொய்யைக் கூறி, சர்வதேச உறவுகளைத் தரம் குறைப்பதாக புதன்கிழமையன்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனை ஒரு இரு தரப்பு பிரச்சனை என்றும் எந்த மூன்றாம் தரப்பு தலையீட்டிற்கும் அதில் இடமில்லை என்றும் சீனா கூறியது.

பாம்பேயோவின் வருகை மற்றும் அவரது கருத்துக்கள் குறித்து சீன தரப்பிலிருந்து இரண்டு கடுமையான ஆட்சேபனைகள் எழுந்துள்ளன. ஒன்று இந்தியாவில் உள்ள சீன தூதரகத்திலிருந்து, மற்றொன்று சீன வெளியுறவு அமைச்சகத்திலிருந்து, இந்தியா- அமெரிக்கா இடையிலான, தலா 2 அமைச்சர்கள் சந்திப்பில், பாம்பேயோ மற்றும் மார்க் ஆஸ்பருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த சந்திப்புக்குப் பின்னர், “இறையாண்மை மற்றும் சுதந்திரம் மீதான தாக்குதல் ஏற்பட்டால் இந்திய மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும்” என்று பாம்பேயோ கூறினார்.

பாம்பேயோ சீன கம்யூனிஸ்ட் அரசாங்கத்தையும் சாடினார். “சீனாவுக்கு ஜனநாயகம், சட்டம், வெளிப்படைத்தன்மை, சுதந்தரம் மற்றும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை ஆகியவை குறித்த அக்கறை இல்லை” என்று அவர் கூறியிருந்தார்.

சீனா-அமெரிக்கா மோதல்

அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் அமெரிக்கா, பனிப்போர் மனநிலையையும் மோதலையும் தூண்டுவதாக சீன வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனையில் அமெரிக்கா தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் சீனா கூறியது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், “எல்லைத் தகராறு இந்தியா மற்றும் சீனாவின் இரு தரப்பு விஷயம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதில் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் இடமில்லை. இப்போது எல்லையில் நிலைமை நிலையாகவுள்ளது. இரு தரப்பினரும் உரையாடல் மூலம் பிரச்சனையை தீர்ப்பதில் ஈடுபட்டுள்ளனர். ” என்று கூறினார்.

இந்தியாவில் உள்ள சீன தூதரகம், அமெரிக்கா வெவ்வேறு சமூகத்தினரிடையே மோதல் போக்கை உருவாக்க விரும்புகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

“பிராந்திய ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் முன்னேற்றத்தின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளை முன்னேற்ற சீனா பரிந்துரைக்கிறது. இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனை இரு தரப்பு விவகாரம். இராஜதந்திர மற்றும் இராணுவ மட்டத்தில் உரையாடல் மூலம் பிரச்சனையை தீர்க்க இரு நாடுகளும் முயற்சி செய்கின்றன. எந்தவொரு பரஸ்பர பிரச்சனையையும் தீர்க்க சீனாவிற்கும் இந்தியாவுக்கும் திறன் உள்ளது. இந்த விஷயத்தில் எந்த மூன்றாம் தரப்பினரும் தேவையில்லை,” என்று சீனா கூறியது.

லடாக் எல்லையில் பதற்றத்தை குறைக்க இந்தியாவும் சீனாவும் தலைமை கமாண்டர் மட்டத்தில் எட்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளன.

இருப்பினும், எல்லையில் இன்னும் இயல்பு நிலைமை திரும்பவில்லை. அசல் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நிலவும் பதற்ற நிலைமை மே மாதத்திற்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்பவில்லை.

கோவிட் 19-ஐ சமாளிக்க அமெரிக்கா தவறிவிட்டது என்றும், எனவே பிரச்சனைகளைத் திசை திருப்ப விரும்புகிறது என்றும் சீனா கூறியது.

இந்தியாவுடனான எல்லை பதற்றத்தில் அமெரிக்கா தலையிட வேண்டாம் - எச்சரிக்கும் சீனா

சீன வெளியுறவு அமைச்சகம், “இந்த ஆண்டு கோவிட் 19 பிரச்சனையை எங்கள் அரசாங்கம் வெற்றிகரமாகக் கையாண்டது. அதில் தோல்வி அடைந்த அமெரிக்கா, தன் தோல்வியை மறைக்க, சீனாவைக் குற்றம்சாட்டி வருகிறது. அமெரிக்கத் தலைமை அதன் பிரச்சனைகளை முதலில் கையாள்வதில் கவனம் செலுத்தும் என்றும் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதில் நேரத்தை விரயம் செய்யாது என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறியுள்ளது.

சீனாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் ஆதரவு ஊடகமாக அறியப்படும் குளோபல் டைம்ஸ் என்ற ஆங்கிலச் செய்தித்தாள், பாம்பேயோவின் வருகை மற்றும் அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (பெக்கா) குறித்துத் தலையங்கம் எழுதியுள்ளது.

“அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ராணுவக் கூட்டு ஒரு புதிய திருப்பத்தை எடுப்பதாகச் சிலர் கருதுகிறார்கள், ஆனால் அது உளவியல் ரீதியானதும் தற்காலிகமானதுமேயாகும். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் பெரிய பலனளிப்பதாக இருக்காது. சீனா இதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. சீனாவை இதை வைத்து அச்சுறுத்தத் தேவையில்லை” என்று குளோபல் டைம்ஸ் தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், “சீனாவைப் பற்றி இந்தியாவுக்கு நீண்டகாலமாக கேந்திர ரீதியிலான சந்தேகங்கள் உள்ளன. சமீபத்திய எல்லை தகராறால் அது தீவிரமடைந்துள்ளது. ஆனால் அமெரிக்காவுடனான நெருக்கத்தை அதிகரிப்பதன் மூலம் இந்தியாவால் எல்லையில் சீனாவுடன் மோத முடியாது. அமெரிக்காவுக்கு நெருக்கமாகச் செல்வதன் மூலம் சீனா மீது உளவியல் ரீதியான அழுத்தத்தை அதிகரிக்க இந்தியா முயற்சிக்கிறது, ஆனால் கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து பாங்காங் ஏரி வரை எங்குமே இந்த யுக்தி எடுபடாது.”

“இரு நாடுகளும் கொரோனா தொற்றின் பிடியில் மோசமாகச் சிக்கியுள்ள இந்த நேரத்தில் அவர்கள் இந்த வகையான உரையாடலை முன்னோக்கி நகர்த்துகிறார்கள். இரு நாடுகளும் சில தசாப்தங்களுக்கு முன்னர் இந்த வேலையைச் செய்திருந்தால், தன் வலிமையால் விரிவாக்கம் செய்த நாட்டை இலக்காக்கி இருந்தால், வெற்றியும் கிட்டியிருக்கும். ஆனால் இரு நாடுகளும் தவறான நேரத்தில், தவறான இலக்கைக் குறி வைத்துள்ளன.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சீனா தன் புவிசார் அரசியல் விரிவாக்கத்தை விரும்பவில்லை, ஆனால் உலகின் பிற பகுதிகளுடன் சீனாவின் ஒத்துழைப்பை நிறுத்த முடியாது. அமெரிக்கா உண்மையில் சீனாவுடன் போராட விரும்பினால், தங்கள் விவசாயப் பொருட்களை எங்கள் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தட்டும். தனது பர்கர்கள், கோக், ஜிஎம் தயாரிப்புகள் மற்றும் ஐபோன்களை எங்கள் சந்தையில் விற்பதை நிறுத்தட்டும்”

“சீனாவுடனான வணிக உறவுகளை பலப்படுத்த அமெரிக்கா தனது நெருங்கிய நட்பு நாடான ஆஸ்திரேலியாவைத் தயார் செய்ய வேண்டும். இதையெல்லாம் அமெரிக்கா செய்ய முடிந்தால் மட்டுமே, சீனாவுடனான உறவை மறுபரிசீலனை செய்வதாக உலகம் நம்பும்.” என்றும் அந்த தலையங்கம் கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »