Press "Enter" to skip to content

நேபாள விவகாரத்தில் தலையிடும் சீனா; என்ன செய்கிறது இந்தியா?

நேபாள பாராளுமன்றத்தைக் கலைக்க, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பரிந்துரைத்த பிறகு, சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மூத்த தலைவரை காத்மாண்டுவுக்கு அனுப்பி உள்ளது.

அதே நேரத்தில், கடந்த ஏழு மாதங்களில், நேபாள அரசியல் தலைவர்களின் பார்வை தலைகீழாக மாறியிருக்கிறது. இந்தியா தொடர்ந்து நேபாளத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது எனக் கூறிக் கொண்டிருந்த பிரதமர் சர்மா ஒலி, தற்போது இந்தியாவை விமர்சிப்பதைக் குறைத்திருக்கிறார்.

சர்மா ஒலியின் எதிரணியினர் மற்றும் ஒருங்கிணைந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தாஹால், முன்பு இந்தியாவைத் தொடர்ந்து ஆதரித்து வந்தார். இப்போது நேபாளத்தின் அரசியல் விவகாரத்தில் சீனா தலையிடுவதைக் குறித்து எதையும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

மறு பக்கம், இதுநாள் வரை சர்வதேச விவகாரங்களில் பட்டும்படாமல் இருந்த சீனா, தற்போது நேபாளத்தின அரசியல் பிரச்னையில் தலையிடத் தொடங்கி இருக்கிறது. இமாலயப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக இந்தியா மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில், தற்போது நேபாள நெருக்கடியை உன்னிப்பாக கவனித்து வருகிறது இந்தியா.

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் “இது நேபாளத்தின் உள்விவகாரம். இது ஜனநாயக ரீதியாக தீர்க்கப்பட வேண்டும்” எனக் கூறியிருக்கிறது.

சூழல் இப்படி இருக்கும் போது, சீனாவின் நேபாள தூதர் ஹூ யான்கி (Hou Yankee), புஷ்ப கமல் தாஹாலையும், நேபாளத்தின் குடியரசுத்தலைவர் பித்யா தேவி பண்டாரியையும் சந்தித்திருக்கிறார். அதன் பிறகு, சீனா தன் வெளிவிவகாரத் துறையின் துணை அமைச்சர் க்யூ யேசுவையும் (Guo Yezhu) நேபாளத்துக்கு அனுப்பி இருக்கிறது. நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவைச் சரி செய்ய, சீனா விரும்புவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

க்யூ கடந்த 2018-ம் ஆண்டு நேபாளத்துக்கு வந்தார். கடந்த மே மாதம், இந்தியா மற்றும் சீனாவுக்கிடையில், வரைபடப் பிரச்னை வந்த போது, சர்மா ஒலி, இந்தியாவுடனான தனது உறவை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர முயன்றார்.

சர்மா ஒலி கட்சியில் தன் பலத்தை இழந்துவிட்டால், அவருக்கான அதிகாரம் குறைந்துவிடும் என்பதை இந்தியா முன்பே எதிர்பார்த்தது தான்.

எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்

நேபாளத்தின் உள்விவகாரங்களில் சீனா தலையிடுவதை எதிர்க்கும் விதத்தில், க்யூ யேசு உட்பட நான்கு பேர் கொண்ட சீன அதிகாரிகளின் நான்கு நாள் வருகையை, நேபாள மக்கள் வெளிப்படையாக எதிர்த்துப் போராடத் தொடங்கியிருக்கிறார்கள்.

நேற்று (டிசம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை) காத்மாண்டுவில் மக்கள் சீனாவின் நால்வர் அணி வருகையை எதிர்த்துப் போராடியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

க்யூ தலைமையிலான நால்வர் அணி, நேபாளத்தில் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து, நிலைமையைப் புரிந்து கொள்ள வந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

சமீபத்தில், சர்மா ஒலியின் பரிந்துரையின் பேரில், நேபாளத்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார் நேபாள குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி. இதை எதிர்த்து நேபாள உச்ச நீதிமன்றத்தில் 12 வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் நேபாளத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான புஷ்ப கமல் தாஹாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாள அரசியல் சிக்கல்

நேபாளத்தில் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி, நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என பிரதமர் கே. பி. ஷர்மா ஒலி தலைமையிலான அமைச்சரவை கோரியதை அடுத்து குடியரசுத்தலைவர் வித்யா தேவி பண்டாரி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.

தேவி பண்டாரி

நாடாளுமன்றத்தை கலைத்து பின் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெறும் தேதியையும் அறிவித்தார் பிரதமர் ஒலி. இதன்மூலம் வழக்கமாக தேர்தல் நடைபெற வேண்டிய நேரத்தைக்காட்டிலும் இரண்டு வருடங்கள் முன்னரே தேர்தலை அறிவித்தார் ஷர்மா ஒலி.

பிரதமரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து 7 அமைச்சர்கள் பதவி விலகினர்.

நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி, தனது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை சந்தித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் கட்சியையும், ஆட்சியையும் ஒருதலைபட்சமாக நடத்துவதாகவும் பிரதமர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

2018ஆம் ஆண்டு நேபாளத்தின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இரண்டையும் இணைத்த பிறகு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கே.பி. ஷர்மா ஒலி.

இந்த ஒருங்கிணைந்த கட்சியின் துணைத் தலைவரானார், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசாண்டா என்று அறியப்படும் புஷ்ப கமல் தஹால். இருப்பினும் கட்சிக்குள் அதிகார சண்டை மூண்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »