Press "Enter" to skip to content

செலின் ராணி கவுண்டர்: அமெரிக்க கொரோனா கட்டுப்பாட்டு குழுவில் இருக்கும் தமிழர் – யார் இவர்? பின்னணி என்ன?

அமெரிக்காவின் துணை அதிபராக ஒரு தமிழ் வம்சாவளி பெண் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இதனை அவரது கிராமமான துளசேந்திரபுரம் இன்னும் கொண்டாடிக் கொண்டிருக்க, தற்போது அமெரிக்க கொரோனா கட்டுப்பாட்டு குழுவில் ஒரு தமிழர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, குழு ஒன்றினை அமைத்துள்ளார்.

இதில்தான் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட செலின் ராணி கவுண்டர் இடம் பெற்றுள்ளார்.

பைடனால் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழு, கொரொனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கவும், இன வேறுபாடுகளைக் களையவும், பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் திறக்கவும் பணியாற்றும் என தெரிவித்துள்ளார்.

இந்தக்குழுவில் தமிழ் பெண் மருத்துவர் ஒருவர் இடம் பெற்றிருப்பது இந்திய ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

யார் இந்த செலின் ராணி கவுண்டர்?

செலின் ராணி கவுண்டர்?

43 வயதாகும் செலின் ராணி கவுண்டரின் தந்தை ராஜ் நட்ராஜன் கவுண்டர் ஈரோடு மாவட்டம் பெருமாள்பாளையத்தை சேர்ந்தவர். இவரது தாய் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

ராஜ் கவுண்டர் 1960களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து போயிங் நிறுவனத்தில் பணியாற்றினார்.

சுகாதாரம் மற்றும் தொற்று நோய் கட்டுப்பாட்டில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் செலின்.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியல் (molecular biology) படித்து முடித்து, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பர்க் பொது சுகாதார கல்லூரியில் தொற்றுநோய் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

கடந்த 1998 முதல் 2012 வரையிலான கால கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, மால்வாய், எத்தியோப்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் காசநோய், ஹெச்.ஐ.வி. தொடர்பான மருத்துவ சேவை, ஆராய்ச்சிகளை செலின் ராணி மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க காசநோய் தடுப்பு பிரிவில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக செலின் ராணி தற்போது பணியாற்றி வருகிறார்.

தனது கிராமத்திற்கு இன்றும் உதவும் செலின்

செலின்

அமெரிக்கரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்ந்தாலும், செலின் கவுண்டர் அடிக்கடி தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறுதியாக 2018ஆம் ஆண்டில் தனது தந்தை பெயரில், ராஜ் கவுண்டர் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை செலின் தொடங்கியுள்ளார்.

தனது தந்தை படித்த மொடக்குறிச்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு உதவுவதோடு, குழந்தைகள் படிப்பிற்கும் இந்த அமைப்பு உதவுகிறது.

செலினின் இந்த வளர்ச்சி குறித்து மிகவும் பெருமைப்படுவதாக, பெருமாள்பாளையம் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

“கொரோனா ஊரடங்னு காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்பதால் சத்துணவு குழந்தைகளுக்கு கிடைக்காது என்று தெரிந்து கொண்ட செலின், அவர்களது வீட்டிற்கு காய்கறிகளை தினமும் வழங்குமாறு எங்களிடம் கூறினார். இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்படும் முன்னரே கொரோனா குறித்து எங்களுக்கு அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி, நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எங்களிடம் விளக்கினார்” என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் ராஜ் கவுண்டர் அமைப்பின் செயலாளர் தேவராஜ் நல்லசிவம் தெரிவித்துள்ளார்.

‘பெயருக்கு பின் இருக்கும் சாதியை நீக்க முடியாது’

தனது சாதி பெயரை தன் பெயருக்கு பின் சேர்த்துள்ளதற்கு சமூக ஊடகங்களில் ஒரு சிலரால் செலின் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள செலின், “நான் பிறக்கும் முன்னரே 1970களிலேயே என் தந்தை அவரது பெயரை கவுண்டர் என்று மாற்றிக் கொண்டார். என் பெயர் இதுதான். என் அடையாளமும் வரலாறும் இதில் இருக்கிறது. அந்த வரலாறு வலி மிக்கதாக இருந்தாலுமே இதுதான் என் பெயர். நான் திருமணம் செய்துகொள்ளும் போது மாற்றிக் கொள்ளவில்லை. இப்போதும் மாற்றிக் கொள்ள மாட்டேன்,” என்று பதிவிட்டுள்ளார்.

செலின் ராணியை போல இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் மூர்த்தி என்பவரும் ஜோ பைடனின் கோவிட் – 19 கட்டுப்பாட்டு குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »