Press "Enter" to skip to content

மலேசிய காட்டில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி இறந்தது எப்படி?

மலேசிய காட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் அவர் உயிரிழந்தது தொடர்பான காரணத்தை, தவறான சாகச பயணத்தின்போது ஏற்பட்ட விபத்து என்று விசாரணை நடத்தியவர் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு லண்டனில் பால்ஹாமை சேர்ந்த 15 வயதான நோரா குவோய்ரின், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஈக்கோ-விடுதியில் இருந்து காணாமல் போய் 9 நாட்கள் கழித்து காட்டுக்குள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது மரணத்துக்கான காரணத்தை அறிய அவரது உடல் பகுதிகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டவர், இதில் குற்றவியல் செயல்பாடுகள் எதுவும் இதில் இல்லை என்று குறிப்பிட்டார்.

அவரது முடிவு, மிகவும் ஏமாற்றம் தருவதாக உள்ளது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இது குறித்த விசாரணை நடந்தபோது, சிறுமி நோரா கடத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் இருந்தது என்று குடும்பத்தினர் நம்புகின்றனர்.

கோலாலம்பூரில் இருந்து தெற்கே 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செரெம்பன் அருகே டுசனில் சோரா ஹவுஸ் என்ற சொகுசு விடுதியில் அவரது குடும்பத்தினர் தங்கினர். அவர்கள் வந்த அடுத்த நாள் நோரா காணாமல் போனார்.

மூளை வளர்ச்சி குறைபாடு நோயுடன் பிறந்த நோராவின் உடல் இரண்டு மைல்களுக்கும் குறைவான தொலைவில் பாமாயில் பண்ணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பகுதி தன்னார்வலர்கள் நோராவின் உடலைக் கண்டுபிடித்துக் கொடுத்தனர்.

மலேசிய காட்டுக்குள் காணாமல் போன சிறுமி

இந்த விவகாரத்தில் வெளிப்படையாக தகவல்களை தெரிவிக்குமாறு விசாரணை நடத்தியவரிடம் நோரா குடும்பத்தின் வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில் தீர்ப்பு வந்த பிறகு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நோரா கடத்தப்பட்டதாக சந்தேகிப்பதற்கு நிறைய காரணங்கள் இருப்பதாகக் கூறினர். அவற்றில் பின்வரும் காரணங்களும் அடங்கும்:

•தொழில்முறையாக நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய்களால் நோராவின் உடல் வாசனையைக் கண்டறிந்து பின்தொடர்ந்து செல்ல முடியவில்லை.

•அவர்கள் தங்கியிருந்த குடிலின் ஜன்னல் திறந்திருந்தது. அதன் வெளியில், அடையாளம் கண்டறியப்படாத விரல்ரேகை தடயங்கள் இருந்தன.

•நோரா தானாகவே ஜன்னல் வழியாக குடிலில் இருந்து வெளியேற “எந்தக் காரணமும் இல்லை”

•நோராவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலும், அதற்கு முந்தைய நாளும் நூற்றுக்கணக்கான பேர் அந்தப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் மனித நடமாட்டத்துக்கான எந்த அறிகுறியையும் அவர்கள் காணவில்லை.

•“செரெம்பன் காடு போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் செல்ல இயலாத நிலை” இருந்தாலும், நோராவின் உடலில் “உடல்ரீதியிலான பெரிய பாதிப்பு இல்லை.”

நோராவை கண்டுபிடிக்க தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்ட 80 ஸ்லைடுகளை தாங்கள் பார்த்ததாகவும், அவற்றில் எதுவுமே “நோராவின் இயல்பு பற்றியோ, அவருடைய அறிவுத்திறன் பற்றியோ” குறிப்பிடவில்லை என்று லூசி பிளாக்மேன் உடைட் மூலமாக வெளியிட்ட அறிக்கையில், அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

“நோராவை பற்றி முழுமையாக அறியாத நிலையில், சில விஷயங்கள் குறித்து தன்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை என்று விசாரணை அதிகாரி பல முறை தெரிவித்துள்ளார்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

“நோரா போதிய முதிர்ச்சி இல்லாதவர், ஜன்னலில் ஏறி வெளியே போய், வேலியிட்ட சொகுசு விடுதியைவிட்டு இரவில், துணிகள் இல்லாமல் செல்லக் கூடியவரா’என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம்” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“நோராவுக்காக மட்டும் அல்லாமல், இந்த உலகில் அதிகபட்ச ஆதரவைக் காட்ட வேண்டிய, அதிக கவனமாக நீதித்துறை கவனிக்க வேண்டிய சிறப்புத் தேவைகள் உள்ள அனைத்துக் குழந்தைகளின் கண்ணியத்துக்காகவும் நாங்கள் போராடுவதாக நம்புகிறோம். இது நோரா போன்றவர்களுக்கான உரிமை. இதை நாங்கள் விட்டுவிட மாட்டோம்” என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தனது மகள் கடத்தப்பட்டதாக அவரது தாயார் மீயப் குவோய்ரின் கருதுகிறார். ஆனால் காணாமல் போனவர்கள்கள் என்ற வகையில் தான் ராவின் விஷயம் இருக்கிறது என்றும், அதில் குற்றவியல் செயல்பாடு எதுவும் இல்லை என்றும் மலேசிய காவல் துறை கூறியுள்ளது. 2020 ஜனவரியில் அந்த வழக்கை அதிகாரிகள் முடித்து வைத்தனர். நோராவின் பெற்றோர்கள் அதை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

நோரா குவோய்ரின்

நோரா தாக்கப்பட்டதற்கோ அடைத்து வைக்கப்பட்டதற்கோ எந்தவிதமான காயங்களும் அவரது உடலில் இல்லை என்று அவரது உடலை இரண்டாவது முறையாக உடற்கூராய்வு செய்த பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.

நோரா காணாமல் போன நாளன்று குற்றவியல் நபர்கள் தொடர்பான செயல்பாடு எதுவும் இல்லை என்று உறுதியாக நம்புவதாக, அன்றைய தினம் காலையில் பணியில் இருந்த விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, குவோய்ரின் குடும்பத்தினருக்கு உள்ள உரிமைகள் பற்றி அவர்களின் சட்ட வல்லுநர்கள் குழு ஆய்வு செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து செரெம்பன் உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு செய்வதற்கான வாய்ப்பும் அதில் அடங்கும்.

நோராவுக்கு என்ன நடந்தது என்பது குறித்த, சாதகமான ஆதாரம் எதுவும் இல்லை என்பதைக் காட்டும் வகையில் வெளிப்படையான தீர்ப்பாக அளிக்க வேண்டும் என்று, அந்தக் குடும்பத்தினரின் வழக்கறிஞர்களில் ஒருவரான லூயிஸ் ஆஸ்மி கூறினார்.

வெளிப்படையான தீர்ப்பு அளித்தால், நோராவின் மரணத்தில் குற்றவியல் சக்திகளின் தொடர்பு இருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது என்பது உறுதியாகும் என்று திருமதி ஆஸ்மி தெரிவித்தார்.

நோரா குறித்து அவரது குடும்பத்தினர் அறிந்துள்ள விஷயங்களின் அடிப்படையில், “நோரா தானாக விரும்பி காட்டுக்குள் நடந்து சென்றிருக்க வாய்ப்பில்லை என்று அவர்கள் இன்னும் நம்புகிறார்கள்” என்று பிபிசியிடம் ஆஸ்மி கூறினார்.

“இன்றைய தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றம் தந்துள்ளது” என்று அவரது பெற்றோரான மியாப் மற்றும் செபஸ்டியன் குவோய்ரின் ஆகியோர் கூறியதாக அவர்களின் வழக்கறிஞர்கள் குழு தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த வழக்கில் “காரண காரியங்கள்” மற்றும் “அனுமானங்களின்” அடிப்படையில் தான் தாம் தீர்ப்பு அளிக்கவில்லை என்றும், தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தான் தீர்ப்பு அளித்துள்ளதாகவும் விசாரணை அதிகாரி மைமூனா அயிட் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி செரெம்பன் உயர்நீதிமன்றத்தை நோராவின் குடும்பத்தினர் நாட வாய்ப்பு உள்ளது.

மலேசியாவில் தீர்ப்பு மாற்றி எழுதப்பட்ட வரலாறு உண்டு.

2019-ல் 18 வயதான மாடலிங் பெண்மணி இவானா ஸ்மித் மரணம் தொடர்பான தீர்ப்புக்கு எதிரான அப்பீலில், கோலாலம்பூர் நீதிமன்றம் முந்தைய தீர்ப்பை ரத்து செய்து, அதை கொலை வழக்காக விசாரித்தது. தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்ய, கால அவகாசம் தேவை என்று நோராவின் குடும்பத்தினர் கூறியதாக அவர்களின் குடும்ப வழக்கறிஞர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »