Press "Enter" to skip to content

அமெரிக்க நாடாளுமன்றக் கலவரம்: நடந்தது என்ன? அதிபர் டொனால்டு டிரம்பை பதவி நீக்க முடியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதவிக் காலம் இன்னும் 12 நாள்களே உள்ள நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயக கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.

புதன்கிழமை அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவுக் கும்பல் கேபிடல் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றக் கட்டடத்தில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்ட நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் அபார வெற்றி பெற்றார்.

ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்துவிட்டதாக ஆதாரம் இன்றி தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார் டொனால்டு டிரம்ப்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் நேரடியாக அதிபருக்கு வாக்களித்து தேர்வு செய்வதில்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ள தேர்தல் சபை உறுப்பினர்களைத்தான் வாக்காளர்கள் தேர்வு செய்கின்றனர். இந்த தேர்தல் சபை உறுப்பினர்களை பெரும்பான்மை எண்ணிக்கையில் பெறும் வேட்பாளர் அதிபர் ஆகிறார்.

நவம்பர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த தேர்தல் சபை உறுப்பினர்கள் டிசம்பர் 14ம் தேதி தங்கள் வாக்குகளை பதிவு செய்து, சீலிட்ட உறையில் அந்த வாக்குகளை அஞ்சலில் அனுப்பி வைத்தனர்.

தேர்தல் சபை முன்பே ஜோ பைடனை அதிபராக தேர்வு செய்திருந்தாலும், அந்த வாக்குச்சீட்டுகளை நாடாளுமன்றக் கூட்டத்தில் எண்ணிப்பார்த்து, ஜோ பைடனின் வெற்றியை நாடாளுமன்றம் உறுதி செய்யவேண்டும்.

இது வழக்கமாக ஒரு சடங்குதான். ஆனால், முக்கியமான ஜனநாயக சடங்கு. இந்த சடங்கு நடந்துகொண்டிருந்தபோதுதான் டிரம்ப் ஆதரவு கும்பல் அமெரிக்க ஜனநாயகத்தின் ஆலயமாக மதிக்கப்படும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து அமளியில் ஈடுபட்டனர்.

பைடன் வெற்றி பெற்றார் என்ற தேர்தல் முடிவை மாற்றவேண்டும் என்றும், பைடன் வெற்றி பெற்றதாக நாடாளுமன்றம் சான்றளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தவே அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் புகுந்தார்கள்.

நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் தப்பி ஓடும் நிலையும், அவைத் தலைவர் அலுவலக இருக்கையில் கலவரக் கும்பலில் ஒருவர் அமர்ந்திருப்பதைக் காட்டும் படமும், நாடாளுமன்ற உரை மேடையை அந்த கும்பலில் ஒருவர் தூக்கிச் செல்வதைக் காட்டும் படமும், நாடாளுமன்றத்தின் பக்கச் சுவர்களில் கலவரக் கும்பல் ஏறும் படமும் அமெரிக்க மக்களுக்கும், அரசியல் வட்டாரத்துக்கும் மட்டுமல்ல, உலகம் எங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

அவரது ஆதரவாளர்களைத் தூண்டும் வகையில் டிரம்ப் பேசியதாகவும், இந்த கலவரத்துக்கு அவரே பொறுப்பு என்றும் அவரது சொந்தக் கட்சியினரே குற்றம்சாட்டினர்.

டிரம்ப் ஆதரவு கும்பல் எதை வலியுறுத்த விரும்பியதோ அதற்கு நேரதிரான விஷயங்களே நடந்தன. பைடன் வெற்றியை ஏற்க முதலில் தயக்கம் காட்டி வந்த குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இந்தக் கலவரத்துக்குப் பிறகு வெளிப்படையாக பைடன் வெற்றியை ஏற்றனர்.

நாடாளுமன்றக் கூட்டம் நடந்தபோது, தேர்தல் முடிவுகளை மாற்றக் கோரி நாடாளுமன்றத்தில் புகுந்த டிரம்ப் ஆதரவு கும்பல்.

இந்த நிலையில்தான் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை, செனட் அவை ஆகிய இரு அவைகளிலும் டிரம்பை பதவி நீக்கவேண்டும் என்று ஜோ பைடன் சார்ந்த ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தினர்.

‘டிரம்ப் உடனடியாக பதவி நீக்கப்படவேண்டும்’ என்று ஜனநாயக கட்சி செனட் உறுப்பினர் சக் ஷூமர் குறிப்பிட்டார். அவர் பதவி நீக்கப்படாவிட்டால், அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவர முடியும் என்று அவைத் தலைவர் நான்சி பெலோசி கூறினார்.

பதவி நீக்கம் செய்யவேண்டுமானால் அதற்கு குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் தேவை. இந்த யோசனைக்கு இதுவரை சில குடியரசுக் கட்சி உறுப்பினர்களே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை நடந்த நாடாளுமன்ற கலவரம், அதைத் தொடர்ந்து எழுந்த கடும் எதிர்வினைகள் ஆகியவற்றுக்குப் பிறகு டிரம்ப் வெளியிட்ட ஒரு காணொளியில், சுமுகமான முறையில் அதிகார மாற்றம் நடப்பதற்கு தாம் உறுதியேற்றிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

புதிய நிர்வாகம் ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்கும் என்று குறிப்பிட்ட அவர், ஆறுதலும், இணக்கமும் ஏற்படவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

புதன்கிழமை நேர்ந்த சட்டம் குலைந்த நிலையையும், குழப்பத்தையும் கண்டு தான் நிலைகுலைந்து போனதாக குறிப்பிட்ட அவர், உணர்ச்சிகள் குளிரவேண்டும், அமைதி திரும்பவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றக் கலவரத்தைத் தொடர்ந்து 12 மணி நேரம் தடை செய்யப்பட்டிருந்த அவரது டிவிட்டர் கணக்கு வியாழக்கிழமை மீண்ட நிலையில் அதில் இந்த விடியோ பகிரப்பட்டது.

கலவரம் நடந்ததற்கு அடுத்த நாள் (ஜனவரி 7ம் தேதி) நாடாளுமன்றக் கட்டடத்தில் ரோந்து செல்லும் காவல் துறையினர்.

இந்தக் கலவரத்தில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர். 68 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவல் துறை மீது விமர்சனம் – பதவி விலகல்கள்

கலவரக்காரர்கள் நாடாளுமன்றத்தில் நுழையாமல் தடுக்கத் தவறிய போலீசாரின் செய்கையும் தற்போது கேள்விக்கும், பரிசீலனைக்கும் உள்ளாகிறது.

பிரதிநிதிகள் சபை பாதுகாப்புக்குப் பொறுப்பான ‘செர்ஜன்ட் அட் ஆர்ம்ஸ்’ பொறுப்பில் இருந்தவர் பதவி விலகியுள்ளார்.

யு.எஸ். கேபிடல் காவல் துறை தலைவர் ஸ்டீவன் சுன்ட் என்பவரும் பதவி விலகுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவைத் தலைவர் நான்சி பெலோசி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரது பதவி விலகல் ஜனவரி 16 முதல் அமலுக்கு வரும்.

செனட் அவையின் பாதுகாப்புக்குப் பொறுப்பானவரும் பதவி நீக்கப்படவேண்டும் என்று செனட்டர் ஷூமர் வலியுறுத்துகிறார்.

இந்தக் கலவரத்தை எதிர்த்து டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து பலர் பதவி விலகியுள்ளனர். அவர்களில் முக்கியமானவர், போக்குவரத்துத் துறை அமைச்சர் இலேய்ன் சௌ. இவர் குடியரசுக் கட்சி செனட்டர் மிட்ச் மெக்கனலின் மனைவியும் ஆவார். பல கீழ்நிலை அதிகாரிகளும் பதவி விலகியுள்ளனர்.

பிளாஸ் லைவஸ் மேட்டர் இயக்கம் இப்படி செய்திருந்தால்?

கருப்பர் வாழ்வுரிமை இயக்கமான “பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்தினர் நேற்று இதே போன்ற செயலைச் செய்திருந்தால், கேபிடல் கட்டடத்தை தாக்கிய பொறுக்கிகளை நடத்தியதைப் போல அல்லாமல் வேறுவிதமாக அவர்கள் நடத்தப்பட்டிருக்கமாட்டார்கள் என்று யாரும் என்னிடம் கூற முடியாது” புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் கூறியுள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத்தில் புகுந்து டிரம்ப் ஆதரவு கும்பல் செய்ததைப் போல ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ இயக்கத்தினர் செய்திருந்தால், காவல் துறை அவர்களை வேறுவிதமாக கையாண்டிருக்கும் என்பதுதான் ஜோ பைடன் கூறுவதன் சாரம்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன சொல்கிறார்கள்?

மேலும் மேலும் அதிகமான எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிரம்ப் பதவி நீக்கப்படவேண்டும் என்று கோருகின்றனர். ஆனால், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியினர். குறைந்த எண்ணிக்கையில் குடியரசுக் கட்சியினரும் இந்தக் கோரிக்கையை வைக்கின்றனர்.

“இந்த அதிபர் மேலும் ஒரு நாள்கூட பதவி வகிக்கக்கூடாது,” என்கிறார் ஜனநாயக கட்சி செனட்டர் ஷூமர். தற்போது செனட்டில் பெரும்பான்மை பெற்றிருக்கிற ஜனநாயக கட்சிக் குழுவுக்கு அடுத்த மாதம் தொடங்கவுள்ள புதிய கூட்டத்தில் இருந்து இவர்தான் தலைமை வகிக்கப் போகிறார்.

டிரம்பின் அமைச்சரவையே அரசமைப்புச் சட்டத்தின் 25-வது திருத்தத்தைப் பயன்படுத்தி அவரைப் பதவி நீக்கவேண்டும் என்று அவர் கோருகிறார். உடல் சார்ந்த அல்லது மனம் சார்ந்த நோய் காரணமாக அதிபர் தன் கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும்போது துணை அதிபர் அந்தப் பொறுப்புக்கு வர வழி செய்கிறது இந்த திருத்தம் .

2px presentational grey line
2px presentational grey line

இப்படி டிரம்பின் அமைச்சரவையே அவரைப் பதவி நீக்கவேண்டுமானால், துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் 8 அமைச்சரவை உறுப்பினர்கள் ஆகியோர் டிரம்புடன் முரண்பட்டு இந்த சட்டப் பிரிவை பயன்படுத்த ஒப்புக்கொள்ளவேண்டும். ஆனால், இப்படி நடப்பதற்கு அவர்கள் யாரும் ஒப்புக் கொள்வதாகத் தோன்றவில்லை.

மிகப் பெரிய அவசர நிலை

“டிரம்ப் மிக ஆபத்தான நபர்” என்று குறிப்பிட்ட அவைத்தலைவர் நான்சி பெலோசி “இது மிகப் பெரிய அவசர நிலை” என்று கூறியுள்ளார்.

டிரம்பின் அமைச்சரவை சகாக்கள் 25வது திருத்தத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், கண்டனத் தீர்மானத்தின் கீழ் டிரம்பை தண்டிக்கவேண்டுமானால், அதற்கு செனட்டில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். அதற்கு ஜனநாயக கட்சியினர் குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றாகவேண்டும். தேவையான எண்ணிக்கையில் அப்படி குடியரசுக் கட்சி செனட்டர்களின் ஆதரவைப் பெறமுடியும் என்று இப்போது தோன்றவில்லை.

ஆதம் கின்சிங்கர் என்பவர்தான் 25வது சட்டத் திருத்தத்தை பயன்படுத்தி டிரம்ப் பதவி நீக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்த முதல் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்

குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களான, மேரிலாந்து, வெர்மோன்ட் மாநில ஆளுநர்களும் டிரம்ப் பதவி நீக்கப்படவேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். டிரம்பின் செயல்கள் இந்த திருத்தச் சட்டத்தை பயன்படுத்தப் பொருத்தமானவை என்று அவை நீதிக் குழுவில் ஜனநாயக கட்சியினர் கூறியுள்ளனர்.

2px presentational grey line
2px presentational grey line

ஆனால், செனட் மற்றும் பிரதிநிதிகள் அவை ஆகியவை ஜனவரி 20ம் தேதி பைடன் பதவி ஏற்கும் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டுமானால், இந்த இரு அவைகளையும் மீண்டும் கூட்ட வேண்டும்.

கேபிடல் கட்டடத்தில் புதன்கிழமை நடந்த கலவரத்தில் ஒருவரைக் கைது செய்யும் காவல் துறை.

சிறப்புத் தூதர் மிக் முல்வானே, ஒரு மூத்த தேசியப் பாதுகாப்பு அதிகாரி, டிரம்பின் மனைவி மெலனியாவின் (முதல் சீமாட்டி) பத்திரிகை தொடர்பு செயலாளர் ஆகியோர் நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து பதவி விலகியவர்களில் சிலர். டிரம்ப் பதவியில் தொடரத் தகுதியற்றவர் என்று டிவிட்டரில் கூறிய வெளியுறவுத் துறை ஆலோசகர் ஒருவர் பதவி நீக்கப்பட்டார்.

சமூக ஊடகத்திலும் டிரம்ப் தனது கருத்துகளை வெளியிடத் தடைகள் உருவாகியுள்ளன. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் இரண்டு தளங்களும் டிரம்ப் பதவிக் காலம் முடியும் வரையில் அவரது கணக்குகளை முடக்கிவைத்துள்ளன. இது நிரந்தரத் தடையாகவும் வாய்ப்புள்ளது. டிவிட்டர் அவரது கணக்கை 12 மணி நேரம் முடக்கி வைத்து பிறகு விடுவித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »