Press "Enter" to skip to content

வட கொரியாவில் சிறை காவலுக்கு இருந்தவருடன் தப்பிச் சென்ற பெண் கைதி

அவர் எல்லாவற்றையும் யோசித்திருந்தார்.

கண்காணிப்பு கேமிராக்களின் வயர் இணைப்புகளைத் துண்டித்துவிட்டார்.

தொடர்ந்து இரவு நேர பணியில் இருக்க தாமாக முன்வந்து அனுமதி பெற்றார்..

அந்தப் பெண்ணுக்காக கதவுக்குப் பின்னால் ஷூக்களும் வைத்திருந்தார்.

அதிகாலையில் கிம் -ஐ எழுப்பிவிட்டு தான் திட்டமிட்டு வைத்திருந்த வழியில் அழைத்துச் சென்றார் ஜியான்.

முதுகில் மாட்டிக் கொள்ளும் இரண்டு பைகளில் சில பொருட்களை முந்தின இரவே அவர் எடுத்து வைத்திருந்தார். உணவு, மாற்று உடைகள், ஒரு கத்தி,கொஞ்சம் விஷம் ஆகியவை அதில் இருந்தன.

எந்த தடங்கலும் வந்துவிடக் கூடாது என யூகித்து திட்டமிட்டிருந்தார். துப்பாக்கியும் வைத்திருந்தார். துப்பாக்கியை வைத்துவிடுமாறு கிம் பேசிப் பார்த்தார். ஆனால் ஜியான் விடாப்பிடியாக இருந்தார்.

உயிருடன் பிடிபட்டுவிடக் கூடாது என்பதும் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கைதி ஒருவருடன் தப்பிச் செல்லும் குற்றத்தில் சிக்கினால், பெயரளவுக்கு விசாரணை நடத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிச்சயமான நடைமுறையாக வடகொரியாவில் உள்ளது.

“அந்த நாள் இரவு தான் எனக்கு சரியானதாகத் தோன்றியது. அதை நான் தவற விட்டிருந்தால் என்னைப் பிடித்து கொன்றிருப்பார்கள்” என்று 26 வயதான ஜியான் க்வாங்-ஜின் கூறினார்.

ஜியான்

“அவர்கள் என்னைத் தடுத்திருந்தால், அவர்களை சுட்டுவிட்டு ஓடியிருப்பேன். ஓட முடியாமல் போனால், என்னை நானே சுட்டுக் கொண்டிருப்பேன்” என்று அவர் தெரிவித்தார்.

அதுவும் முடியாமல் போனால், கத்தியால் குத்திக் கொண்டு, விஷத்தையும் குடித்திருப்பார்.

“சாவதற்கு நான் தயாராகிவிட்ட நிலையில்,எதைப் பார்த்தும் எனக்குப் பயம் வரவில்லை” என்றும் ஜியான் கூறினார்.

இருவரும் சேர்ந்து ஜன்னல் வழியாக வெளியே குதித்து, கைதிகள் வளாகத்தின் உடற்பயிற்சி மைதானத்தை அடைந்தனர்.

எதிரே மிக உயரமான வேலி இருந்தது. அதில் ஏறியாக வேண்டும். காவலுக்கு நாய்கள் இருந்தன. அவை குரைக்க ஆரம்பித்தால் இவர்களைப் பிடித்துவிடுவார்கள்.

யாருமே வராவிட்டாலும், யார் கண்ணிலும் படாமல், ஓசை ஏற்படாமல் வேலியில் ஏறிவிட்டாலும், டுமென் ஆற்றில் கண்காணிப்பில் இருபட்டிருக்கும் காவல்களைக் கடந்து சென்றாக வேண்டும். தங்களின் சுதந்திரத்துக்குக் குறுக்கே அது இருந்தது.

ஆனால் விடுதலைக்காக அந்த ஆபத்தை எதிர்கொள்ளலாம்.

கிம்மின் இந்த முயற்சி கட்டாயமானதாக இருந்தது. அங்கே இருந்த சூழ்நிலையில், உயிர் பிழைப்பது சாத்தியமற்றதாக இருந்தது.

கைதியும், அவருக்குக் காவலாக இருந்தவருக்கும் ஏற்பட்ட நட்பு அசாதாரணமானதாக இருந்தது.

அவர்கள் 2019 மே மாதம் சந்தித்துக் கொண்டனர். இந்த சம்பவத்துக்கு 2 மாதங்கள் முன்னதாக அந்த சந்திப்பு நடந்தது. வடகொரியாவில் ஆன்சாங் தடுப்புக் காவல் மையத்தில் இருந்த பல காவலர்களில் ஒருவர் ஜியான். கிம் மற்றும் வேறு சில டஜன் பேரை 24 மணிநேரமும் ஜியான் மற்றும் அவருடைய சகாக்கள் கண்காணித்து வந்தனர். கிம் உடன் இருந்தவர்கள் விசாரணையை எதிர்நோக்கி இருந்தனர்.

நேர்த்தியான உடை மற்றும் நல்ல நடத்தை காரணமாக கிம் மீது ஜியானுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

சித்தரிப்பு

வேறு வழியில்லாத நிலையில் இருந்த மக்கள் சிலர் தப்பிச் செல்ல உதவினார் என்ற காரணத்திற்காக கிம் அங்கே அடைக்கப் பட்டிருக்கிறார் என்பது ஜியானுக்கு தெரியும்.

கிம் இடைத்தரகர் என குறிப்பிடப்பட்டிருந்தார். தப்பிச் சென்றவர்களுக்கும், இங்கே உள்ள அவர்களின் குடும்பத்தினருக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தித் தரும் பாலமாக அவர் உதவி வந்தார். தப்பிச் சென்றவர்களுடன் தொலைபேசியில் பேசுவது, பணப் பரிமாற்றம் செய்வதற்கு உதவியாக இருந்து வந்தார்.

சராசரி வடகொரியர்களுக்கு அது நல்ல வருமானம் தரும் தொழிலாக இருக்கிறது.

பரிமாற்றம் செய்யப்படும் தொகையில் 30 சதவீதம் கமிஷனாக கிம் பெறுவார். சராசரியாக 2.8 மில்லியன் வான் அளவுக்கு (1,798 பவுன்ட்) இருக்கும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வடகொரியாவின் கடுமையான கம்யூனிஸ்ட் ஆட்சிக் கட்டுப்பாடுகளை மீறி வெளியில் கிம் சட்டவிரோதமாக எப்படி செயல்பட்டு வந்தார். ஜியான் நாட்டில் சர்வாதிகார ஆட்சியின் கம்யூனிஸ சித்தாந்தத்துக்கு எதிரான செயல்பாடுகள் கொண்டவராக இருந்தார். கடந்த 10 ஆண்டுகளாக கட்டாய ராணுவ சேவையில் இருந்து வருகிறார்.

இருவருக்கும் பொதுவான விஷயங்கள் எவ்வளவு இருக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது. இருவருமே வாழ்க்கையில் வெறுத்துப் போய் இருந்தார்கள். அங்கிருந்து தப்பிவிட வேண்டும் என்று கருதினார்கள்.

கிம்மை பொருத்தவரை சிறையில் இருந்த காலம் திருப்புமுனையாக இருந்தது. அவர் முதல்முறையாக சிறை செல்லவில்லை. இரண்டாவது முறையாக சிறையில் அடைக்கப் பட்டிருப்பதால், இப்போது தண்டனை கடுமையாக இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். உயிருடன் விடுதலையாகிச் சென்றாலும்,மறுபடி இடைத்தரகர் வேலையில் ஈடுபடுதல், மீண்டும் கைதாவது ஆகியவை மேலும் ஆபத்தானவையாக இருக்கும்.

கிம் முதல்முறையாகக் கைது செய்யப்பட்டதே ஆபத்தான இடைத்தரகு வேலைக்காகத்தான். வடகொரியர்கள் சிலர் சீனா எல்லைக்குள் செல்ல உதவி செய்தார் என்பதால் கைதானார். அதே பாதையில் தான் அவரும் ஜியானும் இப்போது செல்லப் போகிறார்கள்.

“ராணுவத்தினருடன் தொடர்பு இல்லாமல் இதுமாதிரி வேலைகளில் ஒருபோதும் நீங்கள் ஈடுபட முடியாது” என்று கிம் தெரிவித்தார்.

வரைப்படம்

தங்கள் செயல்களைக் கண்டுகொள்ளாமல் இருக்க அவர்களுக்கு லஞ்சம் தருவது வழக்கம். ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வந்தார். தப்பிச் செல்ல உதவும் ஒவ்வொருவருக்கும் 1,433 – 2,149 அமெரிக்க டாலர் வரை அவருக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது. அதாவது, ஒருவர் தப்பிச் செல்ல உதவினால், சராசரி வடகொரியைப் பொருத்த வரையில் ஓராண்டுக்கான வருமானத்துக்கு ஈடான தொகையை இதன் மூலம் பெறலாம்.

ஆனால், இந்தத் தொழில் செய்ய உதவி வந்த ராணுவத்தினரே, நம்பிக்கை மோசடியும் செய்கின்றனர்.

கிம்முக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. விடுதலை பெற்று சென்றபோது, இடைத்தரகர் வேலையை விட்டுவிடலாம் என நினைத்திருந்தார். அது ரொம்ப ஆபத்தானதாக இருந்தது.

தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய ஒரு விஷயமும் நடந்தது.

“எவ்வளவு கேட்டாலும் தருவதாக நான் கூறினேன். திரும்பத் திரும்ப கெஞ்சினேன்” கிம்

கிம் சிறையில் இருந்தபோது அவருடைய கணவர் வேறு திருமணம் செய்து கொண்டார். தங்களின் இரு மகள்களையும் அழைத்துச் சென்றிருந்தார். வாழ்வதற்குப் புதிய வழியைத் தேட வேண்டிய கட்டாயத்தில் கிம் இருந்தார்.

மக்கள் தப்பிச் செல்ல உதவும் தைரியம் இல்லாவிட்டாலும், கொஞ்சம் மாறுபட்டதாக, அதிக ஆபத்து இல்லாத வகையில் இடைத்தரகு வேலையை செய்ய அவர் திட்டமிட்டார். தென்கொரியாவுக்கு தப்பிச் சென்றவர்கள் வடகொரியாவுக்குப் பணம் அனுப்பவும், தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவும் இவர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தார்.

வடகொரிய கைபேசிகளில் சர்வதேச அழைப்புகள் செய்யவோ, பெறவோ முடியாது. எனவே, சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட தனது கைபேசியைப் பயன்படுத்திக் கொள்ள கிம் கட்டணம் வசூலித்தார்.

ஆனால் இப்போதும் அவர் சிக்கிக் கொண்டார். தென்கொரியாவுக்கு தப்பிச் சென்றுவிட்ட தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகனை அவருடன் பேச வைப்பதற்காக மலை சிகரத்துக்கு அழைத்துச் சென்றபோது, ரகசிய காவல் படையினர் அவரைப் பின்தொடர்ந்திருக்கிறார்கள்.

“எவ்வளவு கேட்டாலும் தருவதாக நான் கூறினேன். திரும்பத் திரும்ப கெஞ்சினேன். ஆனால் அந்தப் பையனுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்துவிட்டதால்,குற்றத்தை மறைக்கவோ, என்னை தப்பவைக்கவோ முடியாது என்று அந்த அதிகாரி கூறிவிட்டார் ” என்று கிம் தெரிவித்தார்.

வடகொரியாவைப் பொருத்த வரையில் தென்கொரியா, ஜப்பான் அல்லது அமெரிக்கா போன்ற “எதிரி நாடுகளுடன்” தொடர்பில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது அவ்வாறான சந்தேகம் எழுந்தாலோ, கொலைக் குற்றத்துக்கானதைவிட கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

தன்னுடைய வாழ்க்கை இத்துடன் முடிந்துவிட்டதாக கிம் உணர்ந்தார். ஜியானை கிம் சந்தித்தபோது, விசாரணைக்கு காத்திருக்கும் நிலையில் இருந்தார். இரண்டாவது முறையாக சிறைக்கு வந்திருப்பதால், தண்டனை கடுமையாக இருக்கும் என்று அவர் அறிந்திருந்தார்.

தன் உயிருக்குப் பயப்படாத ஜியானும், மிகவும் வெறுப்பில் இருந்தார்.

கட்டாய ராணுவ சேவையில் அவர் ஈடுபட்டிருந்தார். வடகொரியாவின் நிறுவனரின் சிலைக்குக் காவல் இருப்பது, கால்நடைகளுக்குத் தீவனம் விளைவிப்பது போன்றவை அவருடைய வழக்கமான பணிகளாக இருந்தது. குழந்தைப் பருவத்தில் கனவாக இருந்த, காவல் துறை அதிகாரியாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இருந்தார்.

ஆனால் அவருடைய எதிர்காலம் பற்றிய உண்மை குறித்து அவரது தந்தை தெரிவித்தார்.

“ஒரு நாள் என்னுடன் உட்கார்ந்து பேசிய என் தந்தை, என்னைப் போன்ற பின்னணியில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் காவல் துறை அதிகாரியாக முடியாது என்பதுதான் யதார்த்த நிலை” என்று கூறினார் என ஜியான் தெரிவித்தார்.

ஜியானின் பெற்றோர்கள், அவர்களுடைய பெற்றோரைப் போல விவசாயிகளாக இருந்தனர்.

“வடகொரியாவில் முன்னேற உனக்குப் பணம் தேவை. நிலைமை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. பல்கலைக்கழகத் தேர்வில் கூட பேராசிரியர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் தான் நல்ல தேர்ச்சி பெற முடியும்” என்று ஜியான் கூறினார்.

முன்னணி கல்லூரியில் படித்தாலோ அல்லது உயர் பாராட்டுகளுடன் பட்டம் பெற்றாலோ கூட, பணம் இல்லாமல் பிரகாசமான எதிர்காலம் அமையாது.

“மதிப்புமிக்க கிம் இல்-சங் பல்கலைக்கழகத்தில் முதல்நிலை பட்டதாரியாக தேர்ச்சி பெற்ற ஒருவரை எனக்குத் தெரியும். அவர் சந்தையில் போலி மாமிசம் விற்று வருகிறார்” என்று ஜியான் தெரிவித்தார்.

பெரும்பாலான மக்களுக்கு, உயிர் பிழைத்திருப்பதே போராட்டமாகத்தான் உள்ளது.

ஜியான் வாழ்வில் கடந்த காலத்தில் வாழ்க்கை சூழல்கள் நன்றாக இருந்திருக்கலாம். நான்கு ஆண்டுகள் பஞ்சம் ஏற்பட்டதால் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதை அந்த மக்கள் “கடினமான பயணம்” என குறிப்பிடுகின்றனர். அவை இன்னும் தீவிர கடினமாக உள்ளன.

காவல் துறை அதிகாரியாக வேண்டும் என்ற கனவு நிறைவேற சாத்தியமில்லை என்று தெரிந்துவிட்ட நிலையில், தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேறு வழி குறித்து ஜியான் சிந்திக்கத் தொடங்கினார்.

கிம் உடன் சந்திப்பு நடந்த போதுகூட, அந்த சிந்தனை ஆரம்ப நிலையில் தான் இருந்தது. ஆனால் இருவரும் பேசப் பேச, அந்த எண்ணம் உறுதியானது.

சிறைவாசிக்கும், காவலருக்கும் இடையிலான நட்பு அசாதாரணமானது.

சிறைவாசிகள் நேருக்கு நேராக காவலரைப் பார்ப்பதற்கு கூட அனுமதி கிடையாது என்று ஜியான் தெரிவித்தார். “வானமும் பூமியும் போல” அவர்கள் இருப்பார்கள்.

ஆனால் கிம்மின் கதவில் இரும்புக் கம்பிகளுக்கு இடையே லேசான குரலில் ஜியான் பேசுவார்.

“அங்கே ஒளிக்கருவி (கேமரா) உள்ளது. ஆனால் அடிக்கடி மின்சாரம் தடைபடும் போதும் பேசுவதை கவனிக்க முடியாது. சில நேரம் இவர்களே லேசாக ஒளிக்கருவி (கேமரா)வை திருப்பி வைத்துவிடுவார்கள்.”

“யாருக்கு யார் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பது சிறைவாசிகளுக்குத் தெரியும். ஆனால் சிறைக்குள் காவலர்கள் தான் அதிகாரம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.’

கிம் குறித்து அதிக அக்கறை எடுத்துக் கொண்டதாக ஜியான் தெரிவித்தார். “எங்களுக்குள் தொடர்பு ஏற்பட்டதாகக் கருதினேன்” என்றார் அவர்.

“உங்களுக்கு நான் உதவி செய் விரும்புகிறேன் சகோதரி. சிறையில் நீங்கள் சாக வேண்டியிருக்கலாம்.”

முதல் சந்திப்பு நடந்த இரண்டு மாதங்கள் கழித்து, அவர்களுடைய நட்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றது.

கிம் மீது விசாரணை நடைபெற்று, அவருக்கு நான்கு ஆண்டுகள், 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எல்லோரும் பயப்படக் கூடிய சோங்கோரி சிறையில் அவரை அடைக்க உத்தரவிடப்பட்டது.

அந்தச் சிறையில் இருந்து உயிருடன் திரும்ப முடியாது என்பதை கிம் அறிந்திருந்தார். அங்கே இருந்த முன்னாள் சிறைவாசிகளை பேட்டி எடுத்ததில்வடகொரிய சிறைகளில் பரவலான அத்துமீறல்கள் நடப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

“வேறு வழியற்ற நிலையில் இருந்தேன். தற்கொலை செய்து கொள்ள பல முறை நினைத்தேன். பல முறை அழுதேன்” என்று கிம் குறிப்பிட்டார்.

“சிறைக்குச் செல்லும்போது உங்களின் குடியுரிமை பறிக்கப்படும்” என்று ஜியான் தெரிவித்தார். “இனிமேல் நீங்கள் மனிதனே கிடையாது. விலங்கிற்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது” என்று அவர் குறிப்பிட்டார்.

சித்தரிப்பு

சோங்கோரி சிறை வளாகம்

ஒருநாள் கிம்மிடம் அவர் முணுமுணுத்த வார்த்தைகள் அவர்களின் வாழ்வை நிரந்தரமாக மாற்றுபவையாக இருந்தன.

“உங்களுக்கு நான் உதவி செய்ய விரும்புகிறேன் சகோதரி. சிறையில் நீங்கள் சாக வேண்டியிருக்கலாம். இங்கிருந்து வெளியே செல்ல உதவி செய்வதன் மூலம் தான் உங்களை என்னால் காப்பாற்ற முடியும்” என்று ஜியான் அப்போது கூறினார்.

ஆனால், பல வடகொரியர்களைப் போல, மற்றவர்களை நம்பக் கூடாது என்பதை கிம் கற்றுக் கொண்டிருந்தார். இதுகூட ஏமாற்றுப் பேச்சாக இருக்கலாம் என அவர் நினைத்தார்.

“எனவே அவரிடம் `நீங்கள் உளவாளியா’ என்று கேட்டேன். என்னை உளவு பார்த்து, என்னை அழித்துவிடுவதால் உனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டேன். ஆனால் தாம் உளவாளி அல்ல என்று அவர் திரும்பத் திரும்ப கூறினார்” என்று கிம் தெரிவித்தார்.

தென்கொரியாவுக்கு கிம் தப்பிச் செல்ல உதவி செய்வதுடன், தாமும் அவருடன் வர விரும்புவதாகவும் ஜியான் கூறியிருக்கிறார்.

கொரிய போரின் தொடர்ச்சியாக ஏற்பட்ட பிரிவினையில், தென்கொரியாவில் அவருடைய உறவினர்கள் இருப்பதால், வடகொரியாவில் தாழ்ந்த பிரிவைச் சேர்ந்தவராக பார்க்கப்படுவதால், எதிர்காலம் பிரகாசமாக இருக்காது என்று ஜியான் நினைத்தார்.

ஆனால் மாறுபட்ட எதிர்காலத்துக்கான நம்பிக்கையை அந்த உறவினர்கள் அளித்திருந்தனர்.

கடந்த முறை தனது பெற்றோர்கள் வந்தபோது விட்டுச் சென்ற உறவினர்களின் படங்களை ஜியான் காட்டினார். உறவினர்களின் முகவரிகள் புகைப்படத்தின் பின்னால் சிறிய எழுத்துகளில் இருந்தன.

இதையடுத்து ஜியானை கிம் நம்பத் தொடங்கினார்.

ஆனால் அவரும் மிகவும் பயப்பட்டார்.

“என் இருதயம் தாறுமாறாக துடித்தது. வடகொரிய வரலாற்றில் சிறைவாசியும், காவலரும் சேர்ந்து தப்பியது கிடையாது” என்று கிம் தெரிவித்தார்.

2019 ஜூலை 12 ஆம் தேதி, தனக்கான நேரம் வந்துவிட்டதாக ஜியான் கருதினார். கிம்மை வேலை முகாமுக்கு அனுப்ப வேண்டியது கட்டாயம் என்ற நிலை வந்துவிட்டது. ஜியானின் மேலதிகாரி அன்றிரவு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

இருளின் போர்வையில், இருவரும் ஜன்னல் வழியாக வெளியே குதித்து, வெளிப்புற சுற்றுச்சுவர் மீது ஏறி தப்பி, நெல் வயல்களைக் கடந்து ஆற்றுக்குச் சென்றுவிட்டார்கள்.

“நான் கீழே விழுந்து விழுந்து எழுந்தேன். நொண்டியபடி சென்றேன்” என்றார் கிம். பல மாதங்கள் சிறையில் இருந்ததால் உடல் பலவீனமாகி இருந்தது.

ஆனால் இருவரும் பத்திரமாக ஆற்றின் கரையை அடைந்துவிட்டனர். 50 மீட்டர் தொலைவில் மின் விளக்கு இருக்கிறது. எல்லையில் பாதுகாப்புப் படையினரின் முகாமில் இருந்து வெளிச்சம் வந்து கொண்டிருந்தது.

“தடுப்புக் காவல் மையத்தில் இருந்து நாங்கள் தப்பி வந்ததை எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் இருப்பவர்கள் கண்டுபிடித்து விடுவார்களோ என நாங்கள் நினைத்தோம். ஆனால் நாங்கள் ஒளிந்திருந்து கவனித்தோம். அப்போது பணி முடிந்து அடுத்த குழுவினர் பொறுப்பை ஏற்றனர். அதுகுறித்து காவலர்கள் பேசிக் கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம்” என்று ஜியான் தெரிவித்தார்.

“நாங்கள் காத்திருந்தோம். சுமார் 30 நிமிடங்களில் அமைதியாகிவிட்டது.”

“எனவே நாங்கள் ஆற்றில் இறங்கினோம். பல முறை நான் ஆற்றின் கரைக்கு சென்றிருக்கிறேன். ஆழம் குறைவாகத்தான் இருக்கும். ரொம்ப ஆழமாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது.”

“நான் மட்டும் தனியாக இருந்திருந்தால் நீந்திச் சென்றிருப்பேன். ஆனால் நான் முதுகில் பை வைத்திருந்தேன். துப்பாக்கியும் இருந்தது. அது நனைந்துவிட்டால், பயன்படாமல் போய்விடும். எனவே அதைத் தலைக்கு மேல் தூக்கி பிடித்துக் கொண்டேன். ஆனால் ஆழம் அதிகரித்துக் கொண்டே இருந்தது” என்று ஜியான் கூறினார்.

பின்னர் ஜியான் நீந்தத் தொடங்கினார். ஆனால் கிம்முக்கு நீச்சல் தெரியவில்லை.

ஜியான் தன் துப்பாக்கியை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் கிம்மை இழுத்துச் சென்றார்.

“ஆற்றின் நடுப்பகுதிக்குச் சென்றபோது என் தலைக்கு மேல் வரை தண்ணீர் ஓடியது. எனக்கு மூச்சுத் திணறியது, கண்களைத் திறக்க முடியவில்லை” என்று ஜியான் தெரிவித்தார்.

திரும்பிச் சென்றுவிடலாம் என ஜியானிடம் கிம் கெஞ்சி இருக்கிறார்.

“திரும்பிச் சென்றால் நாம் இருவருமே சாக வேண்டும். இங்கேயே சாகலாம், அங்கே அல்ல” என்று கூறினேன். ஆனால் களைத்துவிட்டது. `இப்படித்தான் நான் சாக வேண்டுமா, எல்லாம் இப்படித்தான் முடிவுக்கு வருமா’ என்று நினைத்தேன்” என்றார் ஜியான்.

ஒருவழியாக ஜியானின் கால்கள் தரையைத் தொட்டன.

ஆற்றில் இருந்து வெளியேறி, கம்பிகள் போட்ட வேலியை அடைய கடைசிப் பகுதி நிலத்தையும் கடந்தனர். அந்த வேலி தான் சீனா எல்லையைக் குறிக்கும் வேலியாக இருந்தது.

அப்போது கூட அவர்கள் பாதுகாப்பான சூழலுக்கு வரவில்லை.

மலைச் சிகரங்களில் அவர்கள் 3 நாட்கள் மறைந்திருந்தார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது கைபேசியை தரும் வரையில் அங்கு தான் இருந்தார்கள். தனக்குத் தெரிந்த ஒரு இடைத்தரகரை கிம் தொடர்பு கொண்டு உதவி கோரினார். வடகொரிய அதிகாரிகள் தீவிர விழிப்புடன் இருப்பதாகவும்,இருவரையும் கைது செய்ய ஒரு குழுவை அனுப்பி இருப்பதாகவும், அந்தப் பகுதியில் தேடுதல் பணி மேற்கொள்ள சீன காவல் துறையுடன் சேர்ந்து முயற்சி மேற்கொண்டிருப்பதாகவும் அந்த இடைத்தரகர் தெரிவித்துள்ளார்.

ஆனால் கிம்முக்கு இருந்த தொடர்புகள் மூலமாக, பாதுகாப்பான இடத்தில் இருந்து, இன்னொரு பாதுகாப்பான இடம் என மாறி, மாறி சென்றனர். பிறகு சீனாவில் இருந்து மூன்றாவதாக ஒரு நாட்டுக்குள் நுழைந்தார்கள்.

கடைசி நிலை பயணத்தின்போது அவர்கள் எங்களை ரகசியமான ஓர் இடத்தில் சந்தித்து, தப்பி வந்த பயணம் மற்றும் அதன் ஆபத்துகள் பற்றி பேசினார்கள்.

கிம் மற்றும் ஜியானின் செயல்பாட்டால் வடகொரிய ஜாதிய முறையில் அவர்களுடைய குடும்பத்தினருக்கு சமூக அந்தஸ்து பாதிப்பு அதிகரிக்கும். அவர்களுடைய உறவிகள் விசாரிக்கப்படுவார்கள், கண்காணிக்கப் படுவார்கள்.

ஆனால் அந்தத் தருணத்தில் இருவருமே ஒதுங்கி இருந்தது குறித்து அவர்கள் நம்பிக்கையாக உள்ளனர். ஜியான் ராணுவத்தில் இருந்தார். கிம் தன் கணவர் மற்றும் பிள்ளைகளை விட்டுப் பிரிந்திருந்தார். எனவே அவர்களுடைய திட்டம் பற்றி தெரியாது என உறவினர்கள் கூறலாம்.

“நான் உயிர்வாழ வேண்டும் என்பதற்காக தப்பி வந்துவிட்டேன் என்பது குற்ற உணர்வாக இருக்கிறது. அது உண்மையில் மனதை நெருடுகிறது” என்றார் கிம்.

வரைப்படம்

ஜியானுக்கும் அதே மாதிரி உணர்வு உள்ளது. “இல்லத்தில் இருப்பதே இனிமை” என்ற பொருளில் வரும் பாடலை முணுமுணுத்த ஜியான், பிறகு தலையை தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டார்.

இதுவரை தன்னுடன் வந்த பெண்ணிடம் இருந்து பிரிந்து வேறொரு பாதையில் செல்லப் போவது குறித்து அவர் வருத்தப்பட்டார்.

அவர் தனது திட்டத்தை மாற்றிக் கொண்டார். தென் கொரியாவுக்குச் செல்லாமல் அமெரிக்கா செல்ல விரும்புகிறார்.

அமெரிக்காவில் தஞ்சம் கேட்டு விண்ணப்பிக்க காத்திருக்கும் காலத்தில், ஜியான் தானாகவே ஆங்கிலம் கற்கிறார்.

“என்னுடன் அமெரிக்கா வந்துவிடுங்கள்” என்று கிம்மிடம் ஜியான் வலியுறுத்துகிறார். கிம் மறுக்கிறார். “எனக்கு நம்பிக்கையாக இல்லை. எனக்கு ஆங்கிலம் பேச வராது. எனக்குப் பயமாக இருக்கிறது” என்கிறார் அவர்.

அவரை சமாதானப்படுத்த ஜியான் முயற்சிக்கிறார். போகப் போக ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம் என்கிறார்.

“எங்கே சென்றாலும், என்னை மறந்துவிட வேண்டாம்” என்று அமைதியாகக் கூறினார் கிம்.

ஆனால், வடகொரியாவின் அடக்குமுறை ஆட்சியில் இருந்து வந்துவிட்டோம் என்பதில் இருவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

“திரும்பிப் பார்த்தால், நாங்கள் எல்லோருமே சிறையில் வாழ்ந்திருக்கிறோம். நாங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்ல ஒருபோதும் அனுமதி கிடையாது. விரும்பியதைச் செய்ய ஒருபோதும் அனுமதி கிடையாது.”

“வடகொரியர்களுக்கு கண்கள் உண்டு, இருந்தாலும் பார்க்க முடியாது; காதுகள் உண்டு, இருந்தாலும் கேட்க முடியாது; வாய் உண்டு, இருந்தாலும் பேச முடியாது” என்று ஜியான் கூறினார்.

புதிதாக செல்லும் நாட்டில் பிரச்னை வரக் கூடாது என்பதற்காக கைதியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »