Press "Enter" to skip to content

‘பழிவாங்கும்’ போலி சர்ச்சை படம் – சீனா மன்னிப்பு தெரிவிக்க வலியுறுத்தும் ஆஸ்திரேலிய பிரதமர்

ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு குழந்தையை ஆஸ்திரேலிய ராணுவ வீரர் கொலை செய்வது போல சித்தரிக்கும் போலி படத்தை சீன அரசு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதற்காக மன்னிப்புக்கோர வேண்டுமென்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.

“முரண்பட்ட” இந்த படத்தை வெளியிட்டதற்காக சீனா “வெட்கப்பட வேண்டும்” என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.

சமீபகாலமாக ஆஸ்திரேலியா – சீனா இடையேயான உறவில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

சில ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் மீதான போர்க்குற்ற குற்றச்சாட்டுடன் தற்போது வெளியிடப்பட்டுள்ள படம் தொடர்புப்படுத்தப்படுகிறது.

எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள படமொன்று சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

2009 மற்றும் 2013 ஆண்டுகளுக்கு இடையில் 39 ஆப்கானிய பொதுமக்கள் மற்றும் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 25 ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தொடர்புள்ளதாக “நம்பகமான தகவல்கள்” கிடைத்துள்ளதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய பாதுகாப்புப்படை அறிக்கையொன்றை வெளியிட்டது. இந்த விசாரணை பரவலான கண்டனத்துக்கு வித்திட்டத்தை அடுத்து, இந்த விவகாரம் குறித்த விசாரணையை ஆஸ்திரேலிய காவல்துறை கையிலெடுத்துள்ளது.

இன்று காலை (திங்கட்கிழமை) சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லிஜியன் ட்செள, ஒரு புனையப்பட்ட படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். அதில் ஆஸ்திரேலிய ராணுவ வீரரொருவர் குழந்தையொன்றின் கழுத்தில் இரத்தக்களரியுடன் கத்தியை வைத்திருப்பதை போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தை தனது கைகளால் ஆட்டுக்குட்டி ஒன்றை இறுக்கப்பிடித்திருப்பதையும் அந்த படத்தில் காண முடியும்.

ட்விட்டர்

ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் சிலர் 14 வயதான இரண்டு ஆப்கானிஸ்தான் சிறுவர்களை கத்தியை கொண்டு கொன்றதாக வெளியான குற்றச்சாட்டை குறிக்கும் வகையில் இந்த புகைப்படத்தை சீனா வெளியிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை உறுதிசெய்யும் வகையிலான ஆதாரம் ஆஸ்திரேலிய பாதுகாப்புப்படையின் அறிக்கையில் கொடுக்கப்படவில்லை என்று அந்த நாட்டு செய்தி தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.

இருப்பினும், சட்டவிரோத கொலைகளை உறுதிசெய்யும் “நம்பகமான சான்றுகள்” உள்ளதையும், ஆஸ்திரேலிய ராணுவத்துக்குள் ஒரு “போர் வீரர் கலாசாரம்” இருப்பதாகவும் அது கண்டறிந்தது. மேலும், இளநிலை வீரர்கள் முதலாவது கொலையாக கைதிகளை சுடுவதற்கு ஊக்குவிக்கப்பட்டனர் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் அதில் சுமத்தப்பட்டன.

இந்த நிலையில், ட்விட்டரில் சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்ட சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர், “ஆஸ்திரேலிய வீரர்களால் ஆப்கானிய பொதுமக்கள் மற்றும் கைதிகள் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற செயல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதில் சம்பந்தப்பட்டவர்களை பொறுப்பேற்க நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை “போலியானதாக” குறிப்பிடும் ஆஸ்திரேலிய அரசு, அதை ட்விட்டரிலிருந்து நீக்க அந்த நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த இடுகை “உண்மையிலேயே பழிவாங்கும் எண்ணத்துடன், முற்றிலும் மூர்க்கத்தனமானதாக” உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கருத்து தெரிவித்துள்ளார்.

“சீன அரசாங்கம் இந்த இடுகையை பதிவிட்டதற்கு வெட்கப்பட வேண்டும். இது உலகின் பார்வையில் அவர்களை தாழ்த்துகிறது. இந்த ஒரு தவறான படம், எங்கள் பாதுகாப்புப் படைகள் மீது மோசமான கறையை படிய செய்கிறது.”

ஒரு “ஜனநாயக, தாராளவாத” நாட்டிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்டபடி, தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போர்க்குற்றங்களை விசாரிக்க ஆஸ்திரேலியா ஒரு வெளிப்படையான செயல்முறையை நிறுவியுள்ளது என்று ஸ்காட் மோரிசன் மேலும் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா

அதிகரிக்கும் மோதல் போக்கு

இரு நாடுகளுக்கும் இடையில் “சந்தேகத்திற்கு இடமின்றி” பதற்றம் நிலவுவதை ஆஸ்திரேலிய பிரதமர் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியா மீதான சீனாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் கவனித்து வருவதாக அவர் பெய்ஜிங்கை எச்சரித்துள்ளார்.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்று உருவானது குறித்து விசாரணை நடத்த ஆஸ்திரேலியா அழைப்பு விடுத்ததும், ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனாவின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகளும் இந்த ஆண்டு இருதரப்பு உறவுகளை விரைவாக மோசமடைய செய்துள்ளதாக கருதப்படுகிறது.

சமீபத்திய மாதங்களில், மதுபானம், பார்லி மற்றும் மாட்டிறைச்சி உள்ளிட்ட சுமார் பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய இறக்குமதிகள் மீது சீனா தொடர்ச்சியான பொருளாதார கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

மற்றொருபுறம், சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவேயை தனது நாட்டின் 5ஜி தொலைத்தொடர்பு துறையில் கால்பதிப்பதை தடைசெய்தல் மற்றும் “சீனாவின் ஜின்ஜியாங், ஹாங்காங் மற்றும் தைவான் விவகாரங்களில் இடைவிடாத தலையீடு” உள்ளிட்ட எதிர் நடவடிக்கைகளை ஆஸ்திரேலியா எடுத்து வருகிறது.

ஆஸ்திரேலியா தனது கொள்கை நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.

இந்த நிலையில், சீன மூத்த அமைச்சர்களுடன் சந்திப்பு நடத்துவதற்கான ஆஸ்திரேலியாவின் கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதை திங்களன்று மோரிசன் உறுதிப்படுத்தினார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »