Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: சட்டப் போராட்டத்தில் அடுத்தடுத்த தோல்விகளைச் சந்திக்கும் டிரம்ப் தரப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் கைப்பற்றிய பென்சில்வேனியா மாகாணத்தில் பதிவான பல லட்சம் தபால் வாக்குகளை செல்லாதவை என்று அறிவிக்கக்கோரி, அதிபர் டிரம்ப் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை அந்த மாகாணத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று தள்ளுபடி செய்துள்ளது.

முறைகேடு நடந்துள்ளதாக டிரம்ப் பிரசாரக் குழு முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று நீதிபதி மேத்யூ பிரான் தெரிவித்துள்ளார்.

இதனால் அடுத்த வாரம் அந்த மாகாண அரசால் பைடனுக்கு வெற்றிச் சான்றிதழ் அளிப்பதற்கு வழி உண்டாகியுள்ளது.

20 தேர்தல் சபை உறுப்பினர்களைக் கொண்டுள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் பைடன் டிரம்பைவிட சுமார் 80,000 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, ஜோர்ஜா மாகாணம், பைடனின் வெற்றியை சான்றளித்ததன் மூலம் டிரம்ப் நிர்வாகத்திற்கு மற்றொரு அடியைக் கொடுத்து இருக்கிறது. இங்கு வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்ததால் மறு எண்ணிக்கை நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மிஷிகன் மாகாணத்தில் உள்ள குடியரசுக் கட்சி நிர்வாகிகள், அதிபர் தேர்தல் முடிவை அறிவிப்பதை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி, மாகாண தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சியினர், மிகப் பெரிய கவுண்டியில், அதிபர் தேர்தல் வாக்குகளை மறுசரிபார்ப்பு செய்ய வேண்டும் எனக் கோரி இருக்கிறார்கள்.

இருப்பினும், மிஷிகன் மாகாண அரசு, இந்த யோசனைக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தது.

அமெரிக்க அதிபர் தேர்தல்

தாமதங்கள் மற்றும் தணிக்கைகள் சட்டத்தின்கீழ் அவ்வாறு செய்வது அனுமதிக்கப்படவில்லை எனவும் அந்த மாகாண அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், இந்த மாத தொடக்கத்தில் நிகழ்ந்த அதிபர் தேர்தலில், இந்த மாகாணத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இரண்டு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் இரண்டு குடியரசுக் கட்சியினர்களைக் கொண்ட மிஷிகன் தேர்தல் குழு, திங்கட்கிழமையன்று கூடி, தேர்தல் முடிவுகளை சான்றளிக்க உள்ளது.

அவர்களின் முடிவை மிஷிகனின் தேர்தல் ஆணையச் செயலாளரும், பின்னர் ஆளுநரும் கையெழுத்திட வேண்டும். இதில் ஏதாவது மாற்றம் என்றால், அதை ஜனநாயகக் கட்சியினர்கள், சரியான காரணங்கள் இல்லாமல் ஆதரிக்கமாட்டார்கள்.

டிரம்ப் மற்றும் மிஷிகனில் இருக்கும் உள்ளூர் குடியரசுக் கட்சியினரால், மீண்டும் மீண்டும் பரவலான மோசடி நடந்து இருக்கிறது என்று சொல்லும் கூற்றுகளை, மிஷிகன் மாகாண அரசு “முற்றிலும் தகுதியற்ற குற்றச்சாட்டு” எனக் கூறியுள்ளது.

டிரம்ப், கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் வைத்து, மிஷிகன் மாகாணத்தின் குடியரசுக் கட்சியின் தலைமை உறுப்பினர்களைச் சந்தித்து, மிஷிகனில் பைடனின் வெற்றியைப் புறக்கணிக்கச் சொல்லி, அவர்கள் மீது அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது நாடு முழுவதும் உள்ள தேர்தல் சபை உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் வழக்கமான சந்திப்பு தான் என வெள்ளை மாளிகை முன்னர் சொன்னது.

குடியரசுக் கட்சியின் வேட்பளார் டிரம்ப், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த போட்டியாளரான ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்க மறுத்துவிட்டார். ஆனால் பைடன்தான் இப்போது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அவர்தான் ஜனவரி 20 அன்று பொறுப்பேற்க உள்ளார்.

சாதாரணமாக, அதிகாரம் கைமாறும் செயல்பாடுகள், டிரம்பின் நடவடிக்கைகளால் தடம் புரண்டு கிடக்கின்றன. பைடனால், வெள்ளை மாளிகை அலுவலகத்தில் எந்த ஒரு பிடியையும் பெற முடியவில்லை. டிரம்ப் நியமித்தவர்கள், ஜோ பைடனை தேர்தல் வெற்றியாளராக உறுதிப்படுத்தவில்லை.

கடந்த சனிக்கிழமை, சமூக ஊடகமான ட்விட்டர், அமெரிக்க அதிபரின் அலுவல்பூர்வ ட்விட்டர் கணக்கை (@POTUS), 20 ஜனவரி 2021 அன்று ஜோ பைடனுக்கு கொடுப்போம் எனச் சொல்லி இருக்கிறது.

அதிபர் பதவிக்காலம் முடிந்து டிரம்ப் ஒரு சாதாரண குடிமகன் ஆன பின், மீண்டும் விதி மீறல்களில் ஈடுபட்டால், அவரது ட்விட்டர் கணக்கு கட்டுப்படுத்தப்படும் எனவும் சொல்லி இருக்கிறது ட்விட்டர் தரப்பு.

ஏன் தேர்தல் வெற்றிச் சான்றிதழ் அவசியம்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்கர்கள் வாக்களிக்கும் போது, அவர்கள் உண்மையில் ஒரு மாகாண தேர்தலில் வாக்களிக்கிறார்கள், ஒரு தேசிய தேர்தலில் அல்ல.

Trump options narrow as Michigan backs Biden win

அவர்கள் தங்கள் மாகாண தேர்தல் சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்யவே வாக்களிக்கின்றனர்.

பின்னர், அவ்வாறு தேர்வான தேர்தல் சபை உறுப்பினர்கள் அதிபரைத் தேர்வு செய்ய வாக்களிப்பார்கள். இவர்கள், வழக்கமாக தங்கள் வாக்காளர்களின் விருப்பத்தை பின்பற்றுகிறார்கள்.

உதாரணமாக, பைடன் கைப்பற்றிய மிஷிகனில், தேர்தல் சபை உறுப்பினர்கள் அனைவரும் ஜோ பைடனுக்கு வாக்களிக்க வேண்டும். காரணம் மிஷிகன் மாகாணத்தை பைடன் வென்று இருக்கிறார்.

இவர்கள் வாக்களிக்க வேண்டுமானால், தேர்தல் வெற்றிச் சான்றிதழ் அவசியம்.

அமெரிக்க காங்கிரஸில் (பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்) உள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கைக்கு சமமாக, மாகாணங்களில் வாக்குகள் எண்ணிக்கை மாறுபடுகின்றன.

டிரம்ப் 232 தேர்தல் சபை உறுப்பினர்களைப் பெற்று இருக்கும் நிலையில், பைடன் மொத்தம் 306 தேர்தல் சபை உறுப்பினர்களைப் பெற்று இருக்கிறார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது அதிபர் பதவிக்கு வர வெல்ல வேண்டிய 270 எனும் எண்ணிக்கையை விட மிக அதிகம்.

நாடு முழுவதும் பதிவான வாக்குகளில், டிரம்பைவிட பைடன் 59 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »