Press "Enter" to skip to content

737 மேக்ஸ் சதி வழக்கு: போயிங் நிறுவனத்துக்கு 250 கோடி டாலர் அபராதம்

ஓராண்டுக்கு முன்பு அடுத்தடுத்த விபத்துகளை சந்தித்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்குவது நிறுத்திவைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

அந்த 737 மேக்ஸ் ரக விமானத்தின் வடிவமைப்பு தொடர்பான தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் மறைத்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அமெரிக்க அரசுக்கு 250 கோடி டாலர் குற்றவியல் கட்டணமாக செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது போயிங் நிறுவனம்.

இந்த நிறுவனம், “வெளிப்படைத்தன்மையைவிட லாபத்தை” முக்கியமாக பார்த்தது என்று அமெரிக்க நீதித்துறை கூறியுள்ளது.

இந்த ரக விமானங்களின் மூலம், இரண்டு மோசமான விபத்துகள் இதுவரை நிகழ்ந்துள்ளன. போயிங் அளிக்கவுள்ள தொகையில், சுமார் 500 மில்லியன் டாலர் பணம், விமான விபத்தில் இறந்த 346 பேரின் குடும்பத்தினரை போய் சேரும்.

போயிங் நிறுவனத்தின் தலைமை இயக்குநரான டேவிட் கல்ஹோன், “இத்தகைய தீர்மானத்திற்கு வந்தது எங்களின் நிறுவனத்திற்கு ஒரு நல்ல விஷயமாகவே நான் நம்புகிறேன். எங்கள் மீது வைத்திருந்த எதிர்பார்ப்பு மற்றும் நல்லெண்ணத்திலிருந்து நாங்கள் எவ்வளவு குறைவாக செயல்பட்டுள்ளோம் என்பது எங்களால் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்பதை காட்ட இதை ஒரு சரியான வழியாகப் பார்க்கிறேன்.” என்றார்.

போயிங் 737 மேக்ஸ்

”இந்த தீர்மானத்தின்மூலம், அதிகாரிகளிடம் நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. நம்மிடம் அதிகாரிகள் எதிர்பார்க்கும் இத்தகைய தன்மையிலிருந்து விலகினால், எவ்வளவு பின்விளைவுகளை நாம் சந்திக்கவேண்டி இருக்கும் என்பதையும் இது விளக்குகிறது” என்று அவர் தெரிவித்தார்.

’மோசடி மற்றும் ஏமாற்று நடவடிக்கை’

இந்த விமானத்தில் உள்ள MCAS என்று கூறப்படும் தானியங்கி முறையில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து நீதித்துறை அதிகாரிகளிடம் கூறாமல் போயிங் அதிகாரிகாள் மறைத்துவிட்டனர்.

2018இல் இந்தோனீசியாவில் நடந்த விபத்து மற்றும் 2019இல் எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில், இந்த தானியங்கி முறைக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.

அவ்வாறு தகவல்கள் பகிரப்படாததால், விமான ஓட்டிகளின் பயிற்சி அட்டையில், இந்த குறிப்பிட்ட விமான முறை குறித்த தகவல்கள் குறைவாக இருந்தன. இதனால், விமான ஓட்டி அளித்த கட்டளைகளை மீறிய விமானங்கள், தவறான தரவுகளின் அடிப்படையில் செயல்பட்டதால், விமானம் மேலே எழும்பிய உடனேயே தலைகீழாக கீழே விழவேண்டிய நிலை ஏற்பட்டது.

” லயன் ஏர் விமானம் மற்றும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை சந்தித்த விபத்துகள் மூலமாக, உலகின் முக்கிய விமான நிறுவனங்களில் ஒன்றான இதன் பணியாளர்கள், மோசடி மற்றும் ஏமாற்று வழிகளில் ஈடுபட்டது வெளியானது.” என்ற குறிப்பிட்டார் உதவி வழக்குரைஞரான ஜெனரல் டேவிட் பர்ன்ஸ்.

“போயிங் ஊழியர்கள் வெளிப்படைத்தன்மைக்குப் பதிலாக லாபத்தை மனதில் வைத்து, சில தகவல்களை அரசின் விமான நிர்வாகத்திடமிருந்து மறைத்தனர். அவர்கள் மோசடியை ஊக்குவிக்கும் வகையில் நடந்துகொண்டனர்.”

இப்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, போயிங் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தில் உள்ளபடி நடந்துகொண்டால், அவர்கள் அமெரிக்க அரசை மோசடி செய்ததாக போடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்படும்.

இந்த தொகையில், 177 கோடி டாலர் பணம், விமான விபத்து ஏற்பட்ட போது, பயணிகளுக்கு இயக்கப்படாமல் தரையிறக்கப்பட்ட விமானங்களின் பயணிகளுக்கு அளிக்கப்படுகின்றன. இதில் ஒரு பகுதி தொகை ஏற்கனவே அளிக்கப்பட்டுவிட்டது.

நிறுவனம் 243.6 மில்லியன் டாலர் அபராதமாக அளிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால், எதியோப்பியன் ஏர்லைன் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தின் சார்பில் வாதிடும் வழக்கறிஞர்கள், போயிங் நிறுவனத்திற்கு எதிராக அவர்கள் போட்டுள்ள உரிமையியல் வழக்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வராது என்று கூறியுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள், போயிங் செய்த தவறுகளில் ஒரு சிறு துளி மட்டுமே என்றும், குற்றவியல் வழக்குகளிலிருந்து தப்பிக்க பில்லியன் கணக்கில் பணம் அளிக்கும் இதே நிறுவனம்தான், நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் கடுமையாக நடந்துகொள்கிறது என்கிறனர் வழக்கறிஞர்கள்.

மேலும் பேசிய அவர்கள், மேக்ஸ் 737 விமானத்தில் உள்ள அனைத்து குறைபாடுகள் குறித்து விளக்கி, வெளிப்படையான ஒரு பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே, அந்த ரக விமானம் மீண்டும் செயல்பாட்டிற்கு விடப்பட்டிருக்க வேண்டும்.” என்றும் அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

மேக்ஸ் ரக விமானம் மீது உள்ள கேள்விகளுக்கு பதிலளித்து வருவதாக போயிங் தெரிவித்துள்ளது. மேக்ஸ் ரக விமானங்கள் கடந்த டிசம்பர் முதல் மீண்டும் அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

விசாரணை இதோடு முடியாது

தியோ லெஜ்ஜிட் – வணிக செய்தியாளர்

போயிங் 737 மேக்ஸ்-8

அமெரிக்க விமான சேவையின் பாதுகாப்பு ஆய்வாளருக்கு, சரியான பதிகளை அளிக்காமல், சில விஷயங்களை மறைத்தனர் என்பதே, போயிங் நிறுவன ஊழியர்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு.

இத்தகைய சூழலில் பார்த்தால், இந்நிறுவனம் மிகவும் லேசான தண்டனையோடு தப்பியுள்ளது என்பதை உங்களால் கூற முடியும்.

விசாரணையை தவிர்த்துக்கொண்ட இந்த நிறுவனம் செலுத்தும் தொகையில் பெரும் பகுதி விமான நிறுவனங்களுக்கே செல்கிறது. இந்த தொகையில் கணிசமான பகுதியை அது எப்படி இருந்தாலும் செலுத்தியிருக்கவேண்டியதாகவே இருந்திருக்கும்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வழக்குரைஞர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட விமர்சகர்கள் எழுப்பும் கேள்விகள் அப்படியே இருக்கின்றன. அவை இன்னும் விடை கேட்டுத் துளைத்துக்கொண்டே இருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »