Press "Enter" to skip to content

அமெரிக்க தேர்தல்: மீண்டும் பலத்தை நிரூபித்த இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள்

  • தாரேந்திர கிஷோர்
  • பிபிசி

அமெரிக்கத் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வெற்றி பெற்றுள்ளனர். மருத்துவர் ஆமி பெரா, ரோ கன்னா, பிரமிளா ஜெய்பால் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரே அந்த நால்வர்.

மும்பையில் பிறந்த 52 வயதான மருத்துவர் ஹெரல் திபிர்னெனி, குடியரசுக் கட்சி வேட்பாளர் டெபி செல்கோ ஆகியோர் இடையே அரிசோனாவில் கடுமையான போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை இங்கே இன்னும் தொடர்கிறது.

ஹெரல் வெற்றி பெற்றால், பிரமிளா ஜெய்பாலுக்கு அடுத்தபடியாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது இந்திய-அமெரிக்கப் பெண்மணி ஆவார். இதற்கு முன்னர், பிரமிளா ஜெய்பால் 2016 ஆம் ஆண்டில் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

நவம்பர் 6, 2018 அன்று, அமெரிக்காவில் சில இடங்களுக்கு இடைக்காலத் தேர்தல்கள் நடந்தன. அதிலும், ஹெரல் திபிர்னெனி அரிசோனா மாகாணத்தின் எட்டாம் மாவட்டத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார். குடியரசுக் கட்சியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டெபி செல்கோவிடம் கடுமையான போட்டிக்குப் பிறகு அவர் தோல்வியடைந்தார்.

இதற்கு முன்னர், 2017 ஜனவரி மாதம் அமெரிக்க காங்கிரசின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டிலும் சேர்ந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐந்து தலைவர்கள் பதவியேற்றனர். அந்த நேரத்தில், இந்த நான்கு பேரும் பிரதிநிதிகள் சபைக்கும் கமலா ஹாரிஸ் செனட்டிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த முறையும், நான்கு பேரும் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஐந்து உறுப்பினர்களின் அணிக்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில், ‘சமோசா காகஸ்’ என்று ராஜா கிருஷ்ணமூர்த்தி பெயரிட்டுள்ளார்.

பிரதிநிதிகள் சபை அமெரிக்க நாடாளுமன்றத்தில் கீழவை என்றும் செனட், மேலவை என்றும் அழைக்கப்படுகிறது.

கமலா ஹாரிஸ் இந்த முறை துணை அதிபர் ஆகிறார். துணை அதிபர் ஆகப்போகும் முதல் இந்திய-ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர் இவர்.

இந்தத் தேர்தலில், இந்திய-அமெரிக்க வாக்காளர்களின் வாக்குகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தன. தேர்தல் பிரசாரத்தின்போது ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் இந்திய வாக்காளர்களைத் தங்கள் பக்கம் திருப்ப முனைந்தனர். பாரம்பரியமாக இந்திய-அமெரிக்கர்கள் ஜனநாயகக் கட்சியினரையே ஆதரித்து வருகின்றனர். 2016ல், இந்திய அமெரிக்கர்களில் 16 சதவீதம் பேர் மட்டுமே டிரம்புக்கு வாக்களித்தனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 45 லட்சம் மக்கள் அமெரிக்காவில் வாழ்கின்றனர். அறுபது ஆண்டுகளில் அமெரிக்காவில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்கர் தலிப் சிங் சவுந்த் ஆவார். இந்திய-அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இந்த நான்கு பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் தனிப்பட்ட-அரசியல் வாழ்க்கை மற்றும் அவர்களின் தேர்தல் செயல்திறன் பற்றி இப்போது அறிந்து கொள்வோம்.

எமி பெர்ரா

எமி பெர்ரா

55 வயதான எமி பெர்ரா, கலிபோர்னியாவின் ஏழாவது காங்கிரஸ் மாவட்டத்திலிருந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவர் இந்திய எம்.பி.க்களில் மூத்தவர். இந்த முறை அவர் குடியரசுக் கட்சி வேட்பாளர் பஸ் பேட்டர்சனை தோற்கடித்தார். மொத்த வாக்குகளில் 61 சதவீதம் பெற்றுள்ளார்.

2016 இல், அவர் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஸ்காட் ஜோன்ஸை தோற்கடித்தார்.

அவர் மூன்றாவது முறையாக வென்றபோது, ​​அவர் தலிப் சிங் சவுந்தின் சாதனையை சமன் செய்தார்.

ஆமி பெர்ரா தொழில் ரீதியாக ஒரு மருத்துவர். 2012 ல் அவர் தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்றார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி

ராஜா கிருஷ்ணமூர்த்தி

47 வயதான ராஜா கிருஷ்ணமூர்த்தி இந்தத் தேர்தலில் இல்லினாய்-ல் லிபர்டேரியன் கட்சியின் பிரிஸ்டன் நீல்சனை எளிதில் தோற்கடித்தார். இவர் மொத்த வாக்குகளில் 71 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். 2016 ல் குடியரசுக் கட்சி வேட்பாளர் பீட்டர் டிக்கினானியை தோற்கடித்தார்.

சென்ற முறை அவர் தேர்தலில் வெற்றி பெற்றபோது, பகவத் ​​கீதையின் மீது உறுதிமொழி எடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் பதவியேற்றார். துளசி கபார்டுக்குப் பிறகு பகவத் கீதை மீது உறுதிமொழி எடுத்து பதவியேற்ற இரண்டாவது உறுப்பினர் இவர். துளசி கபார்ட் அமெரிக்காவில் எம்.பி. ஆன முதல் இந்து என்பது குறிப்பிடத்தக்கது.

1973 ஆம் ஆண்டில் டெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர், ராஜா மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது நியூயார்க்கில் குடியேறினர்.

ரோ கன்னா

ரோ கன்னா

கலிபோர்னியாவின் 17 வது மாவட்டத்திலிருந்து 44 வயதான ரோ கன்னா தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அவர் மற்றொரு இந்திய-அமெரிக்கரான 48 வயதான ரித்தேஷ் டாண்டனை எளிதில் தோற்கடித்தார். இவருக்கு சுமார் 74 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

அவர் 2016 ஜனாதிபதி தேர்தலில் எட்டு முறை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான மைக் ஹோண்டாவைத் தோற்கடித்தார். மைக் ஹோண்டா கலிபோர்னியாவின் பிரதிநிதியாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

2018ல் நடைபெற்ற இடைத் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ரான் கோஹனை இவர் தோற்கடித்தார்.

ரோ கன்னாவின் பெற்றோர் பஞ்சாபிலிருந்து அமெரிக்காவின்ஃப்லடெல்ஃபியா வந்தவர்கள். ரோ கன்னா ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறைப் பேராசிரியராக உள்ளார். அவர் ஒபாமா நிர்வாகத்தில் அதிகாரியாக இருந்துள்ளார்.

பிரமிளா ஜெய்பால்

பிரமிளா ஜெய்பால்

55 வயதான பிரமிளா ஜெய்பால் வாஷிங்டனில் குடியரசுக் கட்சி வேட்பாளர் கிரேக் கெல்லரை மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். மொத்த வாக்குகளில் 84 சதவீதம் அவருக்கு கிடைத்துள்ளது. அவர் 2016 தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் பிராடி வால்கின்ஷாவைத் தோற்கடித்தார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுழைந்த முதல் இந்திய-அமெரிக்கப் பெண் இவர். சென்ற முறை அவரது 78 வயதான தாய் இவர் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க, இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமிளா சென்னையில் பிறந்தவர். தனது 16 ஆவது வயதில் கல்விக்காக, அமெரிக்கா சென்றார். 2000ம் ஆண்டில், அவர் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றார். ஸ்டீவ் வில்லியம்சன் என்ற அமெரிக்கரை மணந்தார்.

இந்த முறை, இவர்களைத் தவிர, மேலும் சில இந்தியர்களும் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சமோசா காகஸ் எண்ணிக்கையில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர்கள் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

இவர்களில் முக்கியமானவர், 42 வயதான பிரஸ்டன் குல்கர்னி. இவரது முழுப்பெயர் சீனிவாச ராவ் பிரஸ்டன் குல்கர்னி. அவர் முன்னாள் ராஜீய அதிகாரியாவார். ஆனால் டெக்சாஸிலிருந்து இரண்டாவது முறையாகத் தோல்வியடைந்தார். இந்த முறை அவர் குடியரசுக் கட்சியின் டிராய் நெல்ஸால் தோற்கடிக்கப்பட்டார், அதே நேரத்தில் 2018 இடைத் தேர்தலில், பீட் ஓல்சனிடம் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்த முறை அவருக்கு 44 சதவீத வாக்குகளும், எதிரணியின் டிராய் நெல்ஸுக்கு 52 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. டெக்சாஸ் குடியரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படுகிறது.

மேலும், அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த 48 வயதான சாரா கிடன் அமெரிக்க மாகாணமான மைனேயில் குடியரசுக் கட்சி வேட்பாளர் சூசன் காலின்ஸிடம் தோல்வியடைந்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »