Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ஆஸ்திரேலியாவில் ஒருவர் சொன்ன பொய்யால் ஒரு மாநிலம் முழுவதும் ஊரடங்கு

பீட்சா கடை ஊழியர் ஒருவர் சொன்ன பொய் காரணமாக ஆஸ்திரேலியாவில் உள்ள தெற்கு ஆஸ்திரேலிய மாகாணம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பரவல் தடுப்புக்காக முழு ஊரடங்கு அமல்படுத்த நேரிட்டதாக அந்த மாகாணத்தின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தெற்கு ஆஸ்திரேலிய மாகாணத்தில் 36 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட பின்பு புதன்கிழமை முதல் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

வெளியூரிலிருந்து வந்தவர்கள் அல்லாமல் அந்த மாகாணத்துக்கு உள்ளேயே இருப்பவர்களுக்கு, கோவிட்-19 தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது ஏப்ரல் மாதத்திற்கு பின்பு இதுதான் முதல் முறை.

புதன்கிழமை முதல் மாகாணம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணம் அங்கு உள்ள பீட்சா கடை ஒன்றில் பணியாற்றுபவர் கூறிய பொய்.

அவருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட பின்பு அவர் அந்த கடைக்கு பீட்சா வாங்க மட்டுமே சென்றதாக அவர் கூறினார்.

ஆனால், அவர் உண்மையில் அந்த கடையில் வேலை பார்த்து வந்தவர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த நபர் கூறிய தவறான தகவலால், மிகவும் குறைந்த நேரம் மட்டுமே அவர் அந்த கடையில் செலவிட்ட பொழுதும் அங்கு அவருக்கு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உண்டாகி உள்ளது என்று அதிகாரிகள் கருதினர்.

Banner image reading 'more about coronavirus'
Banner

இதனால் அந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கிருமியின் பரவும் தன்மை அதிகமாக இருக்கிறது என அந்த மாகாணத்தின் அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர். அதன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

“நான் மிகவும் எரிச்சலாக இருக்கிறேன் என்று கூறினால் அது நான் உணர்வது முழுவதையும் வெளிபடுத்தப் போதுமானதாக இருக்காது,” என்று அந்த மாகாணத்தின் முதல்வர் ஸ்டீவன் மார்ஷல் வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

அந்த நபரின் செயல்களால் அனைவரும் கோபத்தில் இருக்கிறோம். இதன் பின் விளைவுகள் என்ன என்பது குறித்து கவனமாக இருக்கிறோம் என்றும் மார்ஷல் தெரிவித்தார்.

பொய் கூறினால் தண்டனை எதுவும் சட்டத்தில் இல்லை என்பதால் அந்த பீட்சா கடை ஊழியர் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று தெற்கு ஆஸ்திரேலிய மாகாணத்தின் காவல் ஆணையர் கிராண்ட் ஸ்டீவன்ஸ் தொடக்கத்தில் தெரிவித்தார்.

ஆனால் பின்னர் அவரின் செயல்களில் சட்ட விதிமீறல் எதுவும் உள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று பின்னர் காவல் ஆணையர் தெரிவித்தார்.

ஊரடங்கு விதிகள், பரவலான பரிசோதனைகள் மற்றும் தொடர்புகளைத் தடமறிதல் ஆகியவற்றில் ஆஸ்திரேலியா முழுமையான கவனம் செலுத்தி வருகிறது.

இதுவரை அங்கு சுமார் 900 பேர் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் 28,000 அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »