Press "Enter" to skip to content

உலகின் முதல் பணக்காரர் ஆனார் ஈலோன் மஸ்க் – சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

உலகின் முதலாவது மிகப்பெரிய பணக்காரர் ஆகியிருக்கிறார் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான ஈலோன் மஸ்க். அவர் நடத்தி வரும் டெஸ்லா நிறுவன பங்குகள் வியாழக்கிழமை உயர்ந்ததையடுத்து, அவர் இதுவரை முதல் பணக்காரராக இருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத்தள்ளி விட்டு முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார் ஈலோன் மஸ்க்.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் உலகின் முதலாவது பணக்காரராக ஜெஃப் பெசோஸ் நீடித்து வருகிறார். எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முன்னோடி நிறுவனமாக ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் விளங்கி வருகிறது. அதன் சந்தை பங்கு மதிப்பு 700 பில்லியன் டாலர்களாக புதன்கிழமை நிலைபெற்றன. இதன் பிறகு அந்த பங்குகளின் விலை வியாழக்கிழமை அதிகரித்ததையடுத்து, பணக்காரர் வரிசையில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் ஈலோன் மஸ்க்.

இதன் மூலம் உலகின் தேர் தயாரிப்பு நிறுவனங்களில் ஜாம்பவான்களாக கருதப்படும் டொயோட்டா, ஃபோக்ஸ்வேகன், ஹுண்டாய், ஜிஎம், ஃபோர்ட் ஆகிய நிறுவனங்களின் மதிப்பை விட டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு அதிகமானதாக உள்ளது.

எந்த சாதனையையும் அதிகம் அலட்டிக் கொள்ளாதவராக காட்டிக்கொள்பவர் ஈலோன் மஸ்க். அதே பாணியைதான் உலகின் முதல் பணக்காரர் ஆன போதும் அவர் கடைப்பிடித்தார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், எவ்வளவு விந்தையானது, சரி எல்லோரும் வேலையைத்தொடருவோம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு தொடர்பான பதிவை அவர் முகப்பு பக்கத்தின் முதன்மையான ட்வீட் ஆக கொண்டிருக்கிறார்.

அதில், “எனது பணத்தில் பாதி, உலகின் பிரச்னைகளுக்காக செலவிட வேண்டியவை. மீதி, செவ்வாய் கிரக நகரில் சுயசார்பு நகரை உருவாக்கி எல்லா உயிரினங்களும் அதில் வாழக்கூடிய சூழலை உருவாக்குவது. ஒருவேளை பூமி எரிகல்லால் தாக்கப்பட்டாலோ மூன்றாவது உலக போர் மூண்டு அனைவரும் தங்களைத் தாங்களாகவே அழித்துக் கொண்டாலோ அது தேவைப்படும்” என்று ஈலோன் மஸ்க் கூறியுள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலக பணக்காரர்களில் முதன்மையானவராகியிருக்கும் ஈலோன் மஸ்க்கின் தொழில் வாய்ப்புகள், அமெரிக்க அரசியலுடனும் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. அங்கு எதிர்வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கவுள்ள ஜோ பைடனின் ஜனநாயக கட்சி தலைமையிலான அணி, பசுமை சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் என அறிவித்திருக்கிறது.

“அந்த வகையில், டெஸ்லா நிறுவனம் அதன் முத்தாய்ப்பு திட்டமாக மின்கலவடுக்கு (பேட்டரி)யில் இயங்கும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்களின் தயாரிப்பில் முன்னோடியாக உள்ளதால், அதன் தயாரிப்புகள் எதிர்வரும் அமெரிக்க புதிய அரசின் வரிச்சலுகைகளை பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்கிறார் டேனியல் ஐவ்ஸ் என்ற வெட்புஷ் பங்குச்சந்தை நிறுவன ஆய்வாளர்.

கடந்த ஆண்டு அமேசான் நிறுவனர் பெசோஸும் தனது நிறுவனத்தின் வளர்ச்சியை அபரிதமாக கண்டார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் கணினிமய சேவை மற்றும் குளெளட் கம்ப்யூட்டிங் சேவைகள் மூலமாக இவரது நிறுவனம் லாபம் கொழித்தது. எனினும், தனது தொழில்முறை பங்கில் நான்கு சதவீதத்தை தனது முன்னாள் மனைவி மெக்கென்சீ ஸ்காட்டுக்கு அவர்களின் பிரிவின் அடையாளமாக வழங்கினார் பெசோஸ். அதுவே அவரது சொத்து மதிப்பு குறையவும், அவர் வகித்து வந்த முதல் பணக்காரர் வரிசை, ஈலோன் மஸ்குக்கு செல்லவும் காரணமாகியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »