Press "Enter" to skip to content

பின்லாந்தில் பெண்கள் நடத்தும் அரசில் என்ன நடக்கிறது?

  • மேகா மோஹன் & யூசுஃப் எல்டின்
  • பிபிசி உலக சேவை

அனைவரின் கண்களும் பின்லாந்தின் பிரதமர் சன்னா மரினின் ஓர் ஆண்டு கால, அனைத்து மகளிர் கூட்டணி அரசு மீது இருக்கிறது.

இந்த அரசு, கொரோனா வைரஸை அமைதியாகவும், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததற்காகவும் பாராட்டைப் பெற்றார்கள். பிற்பட்டோர்களுக்கான சட்டத்தை மேம்படுத்த, இவரின் வழக்கத்துக்கு மாறான பின்புலம் உதவுமா என, பாலின சிறுபான்மை குழுக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

பிரதமரின் அலுவலகத்தில் இருந்து, அந்த நாட்டு பாராளுமன்றமான ஹவுஸ் ஆஃப் எஸ்டேட்ஸுக்கு 200 மீட்டர் தூரத்துக்கும் குறைவு தான். இங்கு தான் பிரதமர் சன்னா மரின், தன் அரசின் முக்கியான சமத்துவத் திட்டம் (Equality Programme) தொடர்பாக ஒரு கூட்டத்துக்கு தலைமை தாங்க இருக்கிறார்.

சன்னா மரின், சிறிய பேச்சுவார்த்தைகளை நடத்தும் எண்ணத்தில் இல்லை. யார் தான் தேனிலவில் இருந்து வந்த முதல் வாரத்தில் பேசத் தயாராக இருப்பார்கள்?

சன்னா மரின் மற்றும் அவரது கணவர் மார்கஸ் ராய்கோனென், முன்னாள் தொழில்முறை கால்பந்து விளையாட்டு வீரர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, தன் சொந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு முன், தன் மகள் எம்மாவுக்கு தாய்ப்பால் ஊட்டும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

பால்டிக் கடற்கரையில், அமைந்து இருக்கும், கெசராண்டா (Keseranta) அதிகாரபூர்வ பிரதமர் வீட்டின் முன்பு, சன்னா மரினும், அவரது கணவரும் ஒருவர் தோலை ஒருவர் அனைத்து இருப்பது போல் ஒரு புகைப்படத்தை எடுத்து இருந்தார்கள்.

இந்த படத்தை அரசியல் விமர்சகர்கள் மற்றும் பேஷன் உலகின் வலைப்பதிவாளர்கள், பள்ளி மாணவர்கள் பகிர்ந்தார்கள். ஒரு தாக்கத்தை உடனடியாக ஏற்படுத்த, ஒரே வருடத்தில் இரண்டாவது படம் பகிரப்பட்டது.

12-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், பின்லாந்தின் மக்களவை கட்டிடத்தின் முன் காத்துக் கொண்டு இருந்தார்கள். இங்கு தான் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின், கூட்டணி அரசு சந்தித்துப் பேசும்.

நான் என்ன சொல்ல வேண்டும் என எதையும் தயாரிக்கவில்லை என கூறினார். அவர்கள், என்னை என்ன வேண்டுமானாலும் கேட்கலாம், நான் அதற்கு நேர்மையாக விடை கொடுப்பேன் என்று கூறினார் சன்னா மரின்.

ஒருவேளை, அவரின் சொந்த வாழ்கை பற்றி இந்த வாரம் நிறைய கேள்விகள் இருக்கலாம்?

இல்லை, அவர்கள் பிரச்னைகளைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். இங்கு நிறைய பிரச்னைகள் இருக்கின்றன என அழுத்தமாகச் சொன்னார் சன்னா மரின்.

அந்தக் கூட்டத்துக்கு வந்த முதல் அரசியல்வாதி சன்னா மரின் தான். சன்னா மரின் சொன்னது போல, பின்லாந்து ஊடகங்கள், நாட்டுப் பிரச்னைகள் குறித்து தான் கேட்டார்கள்.

நான்கு மணி நேர கூட்டத்துக்குப் பிறகு, மீண்டும் பத்திரிகையாளர்களைச் சந்திக்க, பாராளுமன்றத்தின் வெளியே நிற்கிறார்.

சன்னா தான் கடைசி நபராக கிளம்பும் அரசியல்வாதி.

மிகுதியாக பகிரப்பட்ட சன்னா மரினின் முதல் படம், டிசம்பர் 2019-ல் 200 நாட்களுக்கு முன், அவரின் புதிய வேலையில் முதல் நாள் சேர்ந்த போது எடுக்கப்பட்டது.

பின்லாந்தின் புதிய மற்றும் இளைய பிரதமராக, அப்போதைய 34 வயதான சன்னா மரின் தனது மத்திய இடது கூட்டணி அரசாங்கத்தை வழி நடத்தும் மற்ற அரசியல்வாதிகளுக்கு அடுத்தபடியாக, புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார்.

அவர்கள் அனைவரும் பெண்கள். அந்த புகைப்படத்தை வெளியிட்ட போது, ஐந்து பேரில் ஒருவர் மட்டுமே 34 வயதுக்கு மேற்பட்டவர்.

தன் கேபினெட் உடன் மேடையில் நின்று கொண்டிருந்த போது, தான் இளைய தலைமுறையின் பிரதிநிதியாக இருப்பதாகவும், சர்வதேச ஊடகங்களின் கவனத்தை வரவேற்பதாகவும், அங்கு நின்று கொண்டிருந்த புகைப்படக்காரர்களுக்குச் சொன்னார். பின்லாந்துக்காரர்களான நாம் யார் என்பதை உலகத்துக்குக் காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு என்றார்.

இந்த செய்தி, வழக்கமான அரசியல் வட்டாரங்களைத் தாண்டி பலருக்கும் சென்றடைந்தது.

கிடாரிஸ்ட் டாம் மொரெல்லோ, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அந்த கூட்டணி புகைப்படத்தை பகிர்ந்தார்.

சன்னா மரின்: பெண்கள் நடத்தும் அரசாங்கத்தில் என்ன நடக்கிறது?

சன்னா மரின் தனது அமெரிக்க ராக் இசைக்குழுவின் ரசிகர் என்று சொன்னார். சன்னா மரினும், மில்லினியல்களைப் போல், டாம் மொரெல்லோவின் பதிவைக் லைக் செய்தார்.

பின்லாந்தில் பெண்ணியத்தின் காலம் வருகிறது”

“பின்லாந்தின் பாராளுமன்றம்: பாலின சமத்துவத்தின் முன்னோடி”

“பெண்களின் ஆட்சி: இன்னும் நாம் எதற்கு காத்திருக்கிறோம்”

என தலைப்புகள் பல பத்திரிகைகளில் வெளி வந்தன.

பெண்கள், sauna என்கிற குளியல் டப்களில், ஒன்றாக குளிக்கும் போது முடிவு செய்வார்கள் என, பாலியல் ரீதியான மீம்ஸ்களும் வெளியாயின.

பல வழிகளில் இதுபோன்ற கூட்டணிக்கு முன்பே மேடை அமைக்கப்பட்டிருந்தது. எந்த நாடாவது வொண்டர் வுமன் தீவின் பெண்ணிய கற்பனை நாடாக இருக்கும் என்றால் அது பின்லாந்து தான்.

1906-ம் ஆண்டு, உலகிலேயே பெண்களுக்கு முழு வாக்குரிமையையும், பாராளுமன்ற உரிமைகளையும் வழங்கிய நாடு பின்லாந்து தான். இந்த விஷயத்தை மற்ற மேற்கத்திய நாடுகள் முதலாம் உலகப் போர் வரை செய்யவில்லை.

அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் 19 பெண்கள் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2000-ம் ஆண்டில், பின்லாந்து தன் முதல் பெண் அதிபராக டர்ஜா வணக்கம்னென்னைத் தேர்வு செய்தது. 2003-ம் ஆண்டு அன்னெலி ஜதீன்மகி எனும் முதல் பெண் பிரதமரை தேர்வு செய்தது.

2019-ம் ஆண்டின் கடைசி காலங்களில், மற்றுமொரு பெண் பிரதமருக்குப் பிறகு, மரின் மத்திய இடது சமூக ஜனநாயகக் கட்சியால் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நியமனம், சன்னா மரினை, பின்லாந்தின் இளைய பிரதமராக்கியது.

சன்னா மரின்: பெண்கள் நடத்தும் அரசாங்கத்தில் என்ன நடக்கிறது?

பிபிசி வெளியிட்டு இருக்கும், 2020-ம் ஆண்டில் ஆளுமைமிக்க பெண்கள் பட்டியலில், சன்னா மரினும் ஒருவர்.

11 மார்ச் 2020 அன்று தான், உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸை பெரும்தொற்று நோயாக அறிவித்தது. ஆனால் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) வந்ததில் இருந்தே, மரினின் கேபினெட் தயாராக இருந்தார்கள்.

16 மார்ச் 2020 அன்று, பின்லாந்து வெறுமனே லாக்டவுனில் இல்லை, Emergency Powers Act என்கிற அவசர கால அதிகாரங்கள் சட்டம் அமலில் இருந்தது. இந்த சட்டம் இரண்டாம் உலகப் போரின் போது கடைசியாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த திட்டம் அமலாக்கப்பட்டதை ஊடகங்கள் எதிர்த்தன, ஆனால் மக்கள் ஆதரித்ததாகச் சொல்கிறது வக்கெடுப்புகள்.

பின்லாந்து மக்களுக்கு ஒரு தெளிவான வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டு இருந்தது. வீட்டிலேயே தங்கி இருங்கள். மெலிதாக கொரோனா அறிகுறி இருப்பவர்கள் கூட, தங்களை சோதித்துக் கொள்ள ஊக்கப்படுத்தப்பட்டார்கள்.

சோதனை ஆய்வகங்கள், மருத்துவர்கள் மற்றும் க்ளீனிக்குகள் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பை வழங்கிக் கொள்ள, திட்டமிட, தொடர்ந்து கணினிமய கூட்டங்கள் நடத்தப்பட்டன.

சன்னா மரின் மற்றும் அவரது நான்கு முக்கிய கேபினெட் அமைச்சர்கள், வாராந்திர கொரோனா விவரிப்புகளைக் கொடுத்தார்கள், மக்கள் மற்றும் ஊடகங்களிடம் இருந்து கேள்விகளைப் பெற்றுக் கொண்டார்கள். குழந்தைகளிடம் இருந்து கேள்விகளைப் பெற தனியாக ஒருவரை நியமித்தார்கள்.

பெண் தலைவர்கள், நெருக்கடியான காலங்களை சிறப்பாகக் கையாள்கிறார்களா என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டது. தைவான், ஜெர்மனி, நியூசிலாந்து போன்ற நாட்டுத் தலைவர்களோடு சன்னா மரின் ஒப்பிடப்பட்டு பாராட்டப்பட்டார்.

இது பாலின அடிப்படையிலான பிரச்சனை அல்ல. ஆண்கள் வழிநடத்தும் நாடுகள் கூட சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றன. எதை சிறப்பாகச் செய்து இருக்கின்றன என்பதைத் தான் நாம் கவனித்துக் கற்றுக் கொள்ள வேண்டும் என பிபிசியிடம் சொல்கிறார் சன்னா மரின்.

5.5 மில்லியன் மக்களைக் கொண்ட பின்லாந்தில், 370-க்கு கொஞ்சம் அதிகமான மரணங்கள் மட்டுமே நிகழ்ந்தன. அதாவது 1 மில்லியனுக்கு சுமாராக 60 பேர். ஆனால் பிரிட்டனின் இறப்பு விகிதம், இதைவிட 10 மடங்கு அதிகம்.

நாங்கள் பின்லாந்தில் சில விஷயங்களைக் கற்றுக் கொண்டோம். விஞ்ஞானிகள் சொல்வதைக் காது கொடுத்து கேட்பது மற்றும் அவர்களின் அறிவை முழுமையாகப் பயன்படுத்துவது, நிலையற்ற சூழல் நிலவும் போது, தைரியமாக முடிவுகளை எடுப்பது. இவைகள் எல்லாமே முக்கியம் என நான் கருதுகிறேன் என்கிறார் சன்னா மரின்.

அவசர கால அதிகாரங்கள் சட்டம் எதிர்பார்த்த காலத்துக்கு முன்பே, ஜூன் மாதத்தில் பின்வலிக்கப்பட்டது. ஆனால் கூட்டணி மற்றொரு அதிர்ச்சியைச் சந்தித்தது. சன்னா மரினின் கேபினெட்டிலேயே இளம் வயது கூட்டணி தலைவர்களில் ஒருவரான கத்ரி குல்முனி, ஒரு செலவீன ஊழலில் ராஜிநாமா செய்தார். கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு பதிலாக அனிகா சாரிகோ என்பவர் மாற்றப்பட்டார்.

பொது வெளியில் கூட்டணி ஒற்றுமையாக இருப்பது போலத் தோன்றினாலும், தனிப்பட்ட முறையில் முரண்பாடுகள் இருந்தன.

எந்தவொரு கட்சியும், ஆட்சியை தங்கள் சொந்த வழியில் வைத்திருக்க முடியாது “என்று கல்வி அமைச்சரும் இடது கூட்டணியின் தலைவருமான 33 வயது லி ஆண்டர்சன் கூறுகிறார்.

சில நேரங்களில், இது போன்ற பதற்றமான சூழல்கள் வரும், அதை சரி செய்ய, தனியாக அமர்ந்து சில சமாதானங்களைச் செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் ஒரு பெண் என்பதால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட கொள்கையை உருவாக்குகிறீர்கள், அல்லது நீங்கள் எல்லோரும் பெண்களாக இருப்பதால் ஒப்புக்கொள்வது எளிதானதாக இருக்கிறது என்பது போல, சிலர் சொல்லும் போக்கு இருக்கிறது. அது நிச்சயமாக அப்படி அல்ல என்கிறார் மரின்.

சன்னா மரின், தன் பதின் பருவத்தில், எதிர்காலத்தில், அவரே கெசராண்டாவில், தன் கணவரோடும், தன் இரண்டு வயது மகள் எம்மாவோடும் வாழ்வோம் என கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.

அரசியலும், அரசியல்வாதிகளும் வெகு தொலைவில் இருந்ததாகவே தெரிந்தது. நான் வாழ்ந்த உலகம் முற்றிலும் வேறுபட்டது என்கிறார் மரின்.

பல பின்லாந்து குடும்பங்களைப் போல, என் குடும்பமும் பல சோகக் கதைகளால் நிறைந்தது என, 2016-ம் ஆண்டு, தன் சொந்த வலைப்பக்கங்களில் எழுதி இருந்தார் மரின்.

தன் அம்மா மற்றும் தன் அம்மாவின் தோழியால், பிர்க்கலா என்கிற சிறிய நகரத்தில், வளர்க்கப்பட்டார் சன்னா மரின். எப்போதும் குடும்பத்தில் நிதி நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும்.

மரினின் தாயார், தன் குடிகாரக் கணவை விவாகரத்து செய்த பின், மரின் சலுகைகளில் வாழ்ந்து வந்தார். மிகச் சிறிய வயதில் இருந்தே, தன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள, சன்னா மரின் சில்லறை வேலைகளைச் செய்து வந்தார்

சன்னா மரினின், பிர்க்கலா பள்ளியின் ஆசிரியை பசி கெர்வினன், சன்னா மரின் ஒரு சராசரி மாணவர் தான் என்கிறார். மரினுக்கு 15 வயது இருக்கும் போது, நல்ல மதிப்பென்களை வாங்க கூடுதலாக வீட்டுப் பாடங்களைக் கேட்டார் என்கிறார் ஆசிரியை.

சன்னா மரின்: பெண்கள் நடத்தும் அரசாங்கத்தில் என்ன நடக்கிறது?

சன்னா மரினுக்கு சுமாராக 20 வயதுகளில் தான், அரசியல் குறித்து விழிப்புணர்வு வருகிறது. மரின் அரசியலைப் பற்றிச் சிந்திக்கும் போது, தன்னை மட்டும் மேம்படுத்திக் கொள்ளாமல், தன்னைச் சுற்றி இருப்பவர்களின் சூழலையும் மேம்படுத்த முடியும் என்கிற நம்பிக்கை வருகிறது.

இது தான் சன்னா மரின் அரசின் சமத்துவ திட்டத்தின் (Equality Programme) நோக்கம். பொறுப்புகளை சமமாகப் பகிர்ந்து கொள்ள பெற்றோரை ஊக்குவிக்கும் கொள்கைகள், வீட்டுக்குள் நடக்கும் வன்முறைகளைக் குறைப்பது, பாலின ஊதிய இடைவெளியை சரி செய்வது மற்றும் ஏழை பின்னணியிலிருந்தும் புலம்பெயர்ந்த குடும்பங்களிலிருந்தும் குழந்தைகளுக்கான கல்வியை மேம்படுத்துவது என பலதும் இதில் அடக்கம்.

டிரான்ஸ் சட்டத்தை சீர்திருத்துவதற்கான திட்டங்களும் உள்ளன. எல்லோருக்கும் தங்களின் அடையாளத்தைக் கண்டு பிடிக்கும் உரிமை இருக்கிறது. அதை இந்த திட்டம் ஆதரிக்கிறது என்கிறார் சன்னா மரின்.

சன்னா மரின் திருநங்கைகளை, பெண்களாகக் கருதுகிறாரா?

மக்களை அடையாளம் காண்பது என் வேலை அல்ல என உறுதியாகக் கூறுகிறார். தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது, அனைவரின் பொறுப்பு. நான் சொல்வதற்கு, அது என் இடம் அல்ல என்கிறார் சன்னா மரின்.

பாலின சுய அடையாளம் குறித்து, தன் நிலையை வெளிப்படையாகச் சொன்ன ஒரே அரசியல் தலைவர் சன்னா மரினாகத் தான் இருப்பார்.

டிரான்ஸ் உரிமைகள் பிரச்சாரகர்கள் “பின்தங்கிய” டிரான்ஸ் சட்டத்தின் சீர்திருத்தத்திற்காக பல ஆண்டுகளாக பரப்புரை செய்து வருகின்றனர், மேலும் சிலர் இந்த அரசாங்கம் அதை செய்யுமா என்று சந்தேகிக்கிறார்கள்.

இதற்கு முன், சட்டத்தை மாற்ற முயற்சித்த அனைத்து முந்தைய அரசாங்கங்களும் பழமைவாதிகளின் அழுத்தத்தினால் பின்வாங்க வேண்டியிருந்தது என, காஸ்பர் கிவிஸ்டோ குறிப்பிடுகிறார்.

எங்களிடம் ஒரு நாட்டின் இளைய பெண் தலைவர் இருக்கிறார், ஆனால் அது ஒரு நுழைவுச் சிட்டு போலத் தான்” என்று அவர் கூறுகிறார். இது உண்மையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு அதன் பின் உள்ள அமைப்பின் ஆதரவைப் பெற வேண்டும்

இந்த முறை, கூட்டணியில் இருக்கும் ஐந்து கட்சிகளும், சீர்திருத்தத்துக்கு ஆதரவாக இருக்கின்றன. அடுத்த ஆண்டு இந்த மசோதா நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது.

பின்லாந்தில் எப்போதும் கூட்டணி ஆட்சி தான். எனவே நாங்கள் சில சமாதானங்களைச் செய்ய முயற்சிப்போம். அதன் பின் பல்வேறு கட்சிகள் மற்றும் தத்துவங்களில் அனைத்து தரப்பிலும் ஒருமித்த கருத்துக்களைக் கண்டு பிடிக்க முயற்சிப்போம் என்கிறார் சன்னா மரின். இது தான் பலம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் வேலையை முடிக்க, இது எப்போதும் வேகமான வழி அல்ல.

கடந்த ஏப்ரல் 2020 மாதத்தில், கொரோனா தொற்று நோயை சன்னா மரின் கையாண்ட விதத்தால் அப்ரூவல் மதிப்பீடு எனப்படும் மக்களின் ஆதரவு 85% பெற உதவியது, இருப்பினும் அவர் வாக்கெடுப்புகளைப் பார்க்கவில்லை என்கிறார்.

ஆனால், இங்கு விமர்சனங்களும் இருக்கின்றன. உலகில் கருப்பர்கள் உயிர் முக்கியம் என்கிற போராட்டங்கள் நடந்த போது, சமத்துவத் திட்டம், பல்வேறு வகையான சமமற்றவைகளைக் குறிப்பிடும் போது, இந்த சமத்துவத் திட்டம் நிறத்தால் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை அங்கீகரிக்கவில்லை என, பின்லாந்தில் வாழும் கறுப்பர்கள் சில சமூக வலைதளங்களில் சுட்டிக் காட்டினார்கள்.

ஐரோப்பா கவுன்சிலின் 2019 ஆம் ஆண்டின் அறிக்கையில், ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த 63% மக்கள் பின்லாந்தில் வழக்கமான இனவெறி துன்புறுத்தல்களை அனுபவித்ததாகக் கூறுகிறது. இது ஐரோப்பாவிலேயே மிக அதிகம்.

தற்போது பின்லாந்தின் நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு கருப்பினத்தைச் சேர்ந்த பெண் எம்.பி மட்டுமே இருக்கிறார். அவர் பெயர் பெல்லா ஃபோர்ஸ்கிரென்.

பின்லாந்தின் பொது வாழ்வில் பன்முகத்தன்மையை ஊக்குவிக்க, அரசாங்கம் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று கூறுபவர்களுடன் தான் உடன்படுவதாகக் கூறுகிறார் பின்லாந்தின் கிரீன் லீக்கைச் சேர்ந்த 35 வயது மரியா ஓஹிசலோ.

கடைசியில், ஐந்து படித்த வெள்ளை இன பெண்கள், அனைத்து தரப்பினரையும் பிரதிபலிப்பதாக இல்லை. நாம் உண்மையிலேயே சமத்துவத்தைப் பார்க்கிறோம் என்றால், அது இதுவரை இங்கு தென்படவில்லை என்கிறார் மரியா.

எங்கள் பின்னணிகள், இப்போதும் தொடர்ந்து வாழ்க்கையில் நம்மிடம் உள்ள சாத்தியங்களை பாதிக்கின்றன, அது அப்படி இருக்கக்கூடாது என்கிறார் சன்னா மரின். இதை சரி செய்வது வெறுமனே அவர் வேலை அல்ல, இது அனைத்து பின்லாந்து மக்களின் வேலை என்கிறார் சன்னா. அதோடு, அவரின் சமத்துவத் திட்டம், இன ரீதியில் சிறுபான்மையாக இருப்பவர்களின் நிலையை மேம்படுத்தும் என்கிறார் சன்னா.

இந்த திட்டத்தை எப்படி கொண்டு வருவது, இதை எப்படி நிஜமாக்குவது என்பதில் தான் நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும், அது தான் பிரதமராக என் நோக்கம் என்கிறார் சன்னா மரின்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »