Press "Enter" to skip to content

ஜோர்ஜாவில் கத்தி முனையில் போட்டி: அமெரிக்க செனட் அவையை ஜோ பைடன் கட்சி கைப்பற்றுமா?

புதிய அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனின் ஜனநாயக கட்சி செனட் அவையில் பெரும்பான்மை பெறுமா என்பதை முடிவு செய்யும் முக்கியமான தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையில் கத்தி முனையில் போட்டி நிலவுகிறது.

இரண்டு செனட் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக ஜோர்ஜா மாநிலத்தில் நடந்த தேர்தல் இது.

நவம்பரில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலிலும், இந்த மாநிலத்தில் போட்டி கத்தி முனையில் நிலவியது. இறுதியில், ஜோ பைடன் வெறும் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்த மாநிலத்தின் தேர்தல் சபை வாக்குகளைப் பெற்று தன்னுடைய நிலையை உறுதிப்படுத்திக்கொண்டார்.

புதிய அதிபராக வரும் ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் செய்ய விரும்பும் முக்கிய கொள்கை மாற்றங்களுக்கு செனட் அவையின் ஒப்புதல் தேவை என்ற நிலையில் இந்த தேர்தல் நடக்கிறது.

செனட் அவையில் எண்ணிக்கை எப்படி இருக்கிறது?

தற்போது நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் ஜோ பைடனின் ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. ஆனால், செனட் அவையில் அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சி மெல்லிய பெரும்பான்மை பெற்றுள்ளது.

அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் இருந்தும் தலா 2 செனட் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே செனட்டில் 100 உறுப்பினர்கள் இருப்பார்கள்.

தற்போது ஜோர்ஜா மாநிலத்தின் நடக்கும் இரண்டு செனட் உறுப்பினர்களுக்கான தேர்தலில் இரண்டிலும் ஜனநாயக கட்சி வெல்லுமானால், அவையில் இரண்டு கட்சிகளுக்கும் சமமான எண்ணிக்கையில், அதாவது தலா 50-50 உறுப்பினர்கள் இருப்பார்கள்.

அதற்கு மேல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணை அதிபர் கமலா ஹாரிஸ் வாக்கு ஒன்று சேர்ந்து ஜனநாயக கட்சி அந்த அவையில் பெரும்பான்மை பெற முடியும். ஆனால், குடியரசுக் கட்சி ஒரு இடத்தில் வென்றாலே போதும், அது அவையில் தனக்குள்ள பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொள்ளும்.

முன்பே நடந்த இந்த செனட் இடங்களுக்கான தேர்தலில் எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாததால் இப்போது ரன்-ஆஃப் எனப்படும் இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்கிறது.

இதிலும் வாக்கு எண்ணிக்கையில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கத்தி முனையில் போட்டி நிலவுகிறது.

குடியரசுக் கட்சி சார்பில் கெல்லி லெஃப்லர் மற்றும் டேவிட் பர்து ஆகியோரும், ஜனநாயக கட்சி சார்பில் ரஃபீல் வார்னாக், ஜோன் ஓசோஃப் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

புதன்கிழமை அதிகாலை ஜனநாயக கட்சி வேட்பாளர் வார்னாக் தாம் வெற்றி பெற்றுவிட்டதாக கூறினார். ஆனால், இன்னும் சில வாக்குகள் எண்ணப்படவேண்டிய நிலை இருந்தது.

Kelly Loeffler and David Perdue

ஜோர்ஜாவின் 159 கவுன்டிகளில் போடப்பட்ட வாக்குகளில் 98 சதவீதம் எண்ணப்பட்டுவிட்டன. எனினும், போட்டியில் யார் வெல்வார்கள் என்று கணிப்பது கடினமாகவே இருக்கிறது. போட்டி கத்தி முனையில் நடக்கிறது. லெஃப்லரை விட வார்னாக் மெல்லிய முன்னிலை பெற்றுள்ளார். பெர்து-வும் ஓசோஃபும் கிட்டத்தட்ட சமநிலையில் இருக்கிறார்கள்.

உள்ளூர் நேரப்படி புதன்கிழமை பகலுணவு நேரத்தில் முடிவுகள் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்லாண்டா புறநகரப் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்குகள் எண்ணப்படவேண்டிய நிலையில், அவை ஜனநாயக கட்சிக்கு சாதகமாகச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

line
line

ஆனால், பிபிசியின் அமெரிக்கக் கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ், இந்தப் போட்டியில் எவர் வேண்டுமானாலும் வெல்லலாம் என்ற நிலையே இப்போது வரை நிலவுகிறது என்கிறது.

ஏன் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது?

புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் எடுக்கும் சுற்றுச் சூழல், சுகாதாரம் உள்ளிட்ட கொள்கை முடிவுகளை மட்டுமல்லாமல், அவர் நியமிக்கும் அமைச்சர்களையும், நீதித்துறை நியமனங்களையும் ஏற்கும், நிராகரிக்கும் அதிகாரம் செனட் அவைக்கு உண்டு. அத்தகைய அதிகாரம் மிக்க அவையை யார் கட்டுப்படுத்துவது என்பதற்கான போட்டி என்பதால் இந்த தேர்தல் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

ஜனநாயக கட்சியின் இரண்டு வேட்பாளர்களுமே வெற்றி பெற்றுவிட்டால், 2009ம் ஆண்டு பரக் ஒபாமா வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக, அதிபர் பதவி, நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை, செனட் அவை ஆகிய மூன்றும் ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

வார்னாக் வெற்றி பெற்றால் அவர் பழமைவாத ஜோர்ஜா மாநிலத்தில் வெற்றி பெறும் முதல் கருப்பின செனட்டராக இருப்பார். அவர் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர் மார்டின் லூதர் கிங் ஜூனியர் வளர்ந்த, போதனைகள் செய்த அட்லாண்டா திருச்சபையில் ரெவரண்டாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

33 வயது ஓசோஃப் வெற்றி பெற்றால், அவர் அமெரிக்க செனட் அவையின் இளம் உறுப்பினராக இருப்பார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »