Press "Enter" to skip to content

பொதுவெளியில் புகைப்பிடிக்கும் கிம்: அதிகரிக்கும் சமூக பிரச்னையை எப்படி எதிர்கொள்கிறது வட கொரியா?

  • உபசனா பட்
  • பிபிசி மானிட்ரிங்

வட கொரியா போன்ற ஒரு நாட்டில் அதிகப்படியான புகைப்பிடிக்கும் பழக்கம் எப்படி எதிர்கொள்ளப்படுகிறது? அதுவும் அந்த நாட்டின் அதிபரே அவ்வப்போது பொதுவெளிகளில் புகைப்பிடிப்பதை நாம் காணலாம் என்றபோது அங்கு புகைப்பிடித்தலை ஒழித்தல் எந்தளவிற்குச் சாத்தியம்?

நாட்டில் புகைப்பிடித்தலுக்கு எதிராகப் பல பிரசாரங்கள் நடைபெற்றாலும், நாட்டில் உள்ள மொத்த ஆண்களில் பாதிபேர் புகைப்பிடிக்கின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால் பெண்கள் புகைப்பிடிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கும் சட்டம் ஒன்று இந்த மாதத்தின் தொடக்கத்தில் வட கொரியாவில் இயற்றப்பட்டது. மேலும், சுகாதாரமான ஒரு சூழலை உருவாக்குவதற்கான விதிமுறைகளும் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால் அந்த நாட்டின் அரசு ஊடகங்கள் பெரும்பாலும், நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் புகைப்பிடிப்பதை போன்ற காட்சிகளை அடிக்கடி ஒளிபரப்புகின்றன. இது ஒரு மோசமான உதாரணமாக மக்கள் மத்தியில் உருவெடுக்கிறது. எனவே புகைப்பிடித்தலுக்கு எதிரான பிரசாரங்களால் அங்கு என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும்?

புதிய சட்டம் என்ன சொல்கிறது?

நவம்பர் மாத தொடக்கத்தில் இயற்றப்பட்டுள்ள அந்த புதிய சட்டம் என்ன சொல்கிறது?

அந்த சட்டம், சட்டப்பூர்வமாகவும், சமூக ரீதியாகவும் சிகரெட்டின் விற்பனை, தயாரிப்பு மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவற்றிற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கிறது. அதேபோல அந்த சட்டத்தில் எந்தெந்த இடங்களில் புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் நடப்புகள் நிகழும் இடங்கள், திரையரங்குகள், கல்வி நிலையங்கள், பொதுச் சுகாதார வசதிகள், பொதுப் போக்குவரத்துகள் ஆகிய இடங்களில் அந்த சட்டத்தின்படி புகைப்பிடித்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புகைப்பிடித்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால் அபராதங்களின் விவரம் குறித்து அரசு ஊடகம் எதையும் குறிப்பிடவில்லை.

வட கொரியா

இந்தச் சட்டம் இயற்றப்பட்டபிறகு, வட கொரிய அரசு செய்தி முகமையான கேசிஎன்ஏவில் புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்றும் “உலகமுழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் இதைத் தெரிவிப்பதாகவும்” கூறப்பட்டிருந்தது.

புகைப்பிடித்தலுக்கு எதிரான பிரசாரம் எப்போது தொடங்கியது?

2005ஆம் ஆண்டு புகையிலை பயன்படுத்தலைத் தடுக்கும் உலக சுகாதார ஒப்பந்தம் ஒன்றிற்கு வட கொரியா ஒப்புக் கொண்டபிறகுதான் அந்நாட்டில் புகைப்பிடித்தலுக்கு எதிரான பிரசாரங்கள் தொடங்கின.

நாட்டின் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் ஒரு பிரிவாக, சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை படங்கள் அச்சிடப்பட்டன. மேலும் பொது இடங்களில் புகைப்பிடித்தலுக்கு எதிரான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

2019ஆம் ஆண்டில் புகைப்பிடித்தல் ஏற்படுத்தும் தீங்கு குறித்த ஒரு வலுவான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது என அரசு ஊடகமான கேசிஎன்ஏ தெரிவிக்கிறது. மேலும் வெளிநாட்டுப் புகையிலை இறக்குமதியை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றும் அரசு ஊடகம் தெரிவிக்கிறது. காலையிலும், மாலையிலும் புகைப்பிடிப்பவர்கள் `தீவினைக்கு அஞ்சாதவர்கள்` என்று கொரியாவின் மத்திய தொலைக்காட்சி தெரிவிப்பதாகத் தென் கொரியாவில் உள்ள டெய்லி என்கே என்ற வலைத்தளம் கூறுகிறது.

இந்த வருடம், புகைப்பிடித்தலில் உள்ள ஆபத்துக்களை விளக்கும் வலைத்தளம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “புகைப்பிடித்தலுக்கு எதிரான பிரசாரங்களில் அறிவியலும், தரவுகளும் முக்கியம்,” என்கிறது அரிராங் மியாரி என்ற வலைத்தளம்.

புகைப்பிடிக்கும் ஒரு தலைவர்

கிம் ஜாங் உன் தொடர்ந்து புகைப்பிடிக்கும் ஒரு நபர்; அவர் குழந்தைகளின் முகாமிற்கு சென்றாலும் சரி அல்லது ஏவுகணை சோதனை தலத்திற்குச் சென்றாலும் சரி கையில் சிகரெட்டுடன் இருப்பதை நம்மால் காண முடியும்.

பிப்ரவரி 2019ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்புடனான பேச்சுவார்த்தைக்காக வியட்நாமிற்கு தொடர் வண்டியில் சென்று கொண்டிருந்தபோது, இடைவெளி நேரத்தில் அவர் புகைப்பிடிப்பது போன்றும் அவரது சகோதரி ஜிம் யோ ஜாங் ஆஷ் ட்ரேவை வைத்திருப்பதைப் போன்ற படங்களும் வெளியாகின.

கிம் புகைப்பிடிப்பதை விட வேண்டும் என அவரின் மனைவி ரி சோல் ஜு தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும் ஆனால் கிம் அதனைக் கேட்க மறுக்கிறார் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெண்கள் உண்மையில் புகைப்பிடிப்பது இல்லையா?

வட கொரியாவை பொறுத்தவரை புகைப்பிடிப்பவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகமாகதான் உள்ளது.

நாட்டின் 15வயதுக்கு மேற்பட்ட 46.1சதவீத ஆண்கள் புகைப்பிடிக்கின்றனர் என உலக சுகாதார நிறுவன அறிக்கை ஒன்று 2019ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது.

தரவுகளின்படி அங்கு பெண்கள் புகைப்பிடிப்பது இல்லை. புகைப்பிடிக்கும் பெண்களை அங்கு தரைக்குறைவாக பார்ப்பார்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

கலாசார ரீதியிலும், சமூக ரீதியிலும் அங்கு பெண்கள் புகைப்பிடிப்பது என்பது ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்று. இந்த எண்ணம் பெண்கள் மத்தியிலும் உண்டு. தென் கொரியாவுடன் ஒப்பிட்டால் குறிப்பாக இளம் பெண்கள் மத்தியில் இந்த எண்ணம் உண்டு.

கிம்

சில வயதான மற்றும் திருமணமான பெண்கள் தனிப்பட்ட இடங்களில் புகைப்பிடிப்பார்கள் என்கிறார் வட கொரியாவில் பணியாற்றும் அமெரிக்காவை மையமாக கொண்ட கொரியீனாகனெக்ட் என்னும் அரசு சாரா அமைப்பின் இயக்குநர் ஜேம்ஸ் பேன்ஃபில்.

வட கொரியாவை பொறுத்தவரை ஆண்கள் அதிகமாக புகைப்பிடித்தலும்., அதற்கு அடியமையாக இருத்தலும் கலாசார ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படும் ஒன்று என்கிறார் என்கே நியூஸ் என்ற வலைத்தளத்தில் செய்தியாளர் மின் காவ் சோய்.

சில சமயங்களில் புகைப்பிடித்தலுக்கு எதிரான பிரசாரங்களில் பெண்கள், புகைப்பிடிக்கும் ஆண்களை திட்டுவது போன்ற காட்சிகளும் உண்டு என்கிறார் மின் காய்.

காரணம் எதுவாக இருந்தாலும், வட கொரியாவில் புகைப்பிடித்தலால், பலர் உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் புகையிலை பயன்பாட்டால், 71 ஆயிரத்து 300 பேர் உயிரிழக்கின்றனர் என்கிறது `டோபாக்கோ அட்லாஸ்`.

இந்த பிரசாரங்கள் சாதித்தவை என்ன?

இந்த முயற்சிகள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதாக சில சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

“ஆண்களில் பாதி பேர் அல்லது 46.1 சதவீதத்தினர் புகைப்பழக்கம் உடையவர்கள். 2009ல் இது 52.3 சதவீதமாக இருந்தது. கடந்த 13 ஆண்டுகளில் 20 முறை வடகொரியா சென்று இருப்பேன். எனது பயணங்களில் குறைந்த எண்ணிக்கையிலான புகை பிடிப்பவர்களையே பார்க்கிறேன்,” என்கிறார் ஹார்வெர்ட் மருத்துவ கல்வி நிலையத்தின் கொரிய சுகாதார திட்ட இயக்குநர் கீ பி பார்க்.

வடகொரியாவில் சுலபமாகவும், மிகவும் குறைந்த விலையில் சிகரெட் கிடைக்கிறது.

“பல நாடுகளை போல, வட கொரியாவும் தனது சொந்த நவீனத்துவ கருத்துக்கு எதிராக போராடுகிறது. புகைப்பிடித்தல் நிறுத்துதல் உள்ளிட்ட சில நவீன சுகாதாரக் கொள்கைகள் இதில் அடங்கும். அரசின் அபிலாஷைகளுக்கும், நிஜத்திற்கும் பெரும் இடைவெளி இருக்கிறது. இது அந்நாட்டின் புகைப்பழக்கம் தொடர்புடைய அரசின் கொள்கைகளுக்கும், அந்நாட்டில் வளர்ந்து வரும் புகைப் பழக்க கலாசாரத்திற்கும் இது பொருந்தும்,” என்கிறார் மின் சாவோ .

சில ஆய்வாளர்கள் மக்கள் இந்த பழக்கத்தைக் கைவிட வலுவான தடுப்பு நடவடிக்கைகள் தேவை என்று கருதுகின்றனர்.

“புகைப்பழக்கத்திற்கு எதிரான பிரசாரங்கள் சில குறிப்பிட்ட இடங்களில் புகைப்பிடிப்பதை குறைக்கும் நோக்கும் கொண்டதாகவே உள்ளது. மன உறுதி மட்டுமே புகைப் பழக்கத்தைக் கைவிட உதவும்,” என்கிறார் பன்ஃபில்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »