Press "Enter" to skip to content

‘ஜோ பைடன் அமெரிக்க அதிபரானால் இந்தியாவுக்கு எப்படி உதவுவார்?’ – அமெரிக்க தமிழ் எம்.பி ராஜா கிருஷ்ணமூர்த் பேட்டி

  • ஞா. சக்திவேல் முருகன்
  • பிபிசி தமிழுக்காக

நடந்து முடிந்த அமெரிக்கத் தேர்தலில் இல்லியான்ஸ் தொகுதியில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி 71.45 சதவிகித வாக்குகள் பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம், மூன்றாவது முறையாக, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்குள் நுழைய இருக்கிறார்.

ஜோ பைடனின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவரிடம் தேர்தல் முடிவு நிலவரம் குறித்து கேட்டோம்.

“வாக்கு எண்ணிக்கையை முழுமையாக முடிக்கும் போது ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்படும்” என்கிறார் ராஜா கிருஷ்ணமூர்த்தி நம்பிக்கையோடு.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும்:

கேள்வி: “இன்னும் அஞ்சல் வாக்குகள் எண்ணி முடிக்கவில்லை. ஆனால், அதிபர் டிரம்ப் வாக்கு எண்ணிக்கையை உடனே நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி இருக்கும் நிலையில், தற்போதுள்ள நிலை என்ன?”

பதில்: ”பெரும்பாலான அஞ்சல் வாக்குகள் ஜோ பைடனுக்கே கிடைத்திருக்கின்றன. இன்னும் எண்ணி முடிக்காத ஐந்து மாநிலங்களில் நான்கு மாநிலங்களில் ஜோ பைடனே முன்னிலையில் இருக்கிறார். அவருக்கான வெற்றி வாய்ப்புகளே அதிகம்”.

ராஜா கிருஷ்ணமூர்த்தி

கேள்வி: “இந்தியாவுடன் மிக நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அடுத்து அதிபராக உள்ள ஜோ பைடன் எந்த வகையில் இந்தியாவுடன் உறவைக் கையாள்வார்?”

பதில்: “ஜோ பைடனும் இந்தியாவின் நெருங்கிய நண்பர்தான். அவர் செனட் உறுப்பினராக இருக்கும்போதுதான் இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ள கமலா ஹாரீஸ் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். இவரும் இந்தியாவுடன் நெருங்கிய நட்பில் உள்ளார். ஆகையால் ஜோ பைடன் அதிபராகும்போது இந்தியாவுடனான நட்பு மிகவும் நெருக்கமாகவே இருக்கும்.”

கேள்வி: “அமெரிக்க தேர்தலில் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ஜனநாயக கட்சியே பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கூறியிருந்தன. ஆனால், டிரம்ப் பல மாநிலங்களில் அதிகளவில் வாக்குகளைப் பெற்றிருக்கிறாரே?”

பதில்: “நாங்கள் தேர்தலுக்குப் பின்புதான் இதற்கான காரணத்தை ஆராய்வோம். டிரம்ப்பின் குடியரசு கட்சி, மிஷிகன், பென்சில்வேனியா, விஸ்கான்ஸின், ஜோர்ஜா மற்றும் அரிசோனா என ஐந்து மாநிலங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. பல மாநிலங்களில் ஜோ பைடனும் அதிகளவில் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இதனால் நாங்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறோம்”.

கேள்வி: “டிரம்ப் கொள்கைகள் மீது மக்களுக்கு இன்னும் ஈர்ப்பு இருக்கிறதா அல்லது ஜனநாயக கட்சி தேர்தல் பணியை இன்னும் சிறப்பாகச் செய்திருக்க வேண்டும் என எண்ணுகிறீர்களா?”

பதில்: “இந்த தேர்தலில் ஜோ பைடன் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். கடந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பெரும்பாலான மாநிலங்களில் இந்த முறை ஜோ பைடன் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார். இதனால், தேர்தல் முடிவு குறித்து மகிழ்ச்சியே!

கேள்வி: “அமெரிக்க அதிபர் டிரம்ப், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகிறாரே?”

பதில்: “இவ்வாறு சொல்வது மிகவும் அபத்தமானது. ஒரு நாட்டின் உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவியில் இருந்துகொண்டு இப்படிக் குற்றம்சாட்டுவது சரியல்ல. கடைசி ஓட்டு வரை எண்ணப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. எங்களுக்கு வெற்றி நிச்சயம். ஜோ பைடன் மக்களிடைய ஆதரவைப் பெற்று அடுத்த அதிபராகப் பதவி ஏற்பது உறுதி”.

ராஜா கிருஷ்ணமூர்த்தி

கேள்வி: “அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறி விட்டது. ஜோ பைடன் புதிய அதிபராகப் பதவி ஏற்றபின்பு, அமெரிக்கா மீண்டும் உலக சுகாதார அமைப்பில் சேருமா?”

பதில்: “அமெரிக்கா, மீண்டும் உலக சுகாதார அமைப்பில் சேரும். கொரோனாவுக்கு எதிராக, அமெரிக்காவும், இந்தியாவும் மட்டும் இணைந்து போராடினால் மட்டும் போதாது. அனைத்து நாடுகளும் இணைந்து போராட வேண்டியது அவசியம்”.

கேள்வி: “புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்றபின், அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவார்?”

பதில்: “ஜோ பைடன் மிகவும் நேர்மையானவர், அதே சமயத்தில் தைரியமானவரும் கூட. அவருக்கு மக்கள் மகிழ்ச்சியோடு வாக்களித்திருக்கிறார்கள். மக்களின் மகிழ்ச்சிக்கு எந்த வகையிலும் குறை வைக்காமல் கண்ணியமான முறையில் அமெரிக்கப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்”.

கேள்வி: “அமெரிக்கத் தேர்தல் பரப்புரையில் அமெரிக்க – சீனா உறவு குறித்தே அதிக அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் வரும்காலங்களில் இவ்விரண்டு நாடுகளிடையேயான உறவு எப்படி இருக்கும்?”

பதில் : “கொஞ்சம் பதற்றமாகவே இருக்கும். இரண்டு நாடுகளிடையே பதற்றத்தைத் தணிக்கவே அமெரிக்கா விரும்பும். அமெரிக்க மக்கள் மகிழ்ச்சியோடும், நல்ல வளத்தோடும் இருக்க வேண்டியது அவசியம். தேசிய பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு இரண்டுமே அவசியம். இவ்விரண்டு விஷயத்தின் அடிப்படையில் இரண்டு நாடுகளுடையே உறவு அமையும்”.

ராஜா கிருஷ்ணமூர்த்தி

கேள்வி: “அமெரிக்க – இந்திய உறவை இன்னும் எந்த வகையில் மேம்படுத்தலாம் என்று எண்ணுகிறீர்கள்?”

பதில்: “அமெரிக்கா – இந்தியா இடையே வர்த்தகத்தை இன்னும் அதிகப்படுத்தலாம். இரண்டு நாடுகளிடையே முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டும். அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிலும், இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவிலும் தொழில் தொடங்க முன்வர வேண்டும். ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் அதிகம். இவர்களுக்கு கிரீன்அட்டை கொடுத்து அமெரிக்காவில் தொழில் தொடங்க அனுமதிக்கலாம்”.

கேள்வி: “மிகப்பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவில் இவ்வளவு பெரிய தேர்தல் குழப்பம் நடக்கக் காரணம் என்ன?”

பதில்: “ஜனநாயகம் என்பதே குழப்பமான கட்டமைப்பு தான். சில நேரங்களில், ஜனநாயகத்தை அதன் போக்கில் விட வேண்டும். இதை இந்தியர்களும், அமெரிக்கர்களும் உணர்ந்திருக்கிறார்கள்”.

கேள்வி: “கொரோனா பரவி வரும் காலத்தில் அமெரிக்காவின் தேர்தல் நடந்துள்ளது. அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவாத முறையில் தேர்தல் நடத்த உங்களது ஆலோசனை என்ன?”

பதில்: “நாங்கள் யாருக்கும் ஆலோசனை செல்லவோ அல்லது வழிகாட்டவோ முடியாது. சாதாரண மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் நிகழா வண்ணம், அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தால், அதன் பரிசாக, நமக்கு வாக்களிப்பார்கள் என்பதை அரசு உணர வேண்டும்”.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »