Press "Enter" to skip to content

“அமெரிக்க தேர்தலில் டிரம்பின் தோல்வி, இந்தியாவிற்கு, உலகிற்கு நல்லது”: என். ராம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றிருக்கும் நிலையில், இந்தத் தேர்தலின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் புதிய அதிபர் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் உரையாடினார் தி ஹிந்து குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரான என். ராம். உரையாடலில் இருந்து:

கே. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

ப. மகிழ்ச்சிதான். டொனால்ட் டிரம்பைப் பொறுத்தவரை, அவர் ஒரு தீவிர வலதுசாரி அரசியலை பிரதிநிதித்துவம் செய்தார். இனவாதம், பெண்களுக்கு எதிரான போக்கு, நாகரீகமற்ற முறையில் நடந்துகொள்வது, துப்பாக்கிக் கலாசாரம் ஆகியவற்றை அவர் பிரதிநிதித்துவம் செய்தார். அவருடைய தோல்வி, உலகத்திற்கு, இந்தியாவிற்கு நல்லது.

கே. டிரம்ப் ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டபோதும் அவருக்கு பெருமளவில் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இதை எப்படிப் புரிந்துகொள்வது?

ப. இருவருக்கும் இடையில் வாக்கு வித்தியாசம் 40 லட்சம் அளவுக்கு இருக்கலாம். ஜோ பைடன் இதுவரை எந்த அமெரிக்க அதிபரும் பெறாத வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அதேபோல டிரம்பும் (தோல்வியடைந்த) யாரும் பெறாத அளவுக்கு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

ஆனால், மக்களின் வாக்குகள் அங்கு அதிபரைத் தீர்மானிப்பதில்லை. அமெரிக்க சமூகம் முழுமையாகப் பிளவுபட்டிருக்கிறது என்பதுதான் முக்கியம். இது ஒரு சிக்கலான பிரச்சனைதான்.

கே. டிரம்ப் நிர்வாகமும் அதிபர் டிரம்பும் இந்தியாவோடு நெருக்கமாக இருந்தார்கள். இப்போது நிர்வாகமும் அதிபரும் மாறியிருக்கிறார்கள். இனி இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு எப்படி இருக்கும்?

ப. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் காலத்திலிருந்தே இந்திய – அமெரிக்க உறவில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. இந்தியா தனது அணிசேராக் கொள்கையிலிருந்து மாற ஆரம்பித்ததிலிருந்து இந்த உறவு துவங்குகிறது. எனவே இந்த அதிபர் மாற்றத்தினால், பெரிதாக ஏதும் மாறிவிடாது. டிரம்பிற்கும் பிரதமர் மோதிக்கும் இடையில் தனிப்பட்ட உறவு சிறப்பாக இருந்தாலும் அது மட்டுமே அமெரிக்க – இந்திய உறவை நிர்ணயிப்பதில்லை.

ஜோ பைடன் வெற்றி உறுதி: இனி வரும் நாட்களில் என்னவெல்லாம் நடக்கும்?

ஆனால், அமெரிக்கா, இந்தியா மீதான விமர்சனங்களை, குறிப்பாக காஷ்மீர் போன்ற விஷயங்களில் அதிகரிக்கலாம். துணை அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் கமலா ஹாரிஸ் செனட்டராக இருந்தபோது காஷ்மீர் விவகாரம் குறித்து வெளிப்படையாகவே தனது கவலைகளைத் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர் மட்டும் அமெரிக்காவின் கொள்கைகளைத் தீர்மானிக்கப்போவதில்லை. இருந்தாலும் சிறிய அளவில், தொனியில் வித்தியாசம் இருக்கலாம். பெரிய மாற்றங்கள் ஏற்படாது.

கே. டிரம்ப் அதிபராக இருந்தபோது சீனாவுடனான அமெரிக்காவின் உறவு மிக மோசமாக இருந்தது. இப்போது ஜோ பைடன் காலத்தில் அந்த உறவில் மாற்றங்கள் ஏற்படுமா?

ப. டிரம்ப் இந்த விஷயத்தில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டார். அதே நேரத்தில் வடகொரியாவை ஆதரித்துப் பேசினார். அடிப்படையில் சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையில் உறவு மோசமாவது நல்லதில்லை. இந்தியாவும்கூட சீனாவுடனான தனது உறவுகளை சரிசெய்ய வேண்டும். எல்லை விவகாரங்களைப் பேசியே தீர்க்க வேண்டும்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை சீனாவுடனான உறவு மேம்படலாம். ஆனால், வர்த்தக ரீதியான பிரச்சனைகளில் முழுமையாக மேம்படும் என்று சொல்ல முடியாது. அமெரிக்காவுக்கு இரானுடனான உறவில் சில ஏற்றங்கள் வரக்கூடும். உலக சுகாதார அமைப்பில் மீண்டும் சேர்வோம் என பைடன் சொல்லியிருக்கிறார். அது நல்ல முடிவு.

‘பருவநிலை மாற்றம்’ தொடர்பான விவகாரத்திலும் சுற்றுச்சூழலை மனதில் வைத்து அவர் முடிவெடுக்கக்கூடும். செனட்டைப் பொறுத்தவரை, ஜனநாயகக் கட்சியால் அதனைக் கைப்பற்ற முடியவில்லை. இருந்தாலும் சர்வதேச உறவுகளில் அதிபருக்கு கூடுதல் அதிகாரம் அமெரிக்காவில் உண்டு. அதை வைத்து அவர் சில விஷயங்களைச் செய்யலாம்.

கே. டிரம்பின் கடந்த நான்காண்டு கால ஆட்சியை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள்? இந்த நான்காண்டுகளில் அவர் பெரிதாக எந்தப் போரிலும் ஈடுபடவில்லை..

ப. போரில் ஈடுபடுவதற்கான வாய்ப்பும் ஏற்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இதற்கு முன்பாக இருந்த நிர்வாகம், ஆஃப்கானிஸ்தான், லிபியா, சிரியா ஆகிய நாடுகளில் போரில் ஈடுபட்டது. ஆனால், டிரம்ப் சொன்னதைப் போல இந்த யுத்தங்களில் இருந்து அமெரிக்காவுக்கு ஒரு பலனும் கிடைக்கவில்லை.

பைடன், கமலா

டிரம்ப் பல பொய்களைச் சொல்லியிருந்தாலும் இந்தக் கருத்து உண்மையானது. ஆனால், அவர் மோசமான செயல்களைச் செய்திருக்கிறார். குறிப்பாக இரானின் ஜெனரலை வேறு நாட்டில் கொன்றது மிக மோசமான செயல்தானே. போர் நடக்க வேண்டிய சூழலில் இவர் ஜனாதிபதியாக இருந்தால் என்ன செய்வார் என்பதை நாம் இப்போது சொல்ல முடியாது.

தவிர, முன்னாள் அதிபர் ஐசனோவர் சொன்னதைப்போல யுத்த தளவாட நிறுவனங்களும் போரைத் தீர்மானிக்கும். அந்த நேரத்து அமெரிக்க நலன்களும் போராத் தீர்மானிக்கும். அப்படி ஒரு சூழலில் ஜார்ஜ் புஷ்ஷைப் போல செயல்பட்டிருப்பாரா என்பதைச் சொல்ல முடியவில்லை. ஆனால், போரில் ஈடுபட்டு அதனால் பெரிய உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது உண்மைதான்.

கே. வரவிருக்கும் ஜோ பைடன் நிர்வாகம் என்னென்ன சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்?

ப. முதல் சவால், இந்த கொரோனா பெருந்தொற்று. இதைக் கையாளுவது குறித்த ஒரு புரிதல் அவருக்கு இருக்கிறது என நினைக்கிறேன். அடுத்ததாக பொருளாதாரம். அது மிக மோசமான நிலையில் இருக்கிறது. வேலை இழந்தவர்களுக்கு அரசு பணம் கொடுக்கிறது என்றாலும் போதுமான அளவில் இல்லை. சமமின்மை, ஏற்றத்தாழ்வு வெகுவாக வளர்ந்திருக்கிறது.

the hindu N Ram

நோபல் பரிசுபெற்ற ஜோசஸ் ஸ்டிகிளிஸ் அதைப் பற்றி தொடர்ந்து எழுதிவருகிறார். இந்த பெருந்தொற்று அதனை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. அடுத்ததாக சர்வதேச விவகாரங்கள். இப்போது அமெரிக்காவும் ஐரோப்பாவுக்கும் இடையில் சரியான புரிதல் இல்லை.

ஜெர்மனி, ஃபிரான்சுடன் உறவை மேம்படுத்த வேண்டியிருக்கிறது. பிறகு சீனாவுடனான உறவு குறித்துத் தீர்மானிக்க வேண்டும். அந்நாட்டைப் புறக்கணித்துவிட முடியாது.

தேர்தல் பிரசாரத்தின்போது அவர் கொடுத்த வாக்குறுதிகளை அவரால் காங்கிரஸில் நிறைவேற்ற முடியுமா என்பது தெரியவில்லை. கண்டிப்பாக பெரிய எதிர்ப்பு இருக்கும். ஒபாமாவின் திட்டங்களைத் தோற்கடித்த தலைவர் இன்னமும் செனட்டில் இருக்கிறார். இதையெல்லாம் மீறி பைடன் எப்படி செயல்படுவார் என்று பார்க்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »