Press "Enter" to skip to content

மலேசியாவில் மூன்றாவது அலை: மீண்டும் நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொண்டுள்ளது மலேசியாவில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று வேகமாக அதிகரித்து வருவதை அடுத்து தீபகற்ப மலேசியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 9 முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை இந்த ஆணை அமலில் இருக்கும். இச்சமயம் அரசு வகுத்துள்ள நெறிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் கடந்த மார்ச் 18ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முழு அளவில் செயல்படுத்தப்பட்டதை அடுத்து நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்தது.

இதனால் சுமார் 9 ஆயிரம் பேர் மட்டுமே நோய்த்தொற்றுக்கு ஆளாகினர். இறப்பு விகிதமும் மிகக் குறைவாகவே இருந்தது. இதனால் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிகரித்த தொற்று

இந்த நிலையில், மலேசியாவின் சபா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுப் பரவல் வேகமெடுத்துள்ளது. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருகிறது.

தினமும் புதிதாக சுமார் ஆயிரம் பேர் வரை தொற்றுக்கு ஆளாகிறார்கள். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை இரண்டு மாதங்களுக்குள் 39,357ஆக அதிகரித்துள்ளது.

மலேசியாவில் கொரோனா மூன்றாவது அலை

இன்று (சனிக்கிழமை) மூன்று பேர் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்குப் பலியாகியுள்ள நிலையில் ஒட்டுமொத்த மரண எண்ணிக்கை 282ஆக உள்ளது. தற்போது 11,666 பேர் கோவிட்-19 நோய்க்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியதும் தீபகற்ப மலேசியாவில் உள்ள கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் சபாவில் நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் மற்ற மாநிலங்களிலும் பாதிப்புகள் அதிகரிக்கத் துவங்கின. இதனால் கெடா, பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் மற்றும் திரங்கானு உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே ஆணை பிறப்பிக்கப்படுவதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 4 மாநிலங்களில் மட்டுமே நடமாட்டக் கட்டப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்படவில்லை.

Banner image reading 'more about coronavirus'
Banner

“இந்த ஆணை அமலில் இருக்கும்போது ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்குச் செல்ல அனுமதி இல்லை. அனைத்துப் பள்ளிகளும், குழந்தைப் பராமரிப்பு மையங்களும் மூடப்பட்டிருக்கும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்க வீட்டிற்கு இருவர் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர்,” என்று அமைச்சர் இஸ்மாயில் சப்ரி பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை மீண்டும் வெளியிட்டார்.

நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிக்க வேண்டும்: சுகாதார அமைச்சு

மலேசியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 1,755 பேருக்குப் புதிதாக நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் பதிவான புதிய தொற்றுச் சம்பவங்களில் இதுவே மிக அதிக எண்ணிக்கை ஆகும்.

இதற்கிடையே நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் கோலாலம்பூர், சிலாங்கூர் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுப் பரவல் குறைந்திருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் மருத்துவர் நூர் ஹிசாம் கூறியுள்ளார். எனினும் அந்த ஆணை மேலும் சில காலம் நீட்டிக்கப்படுவது மிக அவசியம் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

மலேசியாவில் கொரோனா மூன்றாவது அலை

மலேசியாவில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தோல்வி அடைந்துவிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“மூன்றாவது அலை துவங்கியதுபோது தொற்று விகிதம் 2.2ஆக இருந்தது. ஆனால் இரண்டே வாரங்களில் தொற்று விகிதம் ஒரு விழுக்காடாகக் குறைந்துள்ளது. அப்படியெனில் நமக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றே அர்த்தம். ஆனால், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிக்க வேண்டியது அவசியம்” என்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே மலேசியாவில் தினம்தோறும் புதிய நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக் குழுக்கள் (க்ளஸ்டர்) கண்டறியப்பட்டு வருகின்றன. இத்தகைய தொற்றுக் குழுக்கள் மூலமாகவே பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுப் பாதிப்புக்கு மத்தியில் நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்

மலேசியாவில் கொரோனா மூன்றாவது அலை

மலேசியாவில் தற்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று பிரதமர் மொகிதீன் யாசின் தலைமையிலான அரசு வரவு செலவு அறிக்கையை (வரவு செலவுத் திட்டம்) தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற ஊழியர்கள் சிலர் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலை அடுத்து நாடாளுமன்ற அமர்வில் தினமும் 80 எம்பிக்களுக்கு மட்டுமே நேரடியாகப் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என சபாநாயகர் அறிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

மலேசிய நாடாளுமன்றத்தில் 222 எம்பிக்கள் உள்ளனர். சபாநாயகரின் அறிவிப்பின்படி அன்றாட அமர்வில் அனுமதிக்கப்படும் 80 எம்பிக்களில் 41 பேர் ஆளும் பெரிகத்தான் கூட்டணியைச் சேர்ந்தவர்களாக இருப்பர் என்றும் 39 பேர் எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்பிக்களாக இருப்பர் என்றும் கூறப்பட்டது.

எனினும் நேற்று வரவு செலவுத் திட்டம் தாக்கலுக்கு முன்பாக அனைத்து எம்பிக்களையும் அன்றாட அமர்வில் அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் கோரிக்கை விடுத்ததை அடுத்து அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »