Press "Enter" to skip to content

சீனா – பூட்டான் இடையே புது எல்லை சிக்கல்: சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்துக்கு சீனா ஏன் உரிமை கோருகிறது? இந்தியாவுக்கு என்ன பிரச்சனை?

  • அன்பரசன் எத்திராஜன்
  • பிபிசி நியூஸ்

இந்தியாவுக்கும் சீனாவுக்கு இடையே இருக்கிற, பனிமலைகளால் சூழப்பட்ட நாடு பூட்டான். இந்த இரு பெரிய அண்டை நாடுகளும் பலப்பரீட்சையில் ஈடுபட்டிருப்பதால் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது இந்தச் சிறிய நாடு.

இந்தியாவின் நட்பு நாடாக இருக்கிற பூட்டானின் கிழக்குப் பகுதியில் ஒரு வனவிலங்கு சரணாலயம் உள்ளது. சரணாலயம் அமைந்திருக்கிற இடம் பிரச்சனைகளுக்கு உட்படாத நிலப்பகுதியாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தக் கோடையில் சீனா திடீரென்று அந்த சரணாலயத்தின்மீது உரிமை கொண்டாடத் தொடங்கியிருக்கிறது என்பதால் பூட்டான் அதிர்ச்சியடைந்திருக்கிறது.

பூட்டானைச் சேர்ந்த பல விமர்சகர்கள் இதைப் பற்றி விரிவாகப் பேச விரும்புவதில்லை என்றாலும், இந்தியாவுடனான எல்லைப் பிரதேசப் பிரச்சனையில், பெய்ஜிங் பூட்டானைத் தன் கட்டுப்பாட்டுக்குள் இழுத்துக்கொள்ள நினைக்கிறது என்று பலரும் நம்புகிறார்கள். புத்தமதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கிற, ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள்தொகையைக் கொண்ட நாடு பூட்டான்.

ஏப்ரல் மாதத்திலிருந்தே உலகின் மிக அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளான இந்தியாவும் சீனாவும் பல்லாயிரக்கணக்கான படைவீரர்களைத் தங்களது மேற்கு எல்லைப்பகுதியில் குவித்துக்கொண்டேயிருக்கின்றன. இரண்டு நாடுகளுமே அத்துமீறிப் பிரவேசம் செய்வதாக ஒன்றை ஒன்று குற்றம் சாட்டுகின்றன.

சீனாவின் நிலப்பகுதியை சுற்றி 14 நாடுகளின் எல்லைகள் உண்டு. இதில் பெரும்பாலான நாடுகளோடு எல்லைப் பிரச்சனைகளை சுமுகமாக முடித்துவிட்டதாக சொல்கிறது சீனா. இதில் இந்தியாவும் பூட்டானும் விதிவிலக்கு, பல வருடங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் இந்த எல்லைப் பிரச்சனைகள் தீரவில்லை.

சாக்டெங் வனவிலங்கு சரணாலயம்

1950களில் பெய்ஜிங் திபெத்தின் மீது படையெடுத்து அந்த நாட்டைக் கைப்பற்றியது. இப்போது பூட்டான் மற்றும் இந்தியாவுடன் பிரச்சனைக்குரிய பகுதிகளாகத் தான் கருதும் நிலப்பகுதிகள் எல்லாமே திபெத்தைச் சேர்ந்தவை என்பதாகவே சீனா பார்க்கிறது.

“பூட்டானை எரிச்சலூட்டுவதற்கு சீனா முயற்சிக்கிறது”

ஜுன் மாதம் நடந்த ஒரு இணையவழி உரையாடலில்தான் சீனா இந்தப் பேச்சை முதலில் தொடங்கியிருக்கிறது. கிழக்கு பூட்டானில் கிட்டத்தட்ட 740 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் ஒரு காட்டுப்பகுதி சாக்டெங் வனவிலங்கு சரணாலயம். அது தனக்கு சேரவேண்டும் என்று சீனா சொல்லியிருந்தது.

இயற்கையைப் பாதுகாப்பதற்கான நிதியுதவிகளைத் தொடர்ந்து செய்துவரும் அமெரிக்க இயக்கமான உலகளாவிய சுற்றுச்சூழல் நிறுவனத்திடம் இந்த சரணாலயத்துக்கான நலத்திட்டங்களுக்கான நிதியுதவியை பூட்டான் அரசு கோரியிருந்தது. அந்த நிலப்பரப்பின் உரிமை பிரச்சனைக்குரியது என்று சொல்லி, நிதியுதவி தரக்கூடாது என்று சீனப் பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

தலைநகர் திம்புவில் நடக்கும் மக்கள் - கோப்புப் படம்.

இதை மறுத்த பூட்டான், இதுவரை நடந்த 24 பேச்சுவார்த்தை சுற்றுகளிலும் இந்த இடத்தின் பெயர் ஒரு முறை கூட சொல்லப்படவில்லை என்று குறிப்பிட்டது. இருபத்தி ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை கோவிட்-19 பிரச்சனை காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

ஜூலையில் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் சந்தேகங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார். “சீனாவுக்கும் பூட்டானுக்கும் இன்னும் எல்லைப் பேச்சுவார்த்தைகள் முடியவில்லை. மத்திய, கிழக்கு, மற்றும் மேற்கு எல்லைகள் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை” என்றார். இதில் “கிழக்கு” என்று அவர் குறிப்பிட்டது சாக்டெங் நிலப்பரப்பை.

பூட்டானைச் சேர்ந்த வரலாற்றாளர் கர்மா ஃபுன்ட்ஸோ பேசும்போது, “சாக்டெங் நிலப்பகுதி எப்போதுமே பிரச்சனைக்குள்ளானதாக இருக்கவில்லை. அது பூட்டானின் கட்டுப்பாடிலேயே தான் எப்போதும் இருந்திருக்கிறது. அந்தப் பகுதி சீனாவைச் சேர்ந்தது, சீனாவுக்கும் அதற்கு தொடர்பு உண்டு என்பதுபோன்ற விஷயங்களுக்கு எந்த ஆதாரமும் கிடையாது” என்கிறார்.

மேலும் பேசிய அவர், “உலகளாவிய சுற்றுச்சூழல் நிறுவனத்தில் சீன பிரதிநிதி பேசியிருப்பது பூட்டானை எரிச்சலபடுத்துவதற்கான முயற்சி. மற்ற இடங்களில் உள்ள எல்லைப் பிரச்சனைகள் இன்னும் தீராமல் இருப்பதால் அப்படி செய்திருக்கிறார்” என்றார்.

இந்தியாவின்மீது அழுத்தம் கொடுப்பதற்கான வழி

திம்புவுக்கும் பெய்ஜிங்குக்கும் நடுவே 1984 தொடங்கி எல்லைப் பேச்சுக்கள் நடந்துவருகின்றன. இவை பூட்டானின் வடக்குப்பகுதியில் உள்ள 500 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும் மேற்கில் உள்ள 269 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும் பற்றியவை.

“சீனாவின் எல்லா அதிகாரபூர்வமான வரைபடங்களிலும் சாக்டேங் பூட்டானின் ஒரு பகுதியாகத்தான் குறிக்கப்பட்டுள்ளது. 2014ல் மிகுந்த விருப்பார்வம் மிக்க ஒரு பெரிய வரைபடத்தை சீனா வெளியிட்டது. அதில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் கூட சீனாவின் ஒரு பகுதியாகக் குறிக்கப்பட்டிருந்தது. அதில்கூட சாக்டெங் பூட்டானின் அங்கமாகத்தான் இருந்தது” என்கிறார் த பூட்டானீஸ் வார செய்தித்தாளின் ஆசிரியர் டென்சிங் லாம்சாங்.

சாக்டெங் வனவிலங்கு சரணாலயம்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நசுக்கப்படுவது பூட்டானுக்கு இது முதல்முறை அல்ல. இந்தியாவின் டோக்லாம் பீடபூமி, சீனாவின் டாங்லாங் பகுதிகளை முன்வைத்து மூன்று வருடங்களுக்கு முன்னால் சில சர்ச்சைகள் எழுந்தன. அப்போதிலிருந்தே எல்லைப் பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன.

2017 ஜூன் மாதம் இந்தியப் படைகள் சீனப்படைகளை சந்தித்தன. இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய மூன்று நாடுகளுக்கு நடுவே இருந்த பகுதியில் சரியாகப் போடப்படாத ஒரு சாலையை சீனப்படைகள் விரிவாக்கத் தொடங்கியிருந்தன. அது பூட்டானுக்கு சொந்தமான நிலப்பகுதி என்றாலும் தனது சிறிய நட்பு நாடான பூட்டானுக்காக இந்தியா சீனப் படைகளை எதிர்த்தது.

இந்தப் பீடபூமி தில்லிக்கு மிகவும் அவசியமானது. இது சிலிகுரி வழித்தடத்தை நோக்கியிருக்கிறது. இந்தியாவை அதன் வடகிழக்கு மாநிலங்களோடு இணைக்கும் இந்தக் குறுகலான பாதை, “கோழிக் கழுத்து” என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஏதாவது மோதல்கள் வருமானால், சீனா இந்த வழித்தடத்தை ஆக்கிரமித்துவிடும் என்று இந்தியா அஞ்சுகிறது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளும் மோதலைக் கைவிட்டன என்றாலும், எல்லைப் பிரச்சனைகள் பெரிதானால் என்னவாகும் என்பதற்கு அது ஒரு உதாரணம். டோக்ளம் பீடபூமியிலிருந்து வெகு அருகிலேயே ஹெலிபோர்ட் உள்ளிட்ட பல ராணுவ மையங்களின் ஒரு வலைப் பின்னலையே சீனா உருவாக்கிவைத்திருக்கிறது என்பது பின்னாட்களில், செயற்கைக்கோள் படங்களின்மூலமாகத் தெரிய வந்தது.

ஆகவே, இப்போது சாக்டெங் நிலப்பகுதியைப் பற்றி சீனா எழுப்பியிருக்கும் பிரச்சனையை விரிவான கோணத்தில் பார்த்தால், அது ஆசியாவின் இரு பெருந்தலைகளுக்கு இடையேயான மோதலின் ஒரு பகுதி என்பது புரியும்.

“இது பூட்டான்மீது மட்டுமல்ல, இந்தியா மீது அழுத்தத்தை அதிகரிக்க சீனா கையிலெடுத்திருக்கும் பிரச்சனை. சாக்டெங் சரணாலயத்தின் ஒரு எல்லைப்பகுதி அருணாசலப் பிரதேசத்தின் எல்லையோடு பிணைந்தது. ஏற்கனவே அருணாச்சலப் பிரதேசத்தைத் தன்னுடையது என்று சீனா சொல்லிவருகிறது. சாக்டெங் என்பதே அருணாச்சலப் பிரதேசத்தின் நீட்சி என்றுதான் பெய்ஜிங் பார்க்கிறது” என்கிறார் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேசத் துறைப் பேராசிரியர் சங்கீதா தப்ளியால்.

ஆனால், பெய்ஜிங் சிங்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சாலை ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளரான முனைவர் யூ லாங் வேறு ஒரு கோணத்தை முன்வைக்கிறார்.

பூட்டான் வரைபடம்.

“எல்லைப்பகுதி பிரச்சனையில் பூட்டானை சீனா மிரட்டுகிறது என்று சொல்லமுடியாது. இதில் பிரச்சனை என்னவென்றால், பூட்டான் – சீனா எல்லைப் பிரச்சனை என்பது இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனையோடு பின்னிப் பிணைந்திருக்கிறது, அதுதான் பெரிய சவால்” என்கிறார் அவர்.

மேலும் அவர் தொடர்ந்து பேசும்போது, “பெய்ஜிங்கைப் பொறுத்தவரை, இந்தியா-சீனாவின் கிழக்கு எல்லைப் பிரச்சனை என்பதுதான், பூட்டான் – சீனா எல்லைப்பிரச்சனையின் ஆரம்பப்புள்ளி” என்கிறார்.

பிபிசி தொடர்பு கொண்டு கேட்டபோது பூட்டானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்துக்கூற மறுத்துவிட்டது.

“புவியியல் நிதர்சனத்தை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்”

ஆனால் பூட்டான் கையில் இருக்கும் வாய்ப்புகள் குறைவானவை. பல தசாப்தங்களாகவே இந்தியாவும் சீனாவும் இழுபறியில் இருக்கின்றன என்றாலும் இப்போது அது உச்சநிலையில் மோசமாக இருக்கிறது. அந்த நிலையை மாற்றுவதும் கடினம்.

ஜூன் மாதத்தின் மத்தியில், லடாக்கில் நடந்த ஒரு சண்டையில் இருபது இந்திய வீரர்களும் உறுதிசெய்யப்படாத எண்ணிக்கையில் சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். இந்த எல்லைப்பிரச்சனையில் கடந்த 45 ஆண்டுகளில் நடந்த முதல் பெரிய மோதல் இது.

பல சுற்றுகள் பேச்சுவார்த்தைக்குப் பின்னரும், ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து பெய்ஜிங் விலகவில்லை என்கிறார்கள் இந்திய வல்லுநர்கள்.

பூட்டானுக்கு அழுத்தம் கொடுப்பதன் வழியாக, இந்தியாவைப் போருக்கு இழுக்கிறது சீனா. தனது சிறு நட்பு நாட்டுக்காக தில்லி களத்தில் இறங்குமா என்பதை பெய்ஜிங் பரிசோதிக்கிறது. வளர்ந்துக்கொண்டே இருக்கக்கூடிய சீனாவின் ராணுவ, பொருளாதார வலிமையை தில்லி எப்படி எதிர்கொள்ளும் என்று இந்தியாவின் அண்டை நாடுகள் கவனித்துக்கொண்டிருக்கின்றன. இந்தியா தோற்க விரும்பவில்லை.

லே அருகே சர்ச்சைக்குரிய லடாக்கின் முன் களப்பகுதியில் ரோந்து செல்லும் இந்தியப் படையினர்.

“சீனா ஒரு நிதர்சனம் என்பது எல்லா நாடுகளுக்கும் தெரியும். அது புவியியல் நிதர்சனம் என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்தியாவின் வழியாகத்தான் நாங்கள் உலகையே அணுகுகிறோம். ஒருவேளை இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு பூட்டான் சீனாவுடன் சென்றால் அது தற்கொலைக்கு சமம்” என்றார் பெயர் வெளியிட விரும்பாத பூட்டான் வல்லுநர் ஒருவர். “இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் சீனாவை எதிர்கொள்வது சிறந்த வழியாக இருக்கும்” என்கிறார் அவர்.

“இந்தியாவும் சீனாவும் தங்களது வலிமையை நிலைகுலைவுக்கே பயன்படுத்துகின்றன, அமைதிக்காகப் பயன்படுத்துவதில்லை, இது துரதிருஷ்டவசமானது” என்கிறார் வரலாற்றியலாளர் முனைவர் ஃபுன்ட்ஸோ. மேலும் பேசுகையில், “நிலப்பரப்புகளை விரிவுபடுத்துவதாக ஏகாதிபத்தியப் பார்வைகளுடனே இந்தியாவும் சீனாவும் கடந்தகாலத்தில் செயல்பட்டன. இப்போதும் அவை மற்றநாடுகளைக் கட்டுப்படுத்தவே நினைக்கின்றன” என்கிறார்.

பூட்டான் போன்ற சிறு நாடுகளுக்கு விளிம்பில் நிற்பதைத் தவிர வேறு வழியில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »