Press "Enter" to skip to content

27 வருட கரு முட்டையிலிருந்து பிறந்த குழந்தை – நம்ப முடியாத உண்மை கதை

27 வருடங்கள் சேகரிக்கப்பட்ட ஒரு கரு முட்டையின் மூலம் மோலி கிப்சன் இந்த வருடம் அக்டோபர் மாதம் பிறந்தார். அவர் உருவான கரு முட்டை, அக்டோபர் 1992ஆம் ஆண்டு சேமிக்கப்பட்டது.

இதன் மூலம் அதிக நாட்கள் சேகரித்து வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் பிறந்த குழந்தை என்ற சாதனையை மோலி பெற்றுள்ளார். நாங்கள் அதீத சந்தோஷத்தில் இருக்கிறோம் என மோலி உருவான கருமுட்டையை தத்தெடுத்த கிப்ஸ்சன் தெரிவிக்கிறார்.

கிப்ஸ்சன் தம்பதியினர் மற்றும் அவரின் குடும்பத்தினர் குழந்தையில்லாமல் கிட்டதட்ட ஐந்து வருடங்கள் பெரும் துயரத்தை சந்தித்தனர். அதன்பிறகுதான் கருமுட்டையை தத்தெடுத்தல் குறித்த செய்தி அவர்கள் கண்முன் வந்துள்ளது.

கிப்ஸசன் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர், அவரின் கணவர் 36 வயது சைபர் பாதுகாப்பு நிபுணர். இவர்கள் அமெரிக்காவின் டெனீஸ் மாகணத்தில் உள்ள நேஷனல் எம்பிரியோ டொனேஷன் சென்டர் என்ற ஒரு கிறித்துவ தொண்டு நிறுவனம் மூலம் சேமித்து வைக்கப்பட்ட கருமுட்டையை பெற்றுள்ளனர். இந்த தொண்டு நிறுவனத்தில் ஐவிஎஃப் நோயாளிகள் கருமுட்டையை பயன்படுத்துவதற்கு பதிலாக தானமாக கொடுப்பர்.

அதன்பிறகு கிப்ஸ்சனின் குடும்பத்தை போன்ற தேவைப்படும் குடும்பத்தினர் பயன்படுத்தப்படாத கருமுட்டை ஒன்றை பெற்று அதன்மூலம் குழந்தை பெற்று கொள்ளலாம். தேசிய எம்பிரியோ டொனேஷன் சென்டரின் தகவல்படி அமெரிக்காவில் சுமார் பத்து லட்சம் கருமுட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

எம்மா மற்றும் கிப்ஸ்சன்

இது குறித்து நாங்கள் பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறோம் என்கிறார் தேசிய எம்பிரியோ டோனேஷேன் சென் டரின் உருவாக்க இயக்குநர் மார்க். மேலும் தம்பதிகள் தங்கள் குடும்பத்தை பெருக்க இந்த பணி உதவுகிறது என்கிறார் அவர்.

கிப்ஸ்சன் தனது முதல் குழந்தையையும் இவ்வாறு சேகரிக்கப்பட்ட கருமுட்டையின் மூலமாகவே பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு அவர் எம்மாவை பெற்றெடுத்தார்.

”குழந்தை இல்லை என இரவு பகலாக கடவுளிடம் பிரார்த்தித்து தூங்காமல் கழிந்த பொழுதுகள் தற்போது குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலில் கழிவது ஒரு அற்புதமான உணர்வை எனக்கு தருகிறது,” என்கிறார் கிப்ஸ்சன்.

இந்த என்இடிசி எனப்படும் தேசிய எம்பிரியோ டொனேஷேன் சென் டர் 17 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. மேலும் இதுவரை 1000க்கும் மேற்பட்ட கருமுட்டை தத்தெடுத்தலுக்கு இது வழிவகை செய்துள்ளது. மேலும் ஒரு குழந்தையை தத்தெடுக்கும் முறைபோல தம்பதியினர் கருமுட்டையை தத்தெடுப்பது சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு தெரிய வேண்டுமா என்றும் முடிவு செய்து கொள்ளலாம்.

தத்தெடுக்கும் குடும்பத்தினருடன் ஒத்துப் போகும் 200-300 குடும்ப விவரங்களை அவர்கள் பார்க்கலாம்.

”இந்த குழந்தை பார்க்க எப்படி உள்ளது என்றோ, எங்கிருந்து வருகிறது என்றோ என்பது குறித்தெல்லாம் எங்களுக்கு கவலையில்லை,” என்கிறார் கிப்ஸ்சன்.

கிப்ஸ்சனின் மூத்த குழந்தை எம்மாவும், இளைய குழந்தை மோலியும் மரபியல் ரீதியாக சகோரிகள் ஆவர். இருவருக்குமான கருமுட்டையும் ஒன்றாக 1992ஆம் ஆண்டு சேகரித்து வைக்கப்பட்டது. மோலி பிறப்பதற்கு முன்பு வரை நீண்டகாலம் சேகரித்து வைக்கப்பட்ட கருமுட்டையின் மூலம் பிறந்த குழந்தையாக எம்மா இருந்தார். இவருக்கான கருமுட்டை 24 ஆண்டுகளாக சேகரித்து வைக்கப்பட்டிருந்தது.

மோலியை பார்க்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடையும் எம்மா, அவளை தனது தங்கை என அனைவரிடமும் அறிமுகப்படுத்தி வைப்பதாக கூறுகிறார் கிப்ஸ்சன். மேலும் தனது இருக்குழந்தைகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை பார்க்கும்போதெல்லாம் தான் மகிழ்ச்சியடைவதாக தெரிவிக்கிறார் கிப்ஸ்சன்.

”இருவரும் கோபமடையும்போது வரும் சிறிய சுருக்கம்கூட இருவருக்கும் ஒரேமாதிரியாக இருக்கிறது,” எனக்கூறி மகிழ்கிறார் கிப்ஸ்சன்.

சேகரித்து வைக்கப்படும் கருமுட்டைக்கு எண்ணற்ற கால ஆயுள் உண்டு என்கிறது என்இடிசி. இம்மாதிரியான கருமுட்டை மூலம் முதன்முதலில் 1984ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில்தான் குழந்தை பிறந்தது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »