Press "Enter" to skip to content

ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? ரஷ்ய அதிபர் புதின் தரும் விளக்கம் என்ன?

அமெரிக்காவின் அதிபராக தேர்வாகியிருக்கும் ஜோ பைடனுக்கு இன்னும் தான் வாழ்த்து தெரிவிக்காததன் காரணத்தை ரஷ்ய அதிபர் வெளியிட்டுள்ளார்.

சட்டபூர்வமாக எழுப்பப்பட்டுள்ள பிரச்னைகள் முடிவுக்கு வந்த பிறகே, தான் வாழ்த்து தெரிவிக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வாழ்த்து தெரிவிப்பதில் ஏற்படும் தாமதம் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவைப் பாதிக்காது என்று கூறினார்.

இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்கனவே பதற்றம் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்போதுமே புதினைப் புகழ்ந்து வருகிறார். மேலும், தான் அதிபராக தேர்வானதற்கும் அவர் ரஷ்யாவிடம் உதவி கோரியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

என்ன சொன்னார் புதின்?

வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் தொய்வு ஏற்பட ஒரு வாய்ப்பளிப்பது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த புதின், ‘ஏற்கனவே மோசமாக உள்ள உறவில் இன்னும் மோசமாக என்ன உள்ளது’ என்று கூறினார்.

மேலும் அவர், “தற்போதைய அதிபர் டிரம்ப், புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் ஆகிய இருவருடனும் எங்களுக்கு மரியாதையான உறவு உள்ளது. எங்களுக்கு யாருடனும் எந்த பிரச்சனையும் இல்லை. இது ஒரு அதிகாரபூர்வமான விவகாரம். நாங்கள் எந்த உள்நோக்கத்துடனும் செயல்படவில்லை. இது போன்ற விவகாரங்களில் அவசரம் காட்டுவதால் ஒரு மோசமான உறவை மேம்பட்டுவிடும் என்று நான் நினைக்கவில்லை,” என்று தெரிவிக்கிறார்.

வாழ்த்து கூறிய உலக தலைவர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்தவர்கள், அவர்களுக்கு எதை எப்போது செய்வது என்று தெரியும் என்று புதின் கூறினார்.

கடந்த முறை கூட அனைவரும் ஹிலாரி கிளின்டனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் இறுதியில் டிரம்ப் வெற்றி பெற்றார் என்றும் புதின் கூறினார்.

அரசியல் மோதல்கள் முடிவடையும் வரை காத்திருப்பு

பைடன்

அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு அதிபருடனும் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகக் கூறிய புதின், வாக்குகள் எண்ணப்பட்டு உள்நாட்டு அரசியல் போராட்டம் நிறுத்தப்படும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.

“அமெரிக்க மக்களின் நம்பிக்கையை வென்ற எந்தவொரு அதிபருடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்” என்று புதின் கூறினார்.

நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்காவில் தேர்தல் நடைபெற்றது. டிரம்பின் போட்டியாளரான ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தேர்தல் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இதை ஏற்க டிரம்ப் தயாராக இல்லை. வாக்குகளை எண்ணுவதில் முறைகேடு நடந்ததாக டிரம்ப் கூறி வருகிறார். வாக்குகளின் எண்ணிக்கை இன்னும் பல மாநிலங்களில் நடந்து வருகிறது.

டிரம்பை விட சுமார் ஆறு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார் பைடன். அமெரிக்காவில் வெற்றி பெற, 270 எலக்டோரல் கல்லூரி வாக்குகள் தேவை, பைடனுக்கு 306 வாக்குகள் கிடைத்துள்ளன.

சீனாவின் மௌனம்

ஷி

ரஷ்யாவின் நட்பு நாடான சீனாவும் ஜோ பைடனை வாழ்த்த நீண்ட மௌனம் காத்திருந்தது. ஆனால் இறுதியாக சீனா நவம்பர் 13 அன்று பைடனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டது.

“அமெரிக்க குடிமக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம். ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸை சீனா வாழ்த்துகிறது.” என்று நவம்பர் 13 ஆம் தேதி, சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக வாழ்த்தினார்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு சமீப காலங்களில் ஆட்டம் கண்டுள்ளது.

வர்த்தகம், உளவு, கொரோனோ தொற்றுநோய் தொடர்பாக சீனா – அமெரிக்கா இடையே பதற்றம் முன்னரைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.

வாழ்த்து தெரிவிக்காத பிற நாடுகள்

டிரம்ப் வென்ற போது, புதின் உடனடியாக வாழ்த்துக்களைத் தெரிவித்தார், ஆனால் புதினின் வாழ்த்துக்களுக்காக இன்னும் கூட காத்திருக்க வேண்டியதிருக்கும் என்பதை பைடன் உணர்கிறார்.

ஆனால் இந்த விவகாரம் ரஷ்யா, சீனாவுடன் நிற்கவில்லை. பைடனுக்கான வாழ்த்து, இன்னும் பிரேசில், மெக்ஸிகோ மற்றும் வட கொரியாவிலிருந்தும் கூட வரவில்லை.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ட்ரம்பின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகக் கருதப்படுகிறார்.

போல்சினாரூ

பைடன் தனது தேர்தல் பிரசாரத்தில் அமேசான் காடுகளைக் காப்பாற்ற பிரேசிலுக்கு அழுத்தம் கொடுப்பது குறித்தும் பேசினார்.

இத்தகைய சூழ்நிலையில், தற்போதைய பிரேசில் அரசாங்கம் டிரம்பை விட பைடனை அதிகம் விரும்பக்கூடும் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில், மெக்ஸிகோவின் அதிபர் ஆண்ட்ரூ லோபஸ், பைடனை வாழ்த்துவதற்கு அவசரப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார். லோபஸுக்கும் டிரம்புடன் நல்ல உறவு இருக்கிறது.

மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவில் குடிபெயர்பவர்கள் குறித்து டிரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையிலும் இது எப்படி சாத்தியம் என்ற வியப்பு எழுகிறது.

வட கொரிய ஆட்சியாளர் கிம் ஜாங் உன்-னும் பைடனை வாழ்த்துவதில் மௌனமாக இருக்கிறார், கடந்த தேர்தலில் அவர் டிரம்பிற்கு உடனடி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பைடன் சீனா மற்றும் ரஷ்யா குறித்து மிகவும் கண்டிப்பாக இருப்பார் என்றும் புவி சார் அரசியலில் இந்த இரு நாடுகளும் தலையெடுப்பதற்கான வாய்ப்பை இவர் வழங்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், ட்ரம்ப்பின் தவறான கொள்கைகள் காரணமாக, ரஷ்யாவும் சீனாவும் கடந்த நான்கு ஆண்டுகளில் பலம் பெற்று விட வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »