Press "Enter" to skip to content

ஸ்டேசி ஆப்ரம்ஸ்: பைடனின் வெற்றிக்கு காரணமாக சொல்லப்படும் கறுப்பின பெண் – யார் இவர்?

ஜனவரியில் அமெரிக்கத் துணை அதிபராகப் பொறுப்பேற்கும் போது கமலா ஹாரிஸ் சரித்திரத்தில் இடம் பெறுவார் ஆனால் பைடன் – ஹாரிஸ் ஆகியோர் வெள்ளை மாளிகைக்குச் செல்வதற்கான வெற்றியைப் பெற்றுத் தந்ததில், கறுப்பினதை சேர்ந்த வேறொரு பெண்ணும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

ஜோ பைடனுடன் சேர்ந்து அமெரிக்கத் தேர்தலில் பெற்ற வெற்றியைக் கமலா ஹாரிஸ் கொண்டாடிய போது, தங்கள் பிரசாரத்தின் வெற்றிக்குப் பங்களித்த சிறுபான்மையின பெண்கள் குழுவினர் குறித்துப் பேசுவதை உறுதி செய்தார் அவர். சிறுபான்மையின பெண்கள், குறிப்பாக கறுப்பின பெண்கள் குறித்துதான் பேசினார் கமலா ஹாரிஸ்; “பெரும்பாலும் மதிக்கப்படுவதில்லை, ஆனால் தாங்கள் தான் நமது ஜனநாயகத்தின் முதுகெலும்பாக உள்ளனர் என்பதை அவ்வப்போது அவர்கள் நிரூபித்து வருகிறார்கள்” என்று கமலா ஹாரிஸ் கூறினார்.

ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில் தன் வீட்டுக்கு வெளியிலிருந்து கமலா ஹாரிஸ் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த ஹண்ட் குடும்பத்தினர் அழுதுவிட்டனர்.

“ஜார்ஜியா இப்போது நீல நிறத்துக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாகாணத்துக்கும், குடிமக்களுக்கும் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இங்கே வாழும் கறுப்பின மக்களின் வாழ்க்கை மாறியுள்ளது” என்று 27 வயதான கிரிஸ்டின் ஹண்ட் கூறினார்.

“இது ஸ்டேசி அப்ராம்ஸின் முயற்சியால் நடந்தது. அடிமட்டத்தில் உள்ள கறுப்பின பெண்கள் பலரையும் வாக்களிக்கச் செய்து, அவர்களின் வாக்கு என்ன காரணத்தால் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை உணரும்படி அவர் செய்திருக்கிறார்,” என்று கிரிஸ்டின் கூறினார்.

மாற்றத்தை ஏற்படுத்திய கறுப்பின பெண்கள்

ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் முக்கியமான ஆதரவு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்துத்தான் வெள்ளை மாளிகைக்கான ஜோ பைடனின் பயணம் இருக்கும் என்ற நிலை இருந்தது. கறுப்பினத்தவர்களின் அதிக வாக்குகள் காரணமாக தெற்கு கரோலினாவில் பைடனுக்கு வெற்றி கிடைத்தது. அதனால் தான் கட்சியில் வேட்பாளராக நிற்பதற்கு அவருக்கு வாய்ப்பும் கிடைத்தது. பென்சில்வேனியாவிலும் வெற்றி; அதன்பின் தேர்தலில் வெற்றி; பிலடெல்பியா மற்றும் பிட்ஸ்பெர்க் போன்ற நகரங்களிலும் கறுப்பின மக்களின் ஏகோபித்த ஆதரவு அவருக்குக் கிடைத்தது. கறுப்பின வாக்காளர்களில் பத்தில் 9 பேர் பைடனுக்கு ஆதரவு அளிப்பதாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்தது.

பைடன்

பைடனின் வெற்றிக்கு உண்மையில் யார் காரணமாக இருந்தார்கள் என்று இந்த நகரங்களில் கேட்டால், தங்கள் சமூகத்தில் உள்ள கறுப்பின பெண்கள் தான் இதற்குக் காரணம் என்று சொல்கிறார்கள்.

புளோரிடாவில் ஜேக்சன்வில்லேவில் அமைப்பாளராக இருக்கும் கிருஜான்டெர் ஸ்காட் போன்ற பெண்களுக்கு, தேர்தலுக்கு முந்தைய சில வாரங்களில் மிரட்டல்கள் வந்ததால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்கள் பகுதியில் உள்ள கறுப்பின பெண்களை வாக்களிக்க செய்வதற்கு முயற்சி மேற்கொண்டதால் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பிலடெல்பியாவில் வாக்களிப்பது உரிமை என்ற இயக்கத்தைச் சேர்ந்த பிரிட்டனி ஸ்மால்ஸ் என்பவர், ஓட்டுகளின் சக்தியை அறிந்திருந்த காரணத்தால், தாம் வசிக்கும் பகுதியில், மக்களிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்.

யார் இந்த ஸ்டேசி அப்ராம்ஸ்?

ஜார்ஜியாவில் ஜனநாயகக் கட்சியினர் ஏறத்தாழ அனைவருமே ஸ்டேசி அப்ராம்ஸை புகழ்கிறார்கள். தேர்தலில் தன் கட்சிக்காக பணியாற்றிய லின்டா கிரான்ட் என்பவர், “செயல்களைச் செய்து முடித்திடு” என்பதன் அர்த்தமாக அப்ராம்ஸின் பெயர் இருந்தது என்று கூறுகிறார்.

ஆனால், சில காலங்களுக்கு முன்பு வரையில் அப்ராம்ஸ் பற்றிக் கூறும் போது, ஆளுநர் என்று தான் ஜனநாயகக் கட்சியினர் குறிப்பிட்டனர். 2018 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மாகாண ஆளுநர் பதவிக்குப் போட்டியிடும் முதலாவது ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் என்ற வரலாற்றை அவர் ஏற்படுத்தி இருந்தார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், ஜார்ஜியாவில் நீண்ட காலம் அரசு செயலாளராக இருந்தவருமான பிரியன் கெம்ப் இவரை எதிர்த்துப் போட்டியிட்டார்.

கெம்ப் பதவியிலிருந்த ஆறு ஆண்டு காலத்தில், “செயல்பாடற்ற நிலை” அல்லது தவறுதலாக ஜார்ஜியா மக்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களின் வாக்குரிமைகளை ரத்து செய்தார். அதை எதிர்த்து, வாக்குரிமை மறுக்கப்படுவதாக அப்ராம்ஸ் போன்றவர்கள் குற்றஞ்சாட்டினர்.

நன்றி தெரிவிக்கும் பதாகை

கெம்ப் வெறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளில் வெற்றி பெற்று ஆளுநரானார். தேர்தல் முடிந்த பிறகு ஆற்றிய உரையில், வாக்குரிமைகள் நீக்கப்பட்டதால் தான் தனக்கு வெற்றி கிடைக்காமல் போனதாகக் குறிப்பிட்டு, அந்தப் பிரச்னையை சரி செய்யப் போவதாக அப்ரம்ஸ் அறிவித்தார்.

“உடைந்து போனவற்றைச் சரி செய்யக் கூடிய தேசிய அனுபவம் நமக்கு உள்ளது என்பதால் நாம் பலமிக்க தேசமாக இருக்கிறோம்” என்று அன்றைக்கு இரவு ஆற்றிய உரையில் அவர் கூறினார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து, 2020 தேர்தலுக்கு முன்னதாக, ஜார்ஜியாவில் மட்டும் அவரும் அவருடைய அமைப்புகளும் சேர்ந்து 8 லட்சத்துக்கும் அதிகமானவர்களை வாக்காளர்களாகப் பதிவு செய்தது. மறு எண்ணிக்கை நடக்கும் என்றாலும், இரண்டு தசாப்த காலத்துக்குப் பிறகு ஜார்ஜியா அதிபர் போட்டியில் ஜனநாயகக் கட்சிக்குச் சிறிய முன்னிலையை பெற்றுத் தருவதில் அப்ராம்ஸ் மற்றும் அவருடைய அணியினர் தீவிர பங்காற்றியதாக பரவலாகப் பாராட்டுகள் குவிகின்றன.

இதே வாக்காளர்கள் ஜனவரி தேர்தலில் மீண்டும் ஒரு முறை தங்கள் சக்தியை வெளிப்படுத்த உள்ளனர். ஜார்ஜியாவில் இரண்டு செனட் இடங்களுக்கான முக்கிய தேர்தல் நடக்கவுள்ளது. அமெரிக்க செனட்டில் எந்தக் கட்சி ஆதிக்கம் செலுத்தப் போகிறது என்பதை முடிவு செய்வதாக இந்தத் தேர்தல் இருக்கும். ஜார்ஜியாவில் பைடனுக்கு வெற்றி கிடைக்குமானால், அப்ராம்ஸ் மற்றும் அவருடைய அணியினருக்கு, பைடன் மிகவும் நன்றிக்கடன் பட்டவராக இருக்க வேண்டும்.

அந்த மாகாணத்தில் உள்ள கறுப்பின பெண்கள் தங்கள் சக்தியை உணரும் நிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய அப்ரம்ஸின் முயற்சிகள் எப்போதும் நினைவில் கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

“ஜார்ஜியா மக்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கு அப்ரம்ஸ் மேற்கொண்ட முயற்சிகள் ஜார்ஜியாவுக்கும், தேசத்துக்கும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது”

“ஒவ்வொரு தேர்தலிலும் எங்களை சாதாரணமாக மதிப்பிட்டுவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். இப்போது எங்கள் ஓட்டு முக்கியமானது என்பதை தேசமும், உலகமும் அறிந்து கொண்டிருக்கிறது” என்கிறார்கள் கண்ணீர் சிந்திய ஹண்டின் குடும்பத்தினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »