Press "Enter" to skip to content

சீனாவின் பனிச்சிகர நாயகன் வாங் ஷியாங்ஜுன் இறந்திருக்கலாம் என தகவல்

சூழலியல் ஆர்வலர் மற்றும் சமூக வலைதளங்களில் செல்வாக்குமிக்கவரான சீனாவின் வாங் ஷியாங்ஜுன், திபெத்தில் கடுங்குளிர் நீரில் விழுந்ததால் இறந்திருக்கக் கூடும் என கருதப்படுகிறது. இவரை அந்நாட்டவர்கள் “கிளேசியர் ப்ரோ” என்ற பட்டப்பெயருடன் அழைக்கிறார்கள்.

30 வயதான வாங் ஷியாங்ஜுன், ஒரு பனிப்பாறை நீர்வீழ்ச்சியை ஆராய்ந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 20ஆம் தேதிக்குப் பிறகு அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

வாங்கின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில், வாங்கின் சமூக வலைதள பக்கங்கள், அவரது இறப்புச் செய்தியை கடந்த சனிக்கிழமை உறுதி செய்தன.

பனிப்பாறைகளை ஆராயும் காணொளிகள் மற்றும் சூழலியல் மாற்றங்களினால் ஏற்படும் தாக்கங்களை மக்களுக்குப் புரிய வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த முன்னெடுத்த நடவடிக்கைகளால் வாங் பலராலும் அறியப்பட்டார்.

வாங் ஒரு நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் ஏறிக் கொண்டிருந்த போது, பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்த பனிப்பாறைகளைக் கொண்ட நீருக்குள் தவறி விழுந்து விட்டதாக, சீன சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளிகளில் தெரிவிக்கப்படுகிறது.

திபெத்தின் வடக்குப் பகுதியில், லஹரி எனுமிடத்தில் இந்த சம்பவம் நடந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.

ஆனால் மறுபக்கம், மீட்புக் குழுவினர் இன்னமும் வாங்கை தேடிக் கொண்டிருக்கிறார்கள். வாங் ஒரு பெரிய பனிப்பாறையின் அடியில் சிக்கி இருக்கலாம். அதிலிருந்து மீள்வது என்பது கிட்டத்தட்ட நடக்காத காரியம் என மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறியிருக்கிறார்.

கடந்த வார இறுதியில், வாங்கின் அதிகாரபூர்வமான குய்ஷோ (Kuaishou) சமூக வலைதளக் கணக்கை நிர்வகித்து வந்த நிர்வாகி, வாங்கின் இறப்பை உறுதி செய்திருப்பது போலத் தெரிகிறது.

“என் சகோதரர், தனக்குப் பிடித்தமான நீர்வீழ்ச்சியில் எப்போதைக்குமாக இருக்கிறார். யாரும் வாங்கின் மரணத்தை பெரிதுபடுத்தாமல், அவருக்கு உரிய மரியாதையைச் செய்வார்கள் என நம்புகிறேன். வாங்கின் மனம் முழுக்க பனிப்பாறைகளால் நிறைந்திருந்தது. கடைசியில் அந்தப் பனிப்பாறைகளுக்கே தன் உயிரைக் கொடுத்துவிட்டார். அது தான் அவருக்கான சிறந்த ஓய்விடமாக இருக்கும்” என அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சீனாவின் சிசுவான் கிராம புற மாகாணத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் வாங் சியாங்ஜுன். பனி போர்த்திய மலையில் சுற்றுலா செல்வது தொடர்பாக ஒரு விளம்பரத்தைப் பார்த்த பின் தான், பனிப்பாறைகள் மீது வாங்குக்கு ஆர்வம் வந்தது எனச் சீனாவின் ஜின்ஹுவா (Xinhua) செய்தி முகமை குறிப்பிட்டிருக்கிறது.

அடுத்த ஆண்டில், வாங் 12 பனிப்பாறைகளுக்குச் சென்று வந்தார். திபெத்திய அட்வெஞ்சுரர் என்கிற பெயரில், அது தொடர்பான காணொளிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். பனி படர்ந்த பகுதிகளில் ஏறிச் செல்வது, பனி குகைகளை ஆராய்வது, பனிச் சுரங்கங்களை ஆராய்வது போன்ற காணொளிகளை அவர் பதிவிடுவார். அது சமூக வலைதளங்களில் உடனடியாக மிகுதியாகப் பகிரப்படும்.

சீனா

ஏழே ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட பனிப்பாறைகளைப் படம்பிடித்தது மற்றும் கடந்த ஆண்டில் நடந்த ஐ.நாவின் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டது போன்ற நடவடிக்கைகளால் இவர் சீனா முழுவதும் பிரபலம் அடைந்தார்.

பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார் வாங்.

“நான் என் செல்பேசியில் கண்ட பனிப்பாறைகளை விட, கிட்டத்தட்ட எல்லா பனிப்பாறைகளும் நேரில் பார்க்கும்போது வேறு மாதிரியாக இருந்தன. பனிப்பாறைகள் எவ்வளவு வேகமாக உருகுகிறது என்பதை உணர, நீங்கள் அப்பனிப்பாறைகளின் முன் சென்று நிற்க வேண்டும்” என ஷின்ஹுவா செய்தி முகமையிடம் கடந்த ஜனவரி மாதம் குறிப்பிட்டிருந்தார் வாங்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »