Press "Enter" to skip to content

சீனா – அமெரிக்கா வர்த்தக மோதல்: 3 சீன தொலைத் தொடர்பு நிறுவனங்களை வெளியேற்றும் அமெரிக்க பங்கு சந்தை

  • ஜஸ்டின் ஹார்ப்பர்
  • பிபிசி வணிக செய்தியாளர்

சீன ராணுவத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி மூன்று மூன்று சீன தொலைத் தொடர்பு நிறுவனங்களை வெளியேற்றவுள்ளது நியூயார்க் பங்குச் சந்தை.

அடுத்த வாரம், இந்த நிறுவனங்கள் நியூயார்க் பங்குச் சந்தையிலிருந்து வெளியேற்றப்படும்.

மூன்று சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் பங்குச் சந்தையில் இருந்து வெளியேற்றப்படுவது அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையில் அதிகரித்து வரும் சர்வதேச அரசியல் பிரச்சனையில், ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க பங்குச் சந்தைகளில், இந்த மூன்று நிறுவனங்களின் பரிவர்த்தனை மிக மிகக் குறைவு. இவை முதன்மையாக ஹாங்காங் பங்குச்சந்தையில்தான் வர்த்தகம் செய்யப்படுகின்றன.

சீன அரசுக்குச் சொந்தமான இந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தான், சீனாவின் தொலைத் தொடர்புத்துறையில் ஒட்டுமொத்த ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன.

சீன ராணுவத்துக்கு சொந்தமான அல்லது சீன ராணுவம் கட்டுப்படுத்தும் சீன நிறுவனங்களில், அமெரிக்கா முதலீடு செய்யக் கூடாது என கடந்த நவம்பர் 2020-ல் உத்தரவைப் பிறப்பித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

சில சீன நிறுவனங்களை பட்டியலிட்டு, அந்நிறுவனங்களுக்கு சீன ராணுவத்துடன் தொடர்பிருப்பதாக, அமெரிக்காவின் பென்டகன் குறிப்பிட்டது. அந்த சீன நிறுவனப் பங்குகளில் அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவின் தேசப் பாதுகாப்பைக் காரணம் காட்டி டிக் டாக், ஹுவாவே, டென்சென்ட் என பல நிறுவனங்களை டிரம்ப் இலக்கு வைத்தார்.

இரு பொருளாதாரங்களுக்கு இடையிலான பிரச்சனை அதிகரித்த நிலையில், சில அமெரிக்க நிறுவனங்களுக்கு தடைவிதித்து தன் பதிலடியைக் கொடுத்தது சீனா.

ஜனவரி 7 – 11 தேதிக்குள், சீனா மொபைல், சீனா டெலிகாம், சீன யுனிகாம் ஹாங்காங் ஆகிய நிறுவனங்களின் பங்குகள், நியூ யார்க் பங்குச் சந்தையில் இருந்து வெளியேற்றப்படும் என நியூ யார்க் பங்குச் சந்தை உறுதி செய்திருக்கிறது.

அன்று அழைப்பு விடுத்த அமெரிக்க பங்குச் சந்தைகள்

நியூயார்க் பங்குச் சந்தை, நாஸ்டாக் பங்குச் சந்தை உள்ளிட்ட அமெரிக்க பங்குச் சந்தைகள் சீன நிறுவனங்களைப் பட்டியலிடும்படி கடத்த தசாப்தத்தில் வேண்டி அழைத்தன.

தற்போது அமெரிக்க பங்குச் சந்தையில் 200-க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் பட்டியலிடபட்டிருக்கின்றன. அதன் சந்தை மதிப்பு சுமாராக 2.2 ட்ரில்லியன் டாலர். (1 ட்ரில்லியன் என்பது 1 லட்சம் கோடி)

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான உறவு அத்தனை சுமூகமாக இல்லாததால், பல சீன நிறுவனங்களும் சீனா மற்றும் ஹாங்காங்கில் பட்டியலிட விரும்புகின்றன.

அலிபாபா மற்றும் ஜே டி.காம் ஆகிய நிறுவனங்கள்கூட நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்த நிறுவனங்கள் ஹாங்காங் சந்தையில் பட்டியலிட்டுக்கொண்டன.

அமெரிக்காவின் தணிக்கை விதிமுறைகளுக்கு உட்படவில்லை என்றால், சீன நிறுவனங்களை அமெரிக்க பங்குச் சந்தைகளிலிருந்து வெளியேற்ற, அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை, கடந்த மாதம் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »