Press "Enter" to skip to content

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் வாண வேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்ற பொதுமக்கள்

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 2021ஆம் புது வருடத்தை வாண வேடிக்கை நிறைந்த காட்சிகளுடன் அங்குள்ள மக்கள் வரவேற்றனர்

நியூசிலாந்தில் கடுமையான பொது முடக்க கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டதால், அங்கு வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின.

புத்தாண்டு

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கண் கவர் வாண வேடிக்கை இருந்தபோதும், துறைமுகபகுதியில் மக்கள் ஒன்று கூடி அந்த காட்சிகளை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

புத்தாண்டு

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) 2020ஆம் ஆண்டில் புரட்டிப்போட்ட இயல்புநிலையை மீட்டெடுக்க உலக அளவில் பல நாடுகள் போராடி வருகின்றன. இந்த நிலையில், உலகின் பல நாடுகளில் முதலாவதாக புத்தாண்டை எதிர்கொண்ட ஜப்பான், தென் கொரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் புத்தாண்டை மக்கள் அமைதியான வகையில் வரவேற்றனர்.

புத்தாண்டு

பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த அந்நாட்டு அரசு, விதிகளை மீறி நிகழ்ச்சிகளை நடத்துவரை கண்காணிக்க ஒரு லட்சம் காவல்துறையினரை சிறப்பு கண்காணிப்பு பணிக்காக நியமித்தது.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நகரங்கள் உள்பட பல இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

சீனாவில் ஒளிரும் நிகழ்ச்சிகளுக்கு இந்த ஆண்டு அரசு கட்டுப்பாடு விதித்ததால், லாந்தர் விளக்குகளை ஏற்றி புத்தாண்டை மக்கள் வரவேற்றார்கள்.

பிரிட்டனில், புதிய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) திரிபு வேகமாகப் பரவி வருவதோடு, மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 மில்லியன் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அந்நாட்டில் மக்கள் கோவிட்-19 சமூக இடைவெளி விதிகளை பின்பற்றுமாறு பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக பேசிய அவர், “நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் வீட்டுக்குள்ளேயே இருந்தால் தவிர வெளியிடங்களில் பெரிய அளவில் திரளாமல் இருந்தால் நல்லது” என்று தெரிவித்தார்.

அயர்லாந்து நாட்டில் வியாழக்கிழமை இரவு மிக கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பிறரது வீடுகளுக்கு மக்கள் செல்ல முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் அல்லாதவர்கள் ஐந்து கி.மீ தூரத்துக்கு மேல் செல்லவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

ஜெர்மனி நாட்டில் ஜனவரி 10ஆம் தேதிவரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு புத்தாண்டையொட்டி பட்டாசு விற்பனைக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது. எனினும், இந்த நடவடிக்கையை பொதுமக்கள் சாதகமான நடவடிக்கையாக பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான், “நாட்டில் “அமைதியான புத்தாண்டு கொண்டாட்டம்” ஆக 2021ஆம் ஆண்டு நினைவில் இருக்கும்,” என்றார்.

நெதர்லாந் நாட்டில் பொது முடக்கம் ஜனவரி 19ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் வழக்கமான புத்தாண்டு கவுன்ட் டவுன் நிகழ்ச்சிக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

துருக்கி நாட்டில் புத்தாண்டு நாளில் தொடங்கி நான்கு நாட்களுக்கு பொது முடக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் என்ன நிலை?

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலையொட்டி பல்வேறு மாநில அரசுகள் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்க கட்டுப்பாடுகளை மத்திய அரசு வழிகாட்டுதலின்படி ஜனவரி 31ஆம் தேதிவரை நீட்டித்திருக்கின்றன.

புதுச்சேரியில் உற்சாகத்துடன் தொடங்கிய கொண்டாட்டம்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி வழங்கியிருந்ததால் வெளிநாடுகள், வெளியூர்களில் இருந்தும் புத்தாண்டை கொண்டாட மக்கள் வந்திருந்தனர். அங்குள்ள விடுதிகளில் கிட்டத்தட்ட 90 சதவீத அறைகள் டிசம்பர் 31ஆம் தேதி முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. உணவகங்கள், விடுதிகளில் மூடப்பட்ட சூழலில் புத்தாண்டை கொண்டாட மக்கள் அனுமதிக்கப்படாதபோதும் கடற்கரை சாலைகளில் மக்கள் சமூக இடைவெளியுடன் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க ஊக்குவிக்கப்பட்டார்கள்.

தமிழகத்தில் களையிழந்த கொண்டாட்டம்

தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டம், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கம் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டன. சென்னையில் புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களுக்கு அரசு தடைவிதித்தது. கடற்கரை சாலைகளில் வழக்கமாக புத்தாண்டையொட்டி மக்கள் கூடுவார்கள். இந்த ஆண்டு அவ்வாறு கூடுவதற்கு காவல்துறை தடை விதித்திருக்கிறது. எனினும் நள்ளிரவுக்கு முன்னதாக, மக்கள் கடற்கரை சாலைகளை தவிர்த்து வேறு பகுதி வழியாக வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

டெல்லியில் என்ன நிலை?

டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற நகரங்களில் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தன. டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. டிசம்பர் 31 முதல் ஜனவரி 1ஆம் தேதி காலை 6 மணி வரை பொதுமக்கள் கூடுதற்கு டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தடை விதித்தது.

புத்தாண்டையொட்டி வழக்கமாக பொதுமக்கள் தலைநகர் டெல்லியில் நள்ளிரவு 12 மணியளவில் கனாட் பிளேஸ், இந்தியா கேட் ஆகிய பகுதிகளில் கூடி வாழ்த்து கூறுவார்கள். ஆனால், இந்த ஆண்டு அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் இரவு 11 மணிக்கு மேல் அந்த பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா

மகராஷ்டிரா தலைநகர் மும்பையில் புத்தாண்டு கொண்டாட்ட தின கட்டுப்பாடுகளுடன் சேர்த்து இரவு நேர ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஜனவரி 5ஆம் தேதி வரை விதிக்கப்பட்டிருக்கிறது. உணவு விடுதிகள், மதுபான விடுதிகள் ஆகியவை இரவு 11 மணிக்கு மேல் திறக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை.

கர்நாடகா

பெங்களூரில் புத்தாண்டு பொது நிகழ்ச்சிகளுக்கு அம்மாநில உள்துறை தடை விதித்துள்ளது. அங்குள்ள எம்ஜி ரோடு, சர்ச் தெரு, பிரிகேட் சாலை, கோரமங்கலா மற்றும் இந்திரா நகர் பகுதிகள், இரவு 11 முதல் காலை 6 மணிவரை மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதிகளாக நகர காவல்துறை அறிவித்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »