Press "Enter" to skip to content

பாகிஸ்தான் இந்து சாமியார் சமாதி மீது ஒரு கும்பல் தாக்குதல்

  • ஷுமைலா ஜாஃப்ரி
  • பிபிசி செய்தியாளர், இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் கைபர் பக்தூங்வா பகுதியில் உள்ள இந்து சாமியார் சமாதி ஒன்றின் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

கரக் மாவட்டத்தில் டெரீ என்ற சிற்றூரில் ஸ்ரீ பரம்ஹன்ஸ் ஜி மகராஜ் என்கிற இந்து சாமியாரின் பழமையான சாமாதி அமைந்துள்ளது. இந்து தலைவர் ஒருவர் இந்த சமாதியை ஒட்டி வீடு கட்டியதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை என்று காவல் துறை கூறுகிறது.

அப்பகுதியில் இந்துக்கள் யாரும் குடியிருக்கவில்லை என கரக் மாவட்ட காவல்துறை அதிகாரி இர்ஃபானுல்லா மார்வாத் பிபிசி செய்தியாளர் சிராஜுதீனிடம் தெரிவித்தார். சமாதிக்கு அருகில் நடந்து கொண்டிருந்த கட்டட வேலைகள், அச்சமாதியின் ஒரு பகுதி என உள்ளூர் மக்கள் கருதினார்கள்.

இந்தப் போராட்டம் குறித்து போலீசுக்கு தெரியும் என்றும், அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்றும் கூறுகிறார் மார்வாத். இந்தப் போராட்டம் அமைதியாக நடக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் ஒர் இஸ்லாமிய மதகுரு, மக்களைத் தூண்டிவிட்டு ஒட்டுமொத்த சூழலையும் பாழாக்கிவிட்டார். கூட்டம் அதிக அளவில் இருந்ததால், கலவரத்தைப் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றார் மார்வாத்.

டெரீ

தற்போது அப்பகுதியில் சூழல் கட்டுக்குள் இருக்கிறது இருப்பினும் இன்னும் பதற்றமாகவே இருக்கிறது. இதுவரை இந்த சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆனால் இதற்கு காரணமானவர்கல் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று கூறியிருக்கிறார் மாவட்ட காவல்துறை அதிகாரி.

ஏன் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எழுகின்றன?

பரம் ஹன்ஸ் மகராஜ் சமாதி சர்ச்சைக்குள்ளாவது ஒன்றும் புதிதல்ல. இந்த சமாதி அமைந்திருக்கும் பகுதியில் இருக்கும் பழமைவாதிகள், தொடக்கத்தில் இருந்தே இந்த சமாதி குறித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். கடந்த 1997-ம் ஆண்டு இந்த சமாதி முதன்முறையாக தாக்கப்பட்டது.

பாகிஸ்தானின் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கைபர் பக்தூங்வா மாகாண அரசு, பரம் ஹன்ஸ் மகராஜின் சமாதியை மீண்டும் கட்டிக் கொடுத்தது.

அரசும், நீதிமன்றத் தீர்ப்பும் இந்த சமாதிக்கு ஆதரவாக இருக்கும் போது, டெரீ கிராமத்தில் சூழல் பதற்றமாகவே இருக்கின்றது. டெரீயில் வாழும் அடிப்படைவாதிகளோடு, உள்ளூர் அரசு அதிகாரிகள் பல முறை பேச்சு வார்த்தை நடத்திய பிறகு தான் சமாதியைக் கொடுத்தார்கள்.

கைபர் பக்தூங்வா மாகாணத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருந்த வகார் அஹ்மத் கான், கடந்த 2015-ம் ஆண்டு, பரம் ஹன்ஸ் மகராஜ் சமாதி குறித்து ஒரு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்து மற்றும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஐந்து விதிகளை ஒப்புக் கொண்ட பிறகு தான், சமாதியை மறுகட்டுமானம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

அந்த விதிகளில், இந்துக்கள் டெரீ கிராமத்தில் தங்களின் மதத்தைப் பரப்பக் கூடாது, வெறுமனே அச்சமாதியில் தங்கள் மத வழிபாடுகளை மட்டும் மேற்கொள்ளலாம் என்பதும் அடக்கம்.

அத்தோடு, அச்சமாதியில் அதிக அளவில் இந்துக்கள் கூடுவதற்கோ, கட்டுமானங்களை மேற்கொள்வதற்கோ அனுமதி இல்லை. மேலும் சமாதி இருக்கும் பகுதியில் இந்துக்கள் நிலம் வாங்க முடியாது என்பதும் அந்த விதிகளில் அடக்கம்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்த சமாதி, பாகிஸ்தான் அரசின் ட்ரஸ்டுக்குச் சொந்தமான சொத்து. கடந்த 1919-ம் ஆண்டு, பரம் ஹன்ஸ் மகராஜ் இறந்து, எரியூட்டப்பட்ட இடத்தில் இந்த நினைவிடம் கட்டப்பட்டது. அவரது பக்தர்கள் பல ஆண்டுகளாக இந்த சமாதிக்கு வருகிறார்கள்.

1997-ம் ஆண்டு இந்த நினைவிடம் சேதப்படுத்தப்பட்டதால், இங்கு வரும் பக்தர்கள் நிறுத்தப்பட்டார்கள். இதன் பிறகு இதனை பக்தர்களே மறுகட்டுமானம் செய்ய முயற்சி செய்தார்கள் அதோடு, உள்ளூரைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுரு ஒருவர், சமாதியை கைப்பற்றிக் கொண்டதாகவும் இந்துக்கள் குற்றம்சாட்டினர்.

இந்துக்களும் பாகிஸ்தான் குடிமக்களே, மற்றவர்களைப் போல பாகிஸ்தானில் வாழும் இந்துக்களும் பாகிஸ்தானில் எங்கு வேண்டுமானாலும் சொத்துக்களை வாங்கலாம் என மாவட்ட காவல் துறை அதிகாரி இர்ஃபானுல்லா மார்வாத் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »