Press "Enter" to skip to content

அமெரிக்க தேர்தல்: டிரம்ப் ஆற்றிய 17 நிமிட உரையில் சொல்லப்பட்டவை உண்மையா?

  • உண்மை பரிசோதிக்கும் குழு
  • பிபிசி நியூஸ்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பற்றி வெள்ளிக்கிழமை பேசிய அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டிரம்ப் எந்த ஆதாரமும் தராமல் பல குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

அவரது கூற்றுகள் சிலவற்றை பிபிசி உண்மை பரிசோதனைக் குழு ஆய்வு செய்தது.

அவரது கூற்றுகளும், அது குறித்து நாங்கள் கண்டறிந்த உண்மைகளும் கீழே:

Section divider

டிரம்ப் கூற்று: “அஞ்சல் வாக்குகள் குறித்து நான் நீண்ட நாள்களாகப் பேசி வருகிறேன். அது நமது அமைப்பை சீர்குலைத்துவிட்டது. அது ஒரு ஊழல் முறை இதனால் மக்களும் ஊழல்மயப்படுகிறார்கள்”.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அஞ்சல் வாக்குகள் குறித்து சந்தேகம் எழுப்பி 70க்கும் மேற்பட்ட ட்வீட்டுகளை டிரம்ப் பகிர்ந்துள்ளார். வாக்காளர் முறைகேடு நடப்பதாகவும் பேசியுள்ளார்.

ஆனால், இந்த முறையில் ஊழல் நடப்பதாக கூறுவதற்கு ஆதாரம் ஏதுமில்லை.

அமெரிக்காவில் வாக்காளர் முறைகேடு என்பது மிக மிக அரிதானது. 2017ம் ஆண்டு ப்ரென்னன் நீதிக்கான மையம் நடத்திய ஆய்வில் இத்தகைய முறைகேடுகள் 0.0009 சதவீதம் என்ற விகிதத்திலேயே நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர் முறைகேடு முக்கியப் பிரச்சனையாக இருப்பதாக கூறுவதற்கு ஆதாரமும் இல்லை.

அதிபரே கடந்த காலத்தில் அஞ்சல் மூலம் வாக்களித்துள்ளார். அவர் வாக்காளராகப் பதிவு செய்து கொண்டுள்ள ஃப்ளோரிடா மாநிலத்துக்கு வெளியே அவர் வசிக்கிறார். எனவே அஞ்சல் வாக்கு கோரி, அதன் மூலம் வாக்களித்துள்ளார்.

ஆப்சென்டீ பேலட் என்று அறியப்படும் இந்த அஞ்சல் வாக்கு முறையில் சிறந்த பாதுகாப்புகள் உள்ளன என்றும் அதனால் தாம் அதை ஆதரிப்பதாகவும் டிரம்பே கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆனால், மாநில அரசே எல்லா பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கும் தாமாகவே அஞ்சல் வாக்குச் சீட்டுகளை அனுப்புவது உள்ளிட்ட பிற அஞ்சல் வாக்கு முறைகளை ட்ரம்ப் வேறுபடுத்திப் பார்க்கிறார்.

ஒரேகான், உடா மாநிலங்கள் கடந்த தேர்தல்களில் இந்த முறையை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளன.

Section divider

டிரம்ப் கூற்று: “அவர்கள் சரிபார்ப்பு முறைகள் ஏதுமில்லாமல், கேட்காதவர்களுக்கு எல்லாம் கோடிக்கணக்கான வாக்குச்சீட்டுகளை அவர்கள் அனுப்பியுள்ளார்கள்”.

9 மாநிலங்களிலும், வாஷிங்டன் டிசியிலும் உள்ள வாக்காளர்கள் அனைவருக்கும், அவர்கள் கேட்காமலே வாக்குச் சீட்டுகள் அனுப்பப்பட்டன. இவற்றில் 5 மாநிலங்கள் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காரணமாக இந்த முறையை அறிமுகம் செய்தன.

ஆனால், இந்த 9 மாநிலங்களில் கொலராடோ, ஹவாய், ஒரேகான், உடா, வாஷிங்டன், கலிஃபோர்னியா, நியூ ஜெர்சி, வெர்மோன்ட் ஆகிய 8 மாநிலங்கள் குறித்து இப்போது சர்ச்சை இல்லை.

எல்லா விதமான அஞ்சல் வாக்கு முறைகளிலும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. வாக்காளரின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்துதான் அஞ்சல் வந்துள்ளதா, மேலுறையில் வாக்காளரின் கையொப்பம் உள்ளதா ஆகியவற்றை அதிகாரிகள் பரிசோதித்தே வாக்குகளை ஏற்கிறார்கள்.

அஞ்சல் வழியில் வாக்களிப்பது புதிது அல்ல. இது பல தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட முறைதான்.

Section divider

டிரம்ப் கூற்று: “எப்படி இந்த அஞ்சல் வாக்குகள் எல்லாம் ஒரு தலைப்பட்சமாக உள்ளன என்பதும்கூட அதிசயம்தான்”.

அஞ்சல் வாக்கு முறையை விரிவுபடுத்தும் திட்டத்தை அதிபர் டிரம்ப் திரும்பத் திரும்ப விமர்சித்து வந்தார். உண்மையான ஆதாரம் இல்லாவிட்டால், இதனால், ஏராளமான முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.

தமது குடியரசுக் கட்சி ஆதரவு வாக்காளர்கள் அஞ்சல் வாக்குகளைப் பயன்படுத்தாமல் நேரடியாக வந்து வாக்களிக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அவர் சொன்னபடி அவரது ஆதரவாளர்கள் நடந்துகொண்டார்கள் என்பதற்கு வாக்கு எண்ணிக்கையே சாட்சியாக உள்ளது. ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள் நிறைய அஞ்சல் வாக்கு முறையிலும், குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் நிறைய நேரிலும் வாக்களித்துள்ளார்கள்.

Section divider

டிரம்ப் கூற்று: “ஜோர்ஜா மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தொடர்பில்லாத வேறு ஏதோ ஒரு இடத்தில் நடந்த பைப் வெடிப்பு நடந்ததற்கு, வாக்கு எண்ணிக்கை நான்கு மணி நேரம் நிறுத்தப்பட்டது”.

இது உண்மையல்ல.

ஸ்டேட் ஃபார்ம் ஆரெனா என்ற இடத்தில் நடந்த பைப் வெடிப்பினால், அஞ்சல் வாக்குச் சீட்டுகள் பட்டியலிடும் பணி நடந்து வரும் அறை பாதிக்கப்பட்டது.

Section divider

டிரம்ப் கூற்று: “அதிபர் பதவிக்கான போட்டியில் முடிவை அறிவிக்கவேண்டியவை சில மாநிலங்களே. அந்த மாநிலங்களின் தேர்தல் அமைப்பு என்பது எல்லா இடங்களிலும் ஜனநாயக கட்சியினரால் நடத்தப்படுகிறவை”

எல்லா இடங்களிலும் என்பது உண்மையில்லை.

இன்னும் முடிவு தெரியாத ஜோர்ஜாவில் ஆளுநர் குடியரசுக் கட்சிதான். அந்த மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளும் குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டில்தான் உள்ளன.

அந்த மாநிலத்தில் தேர்தல் நடத்தும் பொறுப்பில் உள்ளவரான செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட் ப்ராட் ரேஃபன்ஸ்பெர்ஜர் ஒரு குடியரசுக் கட்சிக்காரர். (அமெரிக்காவில் அமைச்சர்கள் செக்ரட்டரி என்றே அழைக்கப்படுவார்கள்).

அவரை அங்கீகரித்து 2018ல் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட ட்வீட் இதோ:

நெவாடா மாநிலத்திலும் தேர்தல் நிர்வாகத்தை நடத்துகிற செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட் குடியரசுக் கட்சிக்காரர்தான்.

Section divider

டிரம்ப் கூற்று: “சட்டபூர்வமாக அனுமதிக்கத்தக்க பார்வையாளர்களை அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள்”.

தேர்தலைப் பார்வையிடும் பிரதிநிதிகளைப் பற்றி டிரம்ப் பேசுகிறார். வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இவர்கள் வாக்கு மையத்தின் உள்ளே இருப்பார்கள்.

பெரும்பாலான மாநிலங்களில் இந்த முறை அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் நாளுக்கு முன்னதாகவே இவர்கள் பதிவு செய்துகொள்ளவேண்டும். பொதுவாக இந்த பார்வையாளர்கள் ஒரு கட்சி அல்லது, வேட்பாளர் சார்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், மாநிலத்துக்கு மாநிலம் விதிகள் மாறுகின்றன.

ஜனநாயக கட்சியினர் ஆட்சியில் உள்ள சில நகரங்களில் குறிப்பாக, ஃபிளடெல்ஃபியா மற்றும் டெட்ராய்ட்டில் குடியரசுக்கட்சி பிரதிநிதிகள் வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிட அனுமதிக்கவில்லை என்று கருதப்படுவதை அதிபர் டிரம்ப் பிரச்சனையாக எழுப்புகிறார். ஆனால், இந்த இரு நகரங்களிலும் வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிடும் பிரதிநிதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஃப்ளெடல்ஃபியாவில் வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிடும் ஒரு பிரதிநிதி.

வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிடும் பிரதிநிதிகள் எத்தனை பேர் ஓர் இடத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்பது, வாக்கு எண்ணிக்கை மையத்தின் அளவைப் பொறுத்து மாறும். தேர்தல் நாளுக்கு முன்னதாகவே எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்பது தீர்மானிக்கப்படும்.

சில பகுதிகளில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் காரணமாக அனுமதிக்கப்படும் பிரதிநிதிகள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. மிரட்டல்களைத் தவிர்ப்பதற்காகவும் சில இடங்களில் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

டெட்ராய்ட்டில் ஜனநாயக கட்சி மற்றும குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 130 தேர்தல் பிரதிநிதிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டதாக தாம் அறியவில்லை என்று சிட்டி கிளார்க்கான ஜெனிஸ் வின்ஃப்ரே தெரிவித்தார்.

ஃபிளெடல்ஃபியாவில் சான்று பெற்ற தேர்தல் பிரதிநிதி ஒருவர் வாக்கு எண்ணும் இடத்தில் இருந்து வெளியேற்றப்படுவதாக காட்டும் காணொளி ஒன்று மிகுதியாக பகிரப்பட்டு ஆனது. ஆனால், இது விதிமுறை தொடர்பாக எழுந்த குழப்பத்தால் நடந்தது என்றும் பிறகு அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார் என்றும் நாங்கள் பிபிசியில் செய்தி வெளியிட்டோம்.

“ஒவ்வொரு வேட்பாளரும், ஒவ்வொரு அரசியல் கட்சியும் வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிட அந்த அறைக்குள் தங்கள் பிரதிநிதியை அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளன. ஃபில்லி போன்ற சில பகுதிகளில் நேரடி ஒளிபரப்பும் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கையை நீங்கள் நேரடியாகவே பார்க்கலாம்” என்று ஃப்ளடெல்ஃபியா செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட் கேத்தி பூக்வார் தெரிவித்துள்ளார்.

Section divider

டிரம்ப் கூற்று: “சட்டவிரோத வாக்குகளை எண்ணினால் அவர்கள் எங்களிடம் இருந்து தேர்தலைத் திருடிவிடுவார்கள். தாமதமாக வந்த வாக்குகளை எண்ணுவதை நாங்கள் கடுமையாகப் பார்க்கிறோம். ஆனால், நிறைய வாக்குகள் தாமதமாகத்தான் வந்தன”

தேர்தல் நாளுக்குப் பிறகு வரும் அஞ்சல் வாக்குகளை எண்ணுவது சட்டவிரோதம் என்று குறிப்பிடுகிறார் அதிபர் டிரம்ப்.

ஆனால், சுமார் பாதி அமெரிக்க மாநிலங்களில் தேர்தல் நாளுக்குப் பிறகு தாமதமாக வரும் அஞ்சல் வாக்குகளை எண்ணலாம். ஆனால், அவற்றில் நவம்பர் 3-ம் தேதிக்கான அஞ்சல் முத்திரை இடம் பெற்றிருக்கவேண்டும். அவ்வளவுதான்.

வெற்றியாளர் முன்மொழியப்படாத முக்கிய மாநிலங்களான பென்சில்வேனியா, நெவாடா, வட கரோலினா ஆகியவை இப்படி தாமத வாக்குகளை அனுமதிக்கும் மாநிலங்களில் அடக்கம். எவ்வளவு தாமதமாக வரும் அஞ்சல் வாக்குகளை அனுமதிக்கலாம் என்கிற காலக்கெடு மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.

அரிசோனா, ஜோர்ஜா போன்ற மாநிலங்கள் தேர்தல் நாளுக்குப் பிறகு வரும் அஞ்சல் வாக்குகளை எண்ணுவதில்லை.

அஞ்சல் முத்திரையோ, அடையாள விவரமோ இல்லாத அஞ்சல் வாக்குகள் கூட பென்சில்வேனியாவில் எண்ணப்பட்டதாக அதிபர் டிரம்ப் தமது உரையில் குறிப்பிட்டார்.

அஞ்சல் முத்திரைகள் தவறிய, அல்லது சரியாக இல்லாத வாக்குகளையும் எண்ணலாம் இந்த மாநிலத்தின் உச்சநீதிமன்றம் தவறிய வாக்குகளையும் எண்ணலாம் என்று அந்த மாநில உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அந்த வாக்குகள் தேர்தல் நாளுக்குப் பிறகு அஞ்சல் செய்யப்பட்டவை என்பதைக் காட்டுவதற்கு உரிய ஆதாரம் இல்லாவிட்டால் அந்த வாக்குகள் எண்ணப்படவேண்டும் என்பது நீதிமன்றத்தின் கருத்து.

ஒவ்வொரு அஞ்சல் வாக்கும் கையெழுத்து சரிபார்ப்பு, முகவரி சரிபார்ப்பு என்று பல சோதனைகளைக் கடந்தே எண்ணப்படுகின்றன.

Section divider

டிரம்ப் கூற்று: “டெட்ராய்ட்டில் வாக்கு எண்ணும் ஒரு பெரிய வளாகத்தில் கார்ட்போர்ட் அட்டைகளை வைத்து அடைத்து ஜன்னல்கள் மூடப்பட்டன. எனவே அவர்கள், வாக்கு எண்ணும் பகுதியை மூடி அடைக்க விரும்புகிறார்கள்”.

போர்க்கள மாநிலமான மிஷிகன் மாநிலத்தில், டெட்ராய்ட் நகரில் உள்ள டி.எஃப்.சி. மையத்தையே டிரம்ப் குறிப்பிடுகிறார்.

ஜன்னல்கள் அடைக்கப்பட்டதால் வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிடுவதில் இருந்த தாங்கள் தடுக்கப்பட்டதாக வாக்கு எண்ணிக்கைப் பிரதிநிதிகல் கூறியதை அடுத்து அங்கு புதன்கிழமை கூச்சல், குழப்பம் நிலவியது.

“அங்கு எல்லா ஜன்னல்களும் அல்ல, சில ஜன்னல்கள் அடைக்கப்பட்டன. காரணம் வெளியில் இருப்பவர்கள் தங்களையும் தங்கள் பணியையும் ஜன்னலுக்கு வெளியே இருப்பவர்கள் தொடர்ந்து படமெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அங்கிருந்த தேர்தல் பணியாளர்கள் புகார் கூறியதால் இந்த ஜன்னல்கள் அடைக்கப்பட்டன” என்று டெட்ராய்ட் நகரின் முதன்மை அட்டர்னி லாரன்ஸ் கார்சியா தெரிவித்தார்.

டி.எஃப்.சி. மையத்தின் ஜன்னல்கள் அடைக்கப்பட்டன.

அங்கு இரண்டு கட்சிகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான எண்ணிக்கை பார்வையிடும் பிரதிநிதிகள் இருந்தனர். அந்த இடத்தில் ஏற்கெனவே ஏராளமானோர் இருந்ததால், மேற்கொண்டு பிரதிநிதிகள் வருவதை அதிகாரிகள் தடுத்தனர்.

Link box banner top

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »