Press "Enter" to skip to content

அமெரிக்க தேர்தல்: பைடன் வெற்றிக்குப் பின் தடுமாறுகிறதா வளைகுடா நாடுகள்?

  • ஃபிராங்க் கார்ட்னெர்
  • பிபிசி செய்தியாளர் – பாதுகாப்பு விவகாரங்கள்

பிரிட்டனுக்கான செளதி தூதரின் கண்கள், அவரது செல்பேசியை பார்த்துக் கொண்டே இருந்தது. அவர் என்னிடம். “நான் உங்களை கொஞ்சம் கவனிக்காதது போல தோன்றினாலும் என்னை மன்னிக்க வேண்டும்” என சொன்னார். “விஸ்கான்சின் மாகாண தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருப்பதால், அதை கவனித்தபடி இருக்கிறேன்” என்று அதற்கான விளக்கத்தையும் அவர் கொடுத்தார்.

சரியாக 8 நாட்களுக்கு முன்பு, 2021ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக வெள்ளை மாளிகைக்குள் யார் இருப்பார் என்பதே நமக்குத் தெரியாது.

ஆனால், ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளிவந்தபோது, ரியாத்தில் இருக்கும் செளதி தலைமை, டிரம்ப் வெற்றி பெற்றபோது வாழ்த்து தெரிவித்த நேரத்தையும் விட இம்முறை பைடனுக்கு வாழ்த்து கூற அதிக நேரம் எடுத்துக் கொண்டது.

இது ஆச்சரியமளிக்கக்ககூடியது. காரணம். தனது நெருங்கிய நண்பரான வல்லரசு நாடு ஒன்றின் தலைவரின் (‘டிரம்ப்) நட்பை செளதி இழக்கவிருக்கிறது.

பைடனின் தற்போதைய வெற்றி, செளதி அரேபியா, வளைகுடா அரபு நாடுகளுக்கு, எதிர்காலத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இந்த பிராந்தியத்துடனான அமெரிக்காவின் கேந்திர ரீதியிலான உறவு, 1945ஆம் ஆண்டுக்குப் பிந்தையது என்பதால் அது தொடரவே செய்யும். ஆனால் மாற்றங்கள் பல நிகழ்ந்து வருவதால், வளைகுடா நாடுகள் அனைத்தும் இந்த உறவவை வரவேற்காது.

முக்கிய நட்பின் இழப்பு

செளதியில் ஆளும் செளத் குடும்பத்தின் மிகப்பெரிய ஆதரவாளர் டொனால்ட் டிரம்ப். 2017ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறது தாம் முதலாவதாக மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்துக்கு டிரம்ப் தேர்வு செய்த நாடு செளதி அரேபியா.

டிரம்பின் மருமகன், ஜாரெட் குஷ்னர் (Jared Kushner), செளதி பட்டத்து இளவரசர் மொஹம்மத் பின் சல்மானுடன் நெருக்கமான நட்புறவை ஏற்படுத்தியிருந்தார்.

2018ஆம் ஆண்டில், ஜமால் கஷோக்ஜி படுகொலைக்குப் பிறகு அதில் மொஹம்மத் பின் சல்மானுக்கு தொடர்பு இருக்கலாம் என பல முன்னணி மேற்கத்திய உளவு அமைப்புகளும் சந்தேகம் எழுப்பியபோது, செளதி இளவரசரை நேரடியாக குற்றம்சாட்டாமல் டிரம்ப் மறுத்தார்.

செளதி

அந்த நாட்களில் “கவலைப்பட வேண்டாம். இதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என மொஹம்மத் பின் சல்மான் தனது ஆட்களிடம் கூறியதாக வெளியான தகவல், சிறிய ஆச்சரியத்தை தந்தது.

செளதிக்கு ஆயுதங்களை விற்க அமெரிக்க நாடாளுமன்றம் ஆட்சேபம் தெரிவித்தபோது, அந்த நடவடிக்கையை கடுமையாக டிரம்ப் எதிர்த்தார்.

எனவே செளதி அரேபியா, ஐக்கிய அரசு எமிரேட்ஸ், பஹ்ரைன் போன்ற நாடுகள் தங்களின் முக்கியமான அமெரிக்க நட்பை இழக்கும் கட்டத்தில் உள்ளனர்.

இதில் நிறைய விஷயங்கள் மாறாது என்றாலும் சில விஷயங்கள் மாறலாம். அவை குறித்துப் பார்க்கலாம்.

யேமன் போர்

பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில், எட்டு ஆண்டுகள் துணை அதிபராக ஜோ பைடன் பதவி வகித்தார். அப்போது, யேமன் நாட்டின் ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது செளதி அரேபியா தாக்குதல் நடத்துவது குறித்து அவர் பெரும் அதிருப்தியில் இருந்தார்.

ஒபாமாவின் பதவிக் காலம் முடியும் நேரத்தில், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடந்த வான் வழி தாக்குதலில் மிகச் சிறிய அளவிலான வெற்றியை செளதி கண்டிருந்தது. அதே சமயம், யேமெனியர்கள் மீதும் அந்நாட்டின் உள்கட்டமைப்புகளும் பலத்த சேதத்தை அந்த போர் ஏற்படுத்தியது.

அமெரிக்காவால் பெரிதாக வரவேற்கப்படாத அந்த போரின் விளைவாக, செளதியுடனான ராணுவம் மற்றும் உளவுத் தகவல் பரிமாற்ற உறவை குறைத்தார் ஒபாமா.

யேமென்

அந்த நடவடிக்கையை தலைகீழாக புரட்டிப்போட்ட டிரம்பின் நிர்வாகம், யேமனில் தடையின்றி செயல்பட செளதிக்கு முழு சுதந்திரம் கொடுத்தது.

இப்போது மீண்டும் காலச் சூழல் மாறுவது போலத் தோன்றுகிறது. சமீபத்தில் னது வெளியுறவுறவுக் குழுவிடம் பேசிய ஜோ பைடன், யேமெனில் செளதி முன்னெடுக்கும் பேரழிவு போருக்கான அமெரிக்க ஆதரவை முடித்துக் கொண்டு, அந்நாட்டுடனான உறவை மீளாய்வு செய்யவிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதனால் யேமெனில் செளதி மற்றும் அதன் கூட்டாளிகள் மேற்கொண்டுள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வர செளதிக்கு பைடனின் புதிய அரசு அழுத்தம் கொடுக்கத் தொடங்கும்.

சில காலத்துக்கு முன்புதான் செளதி மற்றும் எமிரேட் அரசுகள், யேமெனில் நடக்கும் மோதல்களுக்கு ராணுவ வெற்றி கிடைக்காது என்பதை உணர்ந்தனர். அதனால் தங்களுடைய மரியாதையை காக்கும் விதமாக இந்த போரில் இருந்து வெளியேற ஒரு வழியை அவர்கள் தேடிக் கொண்டிருந்தனர்.

ஆனால், 2015ஆம் ஆண்டில் போர் தொடங்கியபோது, ஹுத்திகள் இப்போது இருப்பது போல இருக்கவில்லை.

இரான்

ஒபாமா அதிபராக இருந்த போது, மத்திய கிழக்கு நாடுகளில் சாதித்த மிகப்பெரிய விஷயம், Joint Comprehensive Plan of Action (JCPOA) என்று அழைக்கப்படும் இரான் அணுசக்தி ஒப்பந்தம்.

அந்த ஒப்பந்தம், இரான் மீதான தடைகளை நீக்கியது. அதற்கு பதிலாக, இரான் தமது அணுசக்தி நடவடிக்கைகள் மற்றும் ஒப்பந்த விதிகளை, கடுமையாக பின்பற்ற சம்மதித்தது. அத்துடன் இரான், தன் அணு உலைகளை ஐ.நா பார்வையாளர் மேற்பார்வை செய்யவும் சம்மதித்தது.

ஆனால், டிரம்ப் அந்த ஒப்பந்தத்தை இதுவரை இல்லாத மிக மோசமான ஒப்பந்தம் என விமர்சித்தார். மேலும், அந்த ஒப்பந்தத்தில் இருந்தும் வெளியேறினார்.

இப்போது பைடன், மீண்டும் ஏதோவொரு வடிவில் அந்த ஒப்பந்தம் பழைய நிலைக்கே திரும்பும் நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகிறார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் செளதி அதிர்ச்சி அடையலாம். கடந்த இலையுதிர்காலத்தில், செளதி அரேபியாவின் பெட்ரோ கெமிக்கல் ஆலையில் அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்குதல் நடந்த பிறகு, செளதி அரேபியாவின் வெளியுறவுத் துறை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் நான் கலந்து கொண்டேன். அதில், இரான் அணுசக்தி ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்தார், செளதியின் வெளியுறவுத் துறை அமைச்சர் அடெல் அல் ஜுபைர்.

இரானின் ஏவுகணை விரிவாக்கத் திட்டம் மற்றும் மத்திய கிழக்கில் இரான் மறைமுகமாக தன் ராணுவ பலத்தை பெருக்கிக் கொள்வதை கணக்கில் எடுத்துக் கொள்ளாததால், அந்த ஒப்பந்தம் ஆபத்தானது என்றார் ஜுபைர்.

இந்த ஒப்பந்தம், ஒபாமா நிர்வாகத்தின் தவறான மரபுகளின் ஒரு பகுதி. ஒபாமாவின் நிர்வாகம், இரான் என்கிற இஸ்லாமிய குடியரசால் ஏற்படும் அபாயங்களை கணக்கிடவில்லை என்று அவர் கூறினார்.

இரான்

ஜனவரி 2020 காலகட்டத்தில், இராக் மீது, அமெரிக்கா ஒரு டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இரானிய புரட்சிப் படையின் ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டார். அந்த நடவடிக்கையை செளதி மற்றும் சில வளைகுடா நட்பு நாடுகள் அமைதியாக பாராட்டின.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் புதிதாக பொறுப்பேற்கவிருக்கும் பைடன் அரசு, இரானுடன் பேரம் பேசுவதால், தங்களுடைய சொந்த நலன்கள் குறைக்கப்படலாம் என்று கவலைப்படுகின்றன.

கத்தார்

பென்டகனின் (அமெரிக்க ராணுவ தலைமையகம்) மிகப் பெரிய ராணுவ படை முகாம் கத்தாரில் இருக்கிறது. மத்திய கிழக்கிலேயே மிகவும் முக்கியமானதாக அல் உதெய்த் (Al-Udeid) விமானப்படை முகாம் கருதப்படுகிறது.

இந்த முகாமில் இருந்து கொண்டு தான், சிரியா முதல் ஆஃப்கானிஸ்தான் வரை, அமெரிக்கா தன் விமான செயல்பாடுகளை அமெரிக்கா வழிநடத்திக் கொண்டு இருக்கிறது.

இருப்பினும், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், எகிப்து போன்ற அரபு நாடுகளால், கத்தார் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. கத்தார், இஸ்லாமிய சகோதரத்துவம் போன்ற, அரசியல் இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஆதரவளிப்பது தான் இந்த புறக்கணிப்புக்கு காரணம்.

கத்தார்

கடந்த 2017-ம் ஆண்டு, டிரம்ப் ரியாத் சென்று வந்த பிறகு தான், இந்த புறக்கணிப்பு தொடங்கியது. இந்த நான்கு நாடுகளும், தங்களுக்கு டிரம்பின் ஆதரவு இருக்கும் என எதிர்பார்த்தார்கள்.

தொடக்கத்தில், கத்தார் அமெரிக்காவின் நட்பு நாடு, அல் உதெய்த் விமான முகாம் அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு முக்கியம் என்பது டிரம்புக்கு புரிய வைக்கப்படும் வரை, கத்தார் புறக்கணிப்பை டிரம்ப் பகிரங்கமாக ஆதரித்தார்.

இதேவேளை, பைடனின் நிர்வாகம், வளைகுடா நாடுகளுக்கு இடையிலான பிரச்னைகளைத் தீர்க்க விரும்பலாம்.

மனித உரிமைகள்

மனித உரிமைகள்

சில வளைகுடா நாடுகளில் மனித உரிமைகள் மிக மோசமான நிலையில் இருக்கிறது.

அரபு நாடுகளில் மனித உரிமைகள் பிரச்னைகளை விமர்சிப்பதில், டிரம்ப் எப்போதும் அதிக ஆர்வம் காட்டியது இல்லை.

பெண்கள் உரிமைக்கான செயல்பாட்டாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டதை விட, அமெரிக்காவின் ராணுவ முக்கியத்துவம் வாயந்த விஷயங்கள் மற்றும் வியாபார ஒப்பந்தங்கள் முக்கியம் என வாதிட்டார் டிரம்ப்.

வெளிநாட்டு தொழிலாளர்கள் கத்தாரில் தவறாக நடத்தப்பட்ட விவகாரம், 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் செளதி அரசின் பாதுகாப்புப் படை வீரர்கள், அதிகாரப்பூர்வ விமானங்களில் பறந்து வந்து, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நுழைந்து, செளதி அரசின் கடும் விமர்சகரான ஜமால் கஷோக்ஜியை கொன்று, அவரின் உடலை காணாபிணமாக்கினார்கள். இன்று வரை கஷோக்ஜியின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த சம்பவங்களை பைடனின் நிர்வாகம் மன்னிக்கும் எனத் தோன்றவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »