Press "Enter" to skip to content

ஹஃபீஸ் சயீத் மும்பை தாக்குதல் வழக்கில் சேர்க்கப்பட்டு இருக்கிறாரா?

  • இபாதுல் ஹக்
  • பிபிசி செய்தியாளர், லாஹூர்

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவரான ஹஃபீஸ் மொஹம்மது சயீத் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு நகரங்களில் ஹஃபீஸ் சயீத் மீது சுமார் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால் அவர் இதுவரை மூன்று வழக்குகளில் மட்டுமே தண்டனை பெற்றுள்ளார்.

தடுப்புக்காவல்கள்/கைது/ தண்டனைகள்

160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட 2008ஆம் ஆண்டின் மும்பை தாக்குதலின் சூத்திரதாரி ஹஃபீஸ் சயீத்தை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்பது அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நீண்டகால கோரிக்கையாகும்.

சயீத், கடந்த 20 ஆண்டுகளில் பலமுறை காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார், ஆனால் ஒருபோதும் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதில்லை. இறுதியில் எப்போதும் விடுவிக்கப்பட்டார்.

அமெரிக்காவில் 9/11 தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் சயீதை பல முறை கைது செய்து இருக்கிறார்கள். அவர் வீட்டுக் காவலில் பல முறை வைக்கப்பட்டு இருக்கிறார்.

2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்திய பாராளுமன்ற தாக்குதலின் சூத்திரதாரியாக இருந்ததாக, இந்தியா குற்றம்சாட்டியது. கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் சயீத். அதன் பின் மும்பை 2006 தொடர் வண்டிகுண்டு வெடிப்புகள் தொடர்பான விவகாரத்திலும் அவரது பெயர் விசாரணையில் அடிபட்டதால் இந்தியாவின் அழுத்தம் காரணமாக அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

லஷ்கர்-இ-தொய்பா தான் 2008 மும்பை தாக்குதலை நடத்தியது என்கிற குற்றச்சாட்டுக்குப் பின், 2008 மற்றும் 2009 காலகட்டத்தில் பல முறை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்தார் ஹஃபீஸ் சயீத்.

இத்தனை முறை வீட்டுக் காவலில் வைத்தும், ஒரு முறை கூட பாகிஸ்தான் அரசு, அவருக்கு எதிராக வழக்குகளைத் தொடுக்கவில்லை. அதற்கு பதிலாக நீதிமன்றத்திடம் வீட்டுக் காவலை நீட்டிக்கக் கோரியது. ஆனால், நாளடைவில் நீதிமன்றம் ஹஃபீஸ் சயீதை விடுவித்தது.

கடந்த ஜூலை 2019-ல், ஹஃபீஸ் சயீத் குஜ்ரன்வாலா நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில், தீவிரவாத தடுப்புத் துறை காவலர்களால் லாகூரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கமோகே சுங்கச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்த ஆண்டு பிப்ரவரியில், Financial Action Task Force (FATF) என்கிற அமைப்பின் முக்கிய கூட்டத்திற்கு முன், ஜமாத்-உத்-தவாவின் தலைவர் ஹஃபீஸ் சயீத்துக்கு, லாகூரில் இருக்கும் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம், இரண்டு 5.5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், சயீத் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவால் தேடப்படும் நபராக இருந்தார் ஹஃபீஸ் சயீத். இவரை உலக தீவிரவாதி என்று பட்டியலிட்டது ஐநா. அமெரிக்கா இவருக்கு 10 மில்லியன் டாலர் பரிசு அறிவித்து இருந்தது.

10 ஆண்டு கால தேடுதலுக்குப் பின், மும்பை தீவிரவாத தாக்குதலின் சூத்திரதாரி என்று அழைக்கப்படுபவர், பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரைக் கண்டுபிடிக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டது என ட்விட் செய்து இருந்தார் டிரம்ப்.

மும்பை

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு கட்டுப்பாடுகள்

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, பிப்ரவரி 2019-ல், பாகிஸ்தானில் இருக்கும் பல தீவிர அமைப்புகள் (ஹஃபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தவா மற்றும் அதன் நன்கொடை பிரிவான ஃபலா இ இன்சானியத் அமைப்பு (Falah-e-Insaniyat Foundation) உட்பட) பாகிஸ்தான் அதிகாரிகளால் தடை செய்யப்பட்டது.

ஜேயூடி (ஜமாத் உத் தவா)-ன் முக்கிய தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்கள். பல வழக்குகள் ஹஃபீஸ் சயீத் மீது, பஞ்சாபின் பல நகரங்களில், தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுக்களுக்கு நிதி திரட்டியது மற்றும் பல தீவிரவாத குழுக்களில் உறுப்பினராக இருந்ததற்காக வழக்கு தொடுக்கப்பட்டது.

கடந்த ஜூலை 2019-ல் ஹஃபீஸ் சயீத் கைது செய்யப்பட்டார், உடனடியாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, டிசம்பர் 2019-லேயே குற்றம்சாட்டப்பட்டு, அடுத்த இரண்டு மாதங்களில் தண்டனையும் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் நிதிப் பரிமாற்றங்களில் ஈடுபட்டது மற்றும் ஜேயூடி போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சொத்துக்களை வைத்திருந்தது என பல வழக்குகள் இவர் மீது தொடுக்கப்பட்டது.

ஹஃபீஸ் சயீதின் கைது அமெரிக்காவால் பாராட்டப்பட்டது. எல்இடி செய்த குற்றங்களுக்கு அவர்களை பொறுப்பேற்க வைப்பப்பதற்கும், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்வதை தடுப்பது குறித்து சர்வதேச அளவில் பாகிஸ்தான் செய்து கொடுத்த சத்தியங்களைக் காப்பாற்றவும், ஹஃபீஸ் சயீத் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு தண்டனை வழங்கியது, ஒரு முக்கியமான முன்னேற்றம் என அமெரிக்க உள் துறை அமைச்சகம் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தது.

ஹஃபீஸுக்கு எதிரான வழக்குகள்

பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் நீதிமன்றங்களில், ஹஃபீஸ் சயீதுக்கு எதிராக 7 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இரண்டு வழக்குகள் லாகூரிலும், இரண்டு வழக்குகள் குஜ்ரன்வாலாவிலும், இரண்டு வழக்குகள் சாஹிவாலிலும், ஒருவழக்கு முல்தானிலும் பதிவாகி இருக்கின்றன.

இதுவரை ஹஃபீஸ் சயீத்துக்கு, 3 வெவ்வேறு வழக்குகளின் கீழ், 21 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹபீஸ் சயீத்

இந்த ஆண்டு பிப்ரவரியில், ஹஃபீஸ் சயீத்துக்கு, குஜ்ரன்வாலா மற்றும் லாகூரில் பாதிவான இரண்டு வழக்குகளின் கீழ், சிறப்பு தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தால் மொத்தம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு, அதே தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தால், மூன்றாவது வழக்குக்கு, 10.5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இன்னும் நான்கு வழக்குகள் ஹஃபீஸ் சயீத்துக்கு தீர்ப்பு வழங்கப்படாமல் இருக்கின்றன.

இருப்பினும், பாகிஸ்தானால் விசாரிக்கப்படும் மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் ஹஃபீஸ் சயீத் குறிப்பிடப்படவில்லை. இந்தியா தரப்பில் இருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால், மும்பை தாக்குதல் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறது பாகிஸ்தான் தரப்பு.

மும்பை தாக்குதல் வழக்கில், பாகிஸ்தான் தரப்பில் இருந்து விசாரிக்க வேண்டிய சாட்சியங்களை எல்லாம் விசாரித்து முடித்துவிட்டோம். இந்திய தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய, பாகிஸ்தான் தரப்பு பல முறை இந்தியாவைத் தொடர்பு கொண்டது, ஆனால் இந்தியா, பாகிஸ்தானின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

ஏன் ஹஃபீஸ் சயீத் இப்போது தண்டிக்கப்படுகிறார்?

Financial Action Task Force (FATF) என்கிற அமைப்பு கொடுக்கும் அழுத்தத்தால் தான், பாகிஸ்தான் வேறு வழி இல்லாமல், ஹஃபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுப்பதாக, ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

கடந்த ஜூன் 2018-ல், Financial Action Task Force (FATF) அமைப்பு, பாகிஸ்தானை, க்ரே பட்டியலில் சேர்த்தது. பணச் சலவை மற்றும் தீவிரவாதத்துக்கு பண உதவி செய்வது போன்ற விதிகளைக் கடைப்பிடிக்காத நாடுகள் இந்த க்ரே பட்டியலில் சேர்க்கப்படும்.

அதற்கு அடுத்தடுத்த மாதங்களில், சர்வதேச தரப்பில் இருந்து தடைகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக, பாகிஸ்தான், தீவிரவாதிகள் என சந்தேதிக்கும் பலரை கைது செய்தது, அதே போல தடை செய்யப்பட்ட பல அமைப்புகளுடன் தொடர்புடைய நூறுக்கும் மேற்பட்ட சொத்துக்களை கைப்பற்றியது. ஹஃபீஸ் சயீத் மீதான வழக்குகள், கைது மற்றும் தண்டனைகள் எல்லாமே இதன் ஒரு பாகம் தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

பாகிஸ்தான் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. பாகிஸ்தான், க்ரே நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட, நல்ல முன்னேற்றம் காட்ட, பிப்ரவரி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »