Press "Enter" to skip to content

பைடன் – கமலா ஹாரிஸுக்கு குவியும் வாழ்த்துகள் – இந்தியா முதல் பிரான்ஸ் வரை

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிக்கான தகுதியை பெற்றுள்ளதாக கணிக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கும், துணை அதிபர் பதவிக்கு தகுதி பெற்றவராக கணிக்கப்பட்ட கமலா ஹாரிஸுக்கும் உலக அளவில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்த இருவர் இணைக்கு ஆதரவாக தேர்தல் சபை வாக்குகள் இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் 279 என்ற அளவில் இருப்பதாக பிபிசி கணித்துள்ளது. இந்த நிலையில், அதிபர் பதவிக்கு தகுதி பெறத் தேவையான 270 என்ற எண்ணை கடந்து விட்ட ஜோ பைடனுக்கும் அவரது தலைமையிலான அரசில் துணை அதிபராகும் கமலா ஹாரிஸுக்கும் உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல் வாழ்த்தாக ஜோ பைடனுக்கும் அவரது மனைவி ஜில் பைடனுக்கும் துணை அதிபராகவிருக்கும் கமலா ஹாரிஸுக்கும் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் எனது நண்பர்களான அடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அடுத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு வாழ்த்துகள் என்று தொடங்கி, நமது ஜனநாயகத்துக்கு முன்பை விட தற்போதுதான் நாம் அனைவரும் அதிகமாக தேவைப்படுகிறோம் என்று நிறைவு செய்து வாழ்த்து மடலை ஒபாமா எழுதியிருக்கிறார்.

மோதி, சோனியா, ராகுல் வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபராகும் தகுதியைப் பெற்றுள்ள ஜோ பைடனுக்கும் துணை அதிபராக தேர்வாகும் கமலா ஹாரிஸுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தனித்தனியாக வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அற்புதமான உங்களுடைய வெற்றிக்கு வாழ்த்துகள். அமெரிக்க துணை அதிபராக நீங்கள் வழங்கிய பங்களிப்பால் இந்திய, அமெரிக்க உறவுகள் வலுப்பெற்றது. அந்த உறவுகள் மிகப்பெரிய உச்சத்துக்கு செல்ல உங்களுடன் நெருக்கமாக மீண்டும் பணியாற்றும் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்,” என்று மோதி கூறியுள்ளார்.கமலா ஹாரிஸுக்கான வாழ்த்துச் செய்தியில், “உங்களை வெற்றிப்பயணம், திருப்பம் நிறைந்தது. இது உங்களுடைய சித்திகளுக்கு மட்டுமின்றி எல்லா இந்திய-அமெரிக்கர்களுக்கும் மிகச்சிறந்த பெருமை தரும் விஷயமாகும். துடிப்புமிக்க இந்திய, அமெரிக்க தொடர்புகள் உங்களுடை ஆதரவு மற்றும் தலைமையால் மேலும் வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பைடன் தனது தலைமையில் அமெரிக்காவை ஒருங்கிணைத்து வலுவான பாதையில் அந்நாட்டை வழிகாட்டுவார் என்று கூறியுள்ளார்.

கமலா ஹாரிஸுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இந்திய வேர்களுடன் கூடிய ஒருவர் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராவதை நினைத்து பெருமிதம் கொள்வதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று அதிபராக தகுதி பெறவிருக்கும் ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சோனியா காந்தி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் விவேகமுள்ள, முதிர்ச்சியுள்ள பைடன், கமலா ஹாரிஸ் தலைமையில், உலகம் முழுவதும் மற்றும் நமது பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு பயன் தரக்கூடிய நெருக்கமான உறவை இந்தியா எதிர்பார்க்கிறது என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான், பிரான்ஸ், பிரிட்டன் தலைவர்கள் வாழ்த்து

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில், ஜனநாயகம் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டில் பைடனுடன் பங்கேற்கும் நாளை எதிர்பார்ப்பதாகவும் சட்டவிரோத வரி ஏய்ப்பு மற்றும் தேசத்தின் வளங்களைச் சுரண்டும் ஊழல் தலைவர்களின் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையிலும் பைடனுடன் இணைந்து பணியாற்றும் நாளை எதிர்நோக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் அமைதியை பராமரிக்க அமெரிக்காவுடன் பாகிஸ்தான் தொடர்ந்து பணியாற்றும் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்காவும் கனடாவும் நெருங்கிய நட்பு நாடுகள் மட்டுமின்றி கூட்டாளிகளாகவும் உள்ளன. உலக மேடையில் இரு நாடுகளும் சிறப்பான உறவைக் கொண்டிருப்பதாகவும் அதன்படியே தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அமெரிக்கா எங்களுக்கு மிக முக்கியமான கூட்டாளி நாடு. பருவநிலை மாற்றம், வர்த்தகம், பாதுகாப்பு என பலதரப்பட்ட விவகாரங்களில் இணைந்து பணியாற்றுவோம் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஏங்கலா மெர்க்கல், எப்போதும் போலவே இரு நாடுகளும் வலுவாந உறவைப் பேணிக்காக்கும் என்று கூறியுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங், இன்றைய யுகத்தில் இரு தரப்பும் பல சவால்களை இணைந்து எதிர்கொள்ள வேண்டும். அதற்கு இரு தரப்பும் தயாராவோம் என்று கூறியுள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »